சிங்கப்பூர் சட்டக் கழகத்தின் வருடாந்திர விரிவுரை நிகழ்ச்சியில் இந்தியாவின் உச்ச நீதிமன்றத்தின் நீதிபதி டி ஒய் சந்திரசூட் உரையாற்றினார். சிங்கப்பூர் உச்ச நீதிமன்றத்தில் செப்டம்பர் 8ஆம் தேதி நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் சட்டத்துறையைச் சேர்ந்த சுமார் 350 பேர் கலந்துகொண்டனர்.
28வது முறையாக நடந்தேறும் இந்த விரிவுரை நிகழ்ச்சியின்போது இந்தியாவுக்கும் சிங்கப்பூருக்கும் இடையே இணக்கக்குறிப்பு ஒன்றும் கையெழுத்தானது. சிங்கப்பூரைப் பிரதிநிதித்துத் தலைமை நீதிபதி சுந்தரேஷ் மேனன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்.
நாட்டை வடிவமைக்கும் வகையில் இந்திய அரசமைப்புச் சட்டத்தின் இயக்கத்தைக் குறித்துப் பேசினார். ஆறு முக்கிய இனக்குழுக்கள், 52 பழங்குடி இனங்கள், ஆறு முக்கியச் சமயங்கள், 18 பெருமொழிகள், 1,600 சிறுமொழிகள், 6,400 சாதிகள் எனப் பல்வேறு நிலைகளில் பன்முகத்தன்மை கொண்டுள்ள இந்தியாவின் மக்களுக்கு நீதியை உறுதிசெய்ய வேண்டிய மாபெரும் பொறுப்பைக் கொண்டிருந்தனர் இந்தியாவின் அரசமைப்புச் சட்டத்தை வகுத்தவர்கள் எனத் திரு சந்திரசூட் குறிப்பிட்டார்.
இந்தியாவின் சுதந்திரத்திற்குப் பிறகு இன்றும் தொடர்ந்து அதிகரித்துவரும் கூட்டாட்சியமைப்பு சித்தாந்தத்திற்கு இடையிலும் அந்நாட்டின் இறையாண்மையையும் எல்லை வரையறைகளையும் அரசமைப்புச் சட்டம் எப்படி பாதுகாக்கிறது என்பது பற்றியும் அவர் பேசினார். நாடாளுமன்ற இறையாண்மைக்கும் அரசமைப்புச் சட்டத்திற்கும் இடையே அவ்வப்போது உண்டாகும் பதற்றங்கள் குறித்தும் திரு சந்திரசூட் விளக்கினார். தனிப்பட்ட நபர்களின் வாழ்க்கையிலும் சமூகத் சீர்திருத்தங்களிலும் இந்திய அரசமைப்புச் சட்டம் ஏற்படுத்திய மாற்றங்கள் குறித்தும் அவர் பேசினார்.
அரசமைப்புச் சட்ட நிர்வாகம், பொதுச்சட்டம் ஆகியவற்றின் மீது ஆர்வம் உள்ளோரின் சிந்தனையைத் தூண்டும் விதமாக இந்த விரிவுரை இருக்கும் என அதன் தொடக்க உரையில் திரு மேனன் குறிப்பிட்டார். அரசாங்கச் செயல்கள் சட்டப்பூர்வமாக உள்ளனவா எனக் கேட்டும் அதிகாரத்தை நீதிமன்றங்களுக்கு வழங்குவது அரசமைப்புச் சட்டத்திற்கு உச்சபட்ச மரியாதையைத் தரும் கட்டமைப்பு என்றும் அவர் கூறினார்.
நாட்டின் அரசமைப்புச் சட்டத்தில் நிரந்தரக் கூறுகளும் காலத்திற்கு ஏற்பத் தகவமைத்துக்கொள்ளும் கூறுகளும் இருக்கவேண்டும் என்பதை இந்திய அரசமைப்புச் சட்டத்தைப் பற்றி கேட்டதன்மூலம் புரிந்துகொண்டதாக ஐஆர்பி சட்ட நிறுவனத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் மீனாட்சி அசோகன் தமிழ் முரசிடம் தெரிவித்தார்.
சமுதாய காரணங்களால் இந்தியாவும் சிங்கப்பூரும் சென்ற பாதை வெவ்வேறாக இருந்தாலும் காலனித்துவப் பின்புலனைக் கொண்டுள்ள அவ்விரு நாடுகளுக்கும் இடையே சட்டத்துறை ரீதியான ஒற்றுமைகளைப் பற்றி நினைக்க இந்த உரை வாய்ப்பளித்ததாக குமாரி மீனாட்சி கூறினார்.
இக்கருத்தை ஆமோதித்த வழக்கறிஞர் சிவா சிவலிங்கம், இந்தியாவிலுள்ள மிகவும் மாறுபட்ட மொழி, சமய பன்முகத்தன்மை கொண்ட சமுதாயத்தை நிர்வகிக்கும் இந்திய அரசமைப்புச் சட்டத்தின் நுட்பங்களை இந்த உரையின் வழி அறிந்துகொண்டது சுவையான ஓர் அனுபவம் என்றார்.