உலகியல் பார்வையைப் பலப்படுத்தும் உத்திகளைக் கையாள வேண்டும்
மாணவர்களின் விருப்பத்திற்கு ஏற்ற கற்பித்தல் வழிமுறைகளுக்குத் தான் அதிக முக்கியத்துவம் கொடுப்பதாக உயர்நிலைப் பள்ளி பிரிவுக்கான சிறந்த தமிழாசிரியர் விருதுபெற்ற தொடக்கக் கல்லூரி ஆசிரியர் திருவாட்டி ஷாமினி ராஜகுமார், 44, கூறினார்.
20 ஆண்டுகளுக்கும் மேலான கற்பித்தல் அனுபவம் கொண்ட இவர், மாணவர்களின் ஆர்வத்தைத் தூண்ட அதிக அளவிலான தொழில்நுட்ப அம்சங்களைக் கற்பித்தல் முறைகளில் பயன்படுத்துகிறார். பாடங்களுக்கு அப்பால் மாணவர்களின் அனுபவங்களை மேம்படுத்தப் பல்வேறு முயற்சிகளை மேற்கொள்கிறார் இவர்.

மாணவர்களின் உலகியல் அறிவை மேம்படுத்துவது அவர்களுக்கான அனைத்துலக அளவிலான வாய்ப்புகளைக் கண்டறிய வழிவகுக்கும் என்றும் இவர் கூறினார். 21ஆம் நூற்றாண்டிற்கான சிந்தனைத் திறனை மாணவர்களிடத்தில் தூண்டுவது அவசியம் என்றும் இவர் வலியுறுத்தினார்.
மாணவர்களுக்கு மொழிசார் அனுபவங்களை வழங்கும் நோக்கில் பயிலரங்குகள், கருத்தரங்குகள், விவாதப் போட்டிகள், பேச்சுப் போட்டிகள், கற்றல் பயணங்கள், திறன் மேம்பாட்டு நிகழ்வுகள் உள்ளிட்ட பலவற்றை முன்னின்று செயல்படுத்துகிறார் திருவாட்டி ஷாமினி.
மரபு, பண்பாடு, தமிழர் இன வரலாறு உள்ளிட்டவற்றை மாணவர்களிடத்தில் பள்ளி, கல்லூரி காலங்களில் கொண்டு செல்வதே அவர்களை எதிர்காலத்தில் நல்வாழ்க்கையின் கட்டொழுங்கு முறைமைகளைக் கடைபிடிக்கும் நல்ல குடிமகனாக உருவாக்கும் என்றும் இவர் தெரிவித்தார்.
நான்கு பிள்ளைகளுக்குத் தாயான இவருக்கு கணவர், மாமனார், மாமியார் எனக் குடும்ப உறுப்பினர்கள் தரும் ஆதரவே பக்கபலமாய் இருப்பதாகத் தெரிவித்தார். குடும்பத்திற்கும் பணிக்குமான நேரத்தினைச் சரியாகத் திட்டமிடுவதன் மூலம் தமது பொறுப்புகளைச் சிறப்பாகக் கையாள முடியும் என்கிறார் இவர்.
தெம்பனிஸ் மெரிடியன் தொடக்கக்கல்லூரியில் பணிபுரியும் இவர், ஓர் ஆசிரியராகத் தன்னை மேம்படுத்திக்கொள்ள ஒவ்வொருநாளுமே முனைப்பு காட்டுகிறார். மேலும் சிண்டா, தேசிய நூலக வாரியம் போன்ற சமூக அமைப்புகளுடன் இணைந்து தமிழர் மரபுடைமை சார்ந்த தகவல்களை மாணவர்களிடத்தில் இவர் கொண்டு செல்கிறார். மாணவர்களுக்கான கலாசாரத் திட்ட நடவடிக்கைகளையும் சிரத்தையுடன் முன்னெடுத்து நடத்துகிறார்.
ஆசிரியர் பணியென்னும் ஓர் அற்புதக் கலை
ஆசிரியர் பணி மாத வருமானம் ஈட்டும் ஒரு சராசரித் தொழில் அல்ல. எதிர்காலச் சந்ததியினரை நல்வழிப்படுத்தி அவர்களைச் சமூகப் பொறுப்புணர்வுடன் உருவாக்கும் ஒரு நேர்த்தியான கலை என்கிறார் உயர்நிலைப் பள்ளி பிரிவுக்கான சிறந்த தமிழாசிரியர் விருதுபெற்ற திருவாட்டி மகேஸ்வரி செல்வராஜூ, 41.
18 ஆண்டுகளாக ஆசிரியர்ப் பணியில் இருக்கும் இவர், பாடங்களுடன் சேர்த்து தமிழர் பண்பாடு, கலாசாரம், வாழ்வியல் கோட்பாடுகள், விழுமியங்கள் ஆகியவற்றிலும் கூடுதல் கவனம் செலுத்துகிறார். கல்வி என்பது எதிர்காலத்தில் ஒரு பணியில் சேரத் தேவையான தகுதிச் சான்றிதழாக மட்டும் இருந்துவிடக்கூடாது என்றும் ஒரு நல்ல மனிதனை உருவாக்கும் தளமாக அமைய வேண்டும் என்றும் தீர்க்கமாக நம்புகிறார் இவர்.
