தமிழர் மரபுடைமைகளின் சான்றுகளை பேணி பாதுகாத்து வருகிறது தமிழகத்தில் இயங்கிவரும் ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம். தெற்காசிய அளவில் நூலகம், ஆவணக் காப்பகம், அருங்காட்சியகம், ஆராய்ச்சி மையங்கள் ஆகியவற்றை உள்ளடக்கிய ஒரு தனித்துவமான நிறுவனமாக இந்நூலகம் செயல்பட்டு வருகிறது.
1994ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்நூலகம், 5,00,000 ஆவணச் சேகரிப்புகளை கொண்டுள்ளது. சென்னையில் உள்ள தரமணியில் தற்போது இயங்கிவரும் இந்த நூலகத்தின் மெய்நிகர் சுற்றுலா தேசிய நூலக வாரியத்தின் ஏற்பாட்டில் அண்மையில் நடைபெற்றது.
இந்நிகழ்வு ஆகஸ்ட் மாதம் 26ஆம் தேதி சனிக்கிழமை மதியம் 2.30 மணி முதல் மாலை 4 மணி வரை மெய்நிகர்வழி சூம் தளத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத்தின் இயக்குநர் திரு ஜி சுந்தர் பங்குகொண்டு நூலகத்தின் வரலாற்றையும் தற்போதைய செயல்பாடுகளையும் விளக்கினார்.
தமிழகத்தின் கோட்டையூர் என்னும் ஊரில் வாழ்ந்து வந்த திரு ரோஜா முத்தையா புத்தகங்கள் மீது தீராத பற்றுடையவர். தன் வாழ்நாளின் பெரும் பகுதியில் புத்தகங்களை சேகரிப்பதில் அதீத முனைப்பு காட்டினார். யாழ்ப்பாணத்திலுள்ள நூலகம் எரிந்தபோது அதேபோல் ஓர் நல்ல நூலகத்தை உருவாக்க வேண்டும் என்று உறுதிகொண்டார்.
ஒரு வீடு முழுவதும் ஏறத்தாழ 50,000 நூல்களையும் 50,000 பிற ஆவணங்களையும் சேகரித்து வைத்திருந்தார். தன்னுடைய இறுதி காலத்தில் இச்சேகரிப்பை அரசுடைமையாக்க இவர் மேற்கொண்ட பல்வேறு முயற்சிகள் தோல்வியில் முடிந்தன. பின்னர் 1992ஆம் ஆண்டு இவர் காலமானார்.
இவர் மறைவிற்கு பின்னர் 1994ஆம் ஆண்டு சிகாகோ பல்கலைக்கழகத்தின் உதவியுடன் இந்த நூலகம் சென்னையில் முகப்பேர் பகுதியில் வாடகை கட்டடத்தில் தொடங்கப்பட்டது. புத்தகங்களின் தகவல்களை பத்திரப்படுத்த நுண்படம் எடுக்கும் தொழில்நுட்ப முறை, நூலகஇருப்பு புத்தகங்களின் அட்டவணை தயாரித்தல் போன்ற பல்வேறு பணிகளை இந்த நூலகம் மேற்கொண்டது. ஆரம்பத்தில் ஆய்வாளர்களும் எழுத்தாளர்களும் மட்டுமே இந்நூலகத்தை பயன்படுத்தி வந்தனர்.
2005ஆம் ஆண்டு தரமணிக்கு இடம்மாற்றப்பட்ட பின்னர் இந்த நூலகம் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அனுமதிக்கப்பட்டது. அதன் பின் மாதம் ஒரு முறை ஆய்வாளர்களை கொண்டு கூட்டங்கள் தொடர்ந்து கலந்துரையாடல் கூட்டங்கள் நடைபெற்று வருகின்றன. மேலும் இந்நூலகத்தில் தமிழர் பாரம்பரிய சான்றுகளை திரட்ட ‘சிந்துவெளி ஆய்வு மையம்’ செயல்பட்டு வருகிறது. இத்துடன் அச்சு செயல்பாடுகளை வரலாற்றில் பாதிக்கும் நோக்கில் ‘அச்சுப்பண்பாட்டு அருங்காட்சியகம்’ ஒன்றும் இந்நூலகத்தில் உள்ளது.
புத்தகங்கள் சார்ந்த அனைத்து செயல்பாடுகளையும் மின்னிலக்கமயமாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறோம் என்றும் விரைவில் இந்த நூலகத்தை மின்னிலக்க நூலகமாக மாற்றும் செயல்பாடுகளில் தொடர்ந்து முனைந்து வருகிறோம் என்றும் கூறினார் காப்பக நிபுணரான திரு சுந்தர்.
தொடர்புடைய செய்திகள்
அச்சிடப்பட்ட பழைய நூல்களை பாதுகாக்க ‘பாதுகாப்பு ஆய்வகம்’ ஒன்றும் இந்த நூலகத்தில் இயங்கிவருகிறது. இதன்மூலம் புத்தகங்களின் தாள்களை உயர்தர இரசாயன மற்றும் திசுக்களின் உதவியுடன் தன்மை மாறாமல் பாதுகாக்க முடிகிறது. ஏறத்தாழ அடுத்த 200 ஆண்டுகள் வரை புத்தக தாள்கள் தரம் குறையாமல் இருக்கும் என்றும் திரு சுந்தர் கூறினார்.
இந்நிகழ்வில் பங்குகொண்ட சிங்கப்பூர்த் தமிழ்ப் பண்பாட்டு மையத்தின் தலைவர் திரு அருண் மகிழ்நன், நூலக செயல்பாடுகளில் முன்னிலை வகித்து வரும் இந்நூலகத்தின் பணிகளை பாராட்டியதோடு, சிங்கப்பூர்-தமிழக நூலகங்களுக்கு இடையிலான உறவு வலுப்படவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
மேலும் 1965ஆம் ஆண்டு முதல் 2015ஆம் ஆண்டு வரையிலான பதிப்பிக்கப்பட்ட இலக்கிய நூல்களின் மின்னிலக்க அட்டவணையும் பல மடங்கு மின்னிலக்க நூல்களும் சிங்கப்பூரில் உருவாகி வருகின்றன என்றும் இவர் தெரிவித்தார்.
எதிர்காலத்தில் புதிய கட்டடத்திற்கு மாறவிருக்கும் இந்த நூலகத்தின் அனைத்து முக்கிய அம்சங்களையும் சூம் தளத்தில் மெய்நிகர் சுற்றுலாவாக தன் குழுவுடன் இணைந்து சுற்றிக்காட்டினார் திரு சுந்தர். இந்த மெய்நிகர் நிகழ்வினை உள்ளூர் கலைஞரான திரு வடிவழகன் வழிநடத்தினார்.