மகளுக்கு முன்மாதிரியாகத் திகழும் அழகுராணி

3 mins read
8bcd7ec3-85b5-49a6-a73d-3e7f5deb0f02
அழகுராணி போட்டியில் ஜாய்செலின். - படம்: ஜாய்செலின் ஷாமலா
multi-img1 of 3

‘மாடலிங்’ துறையில் ஆர்வம் இருந்தபோதும் படிப்பில் ஜாய்செலின் ஷாமலா கவனம் செலுத்த வேண்டியிருந்ததால் மாடலிங் உலகத்துக்குள் அடி எடுத்து வைப்பதை அவர் தள்ளிப்போட்டார்.

மாடலிங் செய்யும் அழகிகள் மெலிந்த உடல் கட்டுடன் தோற்றமளிப்பது ஓர் எதிர்பார்ப்பாக இருப்பதால், தான் அவ்வாறு இல்லையே என்ற மனக்குறையுடன் ஜாய்செலின் இருந்தார்.

29 வயதாகும் ஜாய்செலின் விற்பனை சந்தைப்படுத்தல் துறையில் பணியாற்றி வருகிறார். 27 வயதில் இவருக்குத் திருமணமாகி, சிறிது காலத்திலேயே அந்தப் பந்தத்தில் பிளவைச் சந்தித்தார்.

இரண்டு வயது மகளான சோனாக்‌ஷி பொலினாவுக்கு ஒற்றைப் பெற்றோராக இருக்கும் ஜாய்செலின், தன் தாய்மைப் பயணத்தில் பல சவால்களைக் கடக்க வேண்டியுள்ளது. இருப்பினும் மாடலிங் செய்யும் கனவு அவருக்கு அண்மையில் நனவானது. கடந்த மாதம் நடைபெற்ற ‘மிஸஸ் சிங்கப்பூர் வோர்ல்டு 2023’ அழகுராணிப் போட்டியில் கலந்துகொண்ட அவர், ‘மிகவும் தன்னம்பிக்கையுடைய அழகுராணி’ (confidence queen) எனும் பட்டத்தை வென்றார்.

சமூக ஊடகத் தளத்தில் திருமணமான பெண்களுக்காக நடத்தப்படும் இந்த அழகுராணிப் போட்டி பற்றி கேள்விப்பட்ட ஜாய்செலின், அதில் கலந்துகொள்ள ஆர்வமாக இருந்தார். ஒருவரின் உடல் எடையையும் தோற்றத்தையும் அடிப்படையாகக் கொண்டிராத அந்தப் போட்டி, அவரைக் கவர்ந்தது.

போட்டியில் கலந்துகொண்ட 14 போட்டியாளர்களில் ஒரே சிங்கப்பூர் இந்தியர் எனும் பெருமையுடன், ஜாய்செலின் ஆக இளையவராகவும் ஆகப் பெரிய உருவம்கொண்டவராகவும் இருந்தார்.

ஒற்றைப் பெற்றோராக இருந்துகொண்டு இதுபோன்ற அழகு ராணி போட்டிகளில் கலந்துகொள்வதால் சமுதாயத்திடமிருந்து கிடைக்கும் விமர்சனம் அதிகம் என்ற போதிலும் பெண்கள் தங்கள் வாழ்வில் எத்தகைய சவாலை எதிர்நோக்கினாலும் தன்னம்பிக்கையோடு நடைபோட வேண்டும் என்பதை நிரூபித்துக் காட்ட ஜாய்செலின் அம்முடிவை எடுத்தார்.

குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு அவருக்குப் பக்கபலமாக இருந்தது. தங்கை, தம்பியுடைய இவர், “என்ன நடந்தாலும் எனது இரு சகோதரர்களின் ஆதரவு மட்டும் குறையாமல் இருந்தது,” என்று புன்னகை பூத்தவாறு கூறினார்.

அழகு ராணிப் போட்டிகளில் ஒருவரின் உடல் எடையை வைத்து அவரது ஆற்றலை மதிப்பிடக்கூடாது எனும் கருத்தைப் போட்டியின் நடுவர்களிடையே ஜாய்செலின் ஆழமாக வலியுறுத்தினார்.

போட்டியில் தாம் கண்ட வெற்றியை ஜாய்செலின் தம் மகளுக்கு அர்ப்பணிப்பதாகக் கூறினார். இல்லப் பணியாளரின் உதவியோடு மகளைக் கவனித்துக்கொள்ளும் இவர், பணிச்சுமை காரணமாக வாரயிறுதிகளில் மட்டுமே மகளோடு அதிக நேரத்தைச் செலவிடுவதாகக் குறிப்பிட்டார்.

சிறு வயதில் பெற்றோர் தமக்கும் தம் சகோதரர்களுக்கும் ஓர் அழகான வாழ்க்கையை அமைத்துத் தந்தது போல தாமும் சோனாக்‌ஷிக்கு அவ்வாறு செய்ய வேண்டும் என்ற இலக்கை நோக்கிப் பயணிக்கிறார் ஜாய்செலின். கணவரை விட்டுப் பிரிந்தபோது இன்னல்கள் பல அவர் வாழ்வைப் புரட்டிப் போட்டன.

சோகமாக இருக்கும்போதெல்லாம் நேர்மறையான எண்ணங்களை நாடக் கற்றுக்கொண்ட ஜாய்செலின், பெண்கள் திருமணமான பிறகு அவர்கள் அடைய விரும்பும் லட்சியங்களுக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்குப் பதிலாக, சமுதாயத்திற்கு அஞ்சாமல் தன்னலத்தைப் போற்ற வேண்டும் என்று பரிந்துரைத்தார்.

மகள் சோனாக்‌ஷி தம்மைப் பார்க்கும்போது தாயார் மனதளவில் மிக வலிமையானவர், தன்னம்பிக்கையுடைய ஒரு சிங்கப்பெண் என்று நினைக்க வேண்டும் என்றார் ஜாய்செலின். அழகுச் சேவைத் துறையில் பட்டயம் பெற்ற ஜாய்செலினுக்குப் பட்டம் பெறாத வருத்தம் உள்ளது. எதிர்காலத்தில் ஜாய்செலின் இளநிலைப் பட்டம் பயிலவும் 35 வயதை அடையும் முன் அழகுச் சேவைத் துறையில் ஒரு தொழில்முனைவர் ஆகவும் வேட்கை கொண்டுள்ளார்.

குறிப்புச் சொற்கள்