தன்னுடைய கற்பித்தல் வழிமுறைகளில் அன்றாட உலகநடப்புகளைப் பொருத்துவதால் மாணவர்களிடத்தில் சமூகப் பொறுப்புணர்வைத் தூண்ட முடிகிறது என்று குறிப்பிட்டார் திருவாட்டி மகேஸ்வரி.
ஈசூன் டவுன் உயர்நிலைப்பள்ளியில் பணியாற்றி வரும் இவர், இளம் வயதில் தன்னுடைய தமிழ் ஆசிரியர்களைப் பார்த்தே இத்துறையை வாழ்க்கைத்தொழிலாக்கிக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் பிறந்ததாகத் தெரிவித்தார்.
தன் பள்ளி ஆசிரியர்கள் அழைத்துச்சென்ற தமிழ் சார்ந்த போட்டிகளும் விவாத மேடைகளும் கருத்தரங்குகளுமே தனக்குள் இருந்த தமிழுணர்வை ஆழமாக வேரூன்ற வைத்ததாக நினைவுகூர்ந்தார் இவர்.
மூன்று பிள்ளைகளுக்குத் தாயான இவர், ஒவ்வொரு மாணவரையும் தன் பிள்ளைகளைப் போலே பாவிப்பதால் தன் மொத்த வாழ்க்கையுமே பிள்ளைகளின் அன்பால் நிறைந்துள்ளது என்று கூறித் தன் மனநிறைவை வெளிப்படுத்தினார் திருவாட்டி மகேஸ்வரி.

“மாணவர்களை மெருகேற்றும் பயணத்தில் ஆசிரியர்களும் அவர்களிடமிருந்து அதிகம் கற்றுக்கொள்கிறோம். இந்த இருவழிக் கற்றலே ஆசிரியர்-மாணவர் இணக்கத்திற்கு பின்புலமாக அமையும்,” என்றும் இவர் கூறினார்.
தன்னுடைய கற்பித்தல் முறைகளையும் அனுபவங்களையும் இளம் ஆசிரியர்களிடம் பகிர்ந்துகொள்வதில் அதீத முனைப்பு காட்டி வரும் இவர், எதிர்காலச் சந்ததியினரைத் தயார்ப்படுத்தும் ஆசிரியர்கள் ஒவ்வொருநாளும் உலக வளர்ச்சியுடன் தங்களையும் மேம்படுத்திக்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
சுயகற்றலில் மாணவர்கள் கவனம் செலுத்துவது அவசியம்
ஒவ்வொரு மாணவர் மீதும் ஆசிரியர்கள் செலுத்தும் தனி கவனமே அவர்களுக்கு அதிக ஊக்கம் அளிக்கும் என்றார் திருவாட்டி அஸ்மது.
“ஆசிரியர் மாணவர்கள் மீது வைத்திருக்கும் நம்பிக்கை அவர்களின் தன்னம்பிக்கைக்கு உறுதுணையாக இருக்கும்,” என்றும் கூறினார் உயர்நிலைப் பள்ளி பிரிவுக்கான சிறந்த தமிழாசிரியர் விருதுபெற்ற திருவாட்டி அ. அஸ்மது பீவி, 42.

சிராங்கூன் கார்டன் உயர்நிலைப்பள்ளியில் பணிபுரியும் இவர், 21 ஆண்டுகளாக ஆசிரியர் சேவையில் இருக்கிறார். மாணவர்களின் திறன்களை மேம்படுத்தத் தொழில்நுட்பம் மற்றும் புதுமையான பாட வழிமுறைகளைப் பயன்படுத்துவதில் இவர் சிறந்து விளங்குகிறார். மேலும், மாணவர்களின் நம்பிக்கையையும் மொழியின் மீதான புலமையையும் அதிகரிக்க அவர்களின் பேச்சுத் தமிழில் அதிகக் கவனம் செலுத்துகிறார்.
பதின்ம வயதில் உடலளவிலும் மனதளவிலும் பல்வேறு மாற்றங்களைச் சந்திக்கும் மாணவர்களை நேர்த்தியாகக் கையாள்வது அவர்களுக்கு வாழ்க்கை மீதான புரிதலுக்கு அடித்தளமாக அமைவதோடு நம்பிக்கையையும் அளிக்கும் என்று கூறினார் திருவாட்டி அஸ்மது.
மாணவர்களை மனந்திறந்து பேச வைத்தலில் அதிக முனைப்பு காட்டுவதாகக் கூறும் இவர், திட்டப்பணிகள், சுயமதிப்பீடு செய்தல் போன்ற சுயக்கற்றல் முறைகளை மாணவர்களிடத்தில் அதிகம் ஊக்குவிக்கிறார்.
வகுப்பறைக்கு அப்பால், நாடகம் உள்ளிட்ட இலக்கியக் கலைப் படைப்புகள் மூலம் மேம்படுத்தப்பட்ட கற்றல் அனுபவங்களை வழங்கி வருகிறார் திருவாட்டி அஸ்மது. மாணவர்களிடம் நண்பர்களைப் போல நெருங்கிப் பழகும் குணமுடைய இவர், இந்த நெருக்கமே அவர்களை ஆழமாகப் புரிந்துகொண்டு கற்பித்தல் உத்திகளை மேம்படுத்த உதவுகிறது என்றும் கூறினார்.
மதிப்பெண்களை மட்டுமே சார்ந்திராமல் கலை, விளையாட்டு, வாழ்வியல் விழுமியங்கள் உள்ளிட்ட முழுமையான வாழ்க்கை அடிப்படைகளை மாணவர்களுக்குக் கற்பிக்கும் கருவியாகக் கல்வி கருதப்பட வேண்டும் என்றும் இவர் வலியுறுத்துகிறார்.
கூடுதல் கவனம் தேவைப்படும் மாணவர்களின் பெற்றோருடன் இணைந்து செயல்படுவதுடன் வீட்டிலும் வகுப்பிலும் அவர்களின் மொழித்திறன் மேம்படத் தேவையான முயற்சிகளை மேற்கொள்கிறார் இவர். மேலும், தனது மாணவர்களுக்குச் சிறந்த ஆதரவை வழங்குவதற்காகச் சிங்கப்பூர் இந்திய மேம்பாட்டு சங்கம் (சிண்டா) போன்ற சமூக அமைப்புகளுடனும் இணைந்து பணியாற்றுகிறார்.
கற்றலுக்குத் தித்திப்பூட்ட விரும்பும் பயிற்சி ஆசிரியர்
சிறப்புத் தேவையுள்ள மாணவர்களுக்குக் கற்பிக்கும் திறன்களைக் கைவசமாக வைத்துள்ளார் தற்போது தேசியக் கல்விக் கழகத்தில் பயிற்சி ஆசிரியராக உள்ள பிரியதரிசினி, 33. இத்திறன்களைத் தமிழ்ப் பணிக்கும் காெண்டுவரவுள்ளார். மேடை, தொலைக்காட்சி நாடகங்களிலும் இடம்பெற்றுள்ள குமாரி த.பிரியதரிசினி, நடிப்புத் திறன்களை வகுப்பறைக்குள் புகுத்தும் முனைப்பில் இருக்கிறார்.

இளம் வயதில் ஆசிரியர் பணியால் கவரப்பட்டு அவர்களைப் பாவித்து விளையாடும் பழக்கம் கொண்டிருந்த குமாரி பிரியதரிசினி, ஆசிரியராகப் பேராவல் கொண்டிருந்தார். சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகத்தில் உயிரியல் துறையில் இளநிலைக் கல்வி பயின்ற இவருக்கு, அறிவியல் கூடத்தில் பணியாற்ற விருப்பமில்லை எனப் பின்னர் உணர்ந்து அதிலிருந்து விலகினார்.
சிறப்புத் தேவையுள்ள மாணவர்களுக்கு நான்கு ஆண்டுகள் கற்பித்த பின்னர், கல்வியமைச்சுப் பள்ளிகளில் தம் திறன்கள் தேவைப்படுவதை அறிந்து அங்கு இடமாற்றம் செய்ய முடிவெடுத்தார்.
வீட்டிலும் பள்ளியிலும் புகட்டப்பட்ட தமிழ் ஆர்வம் பிரியதரிசினியைத் தமிழ் ஆசிரியர் பணியின்பால் ஈர்த்தது. பலதரப்பட்ட ஆற்றல் கொண்டுள்ள மாணவர்களுக்கு ஏற்ற விதமாகத் தமது பாடத்திட்டங்களை அமைப்பதில் இவர் கடப்பாடு கொண்டுள்ளார்.
சிறந்த தமிழ் ஆற்றல் உள்ள பிள்ளைகள், நடுத்தரத் திறனுள்ள பிள்ளைகள், வீட்டில் தமிழ்ப்புழக்கம் அறவே இல்லாத பிள்ளைகள் என மூன்று பிரிவினரையும் உள்ளடக்கிக் கற்றுத்தரும் சவாலைக் குறிப்பிட்ட நேர வரையறைக்குள் குமாரி பிரியதரிசினி உறுதியுடன் எதிர்கொண்டார்.
தொடக்கப்பள்ளி நிர்வாக நடவடிக்கைகளிலும் இவர் பங்காற்ற வேண்டியுள்ளது. இந்தச் சவால்கள் இருந்தபோதும், மாணவர்களின் வெற்றிகரமான கற்றலில் இந்த ஆசிரியர் இன்பம் காண்கிறார். மாறிவரும் உலகச் சூழலுக்குப் பாடமுறையைத் தகவமைத்துத் தொடர்ந்து புதுமைகளைப் பிரித்துப்பார்க்க ஆசைப்படுகிறார் சிறந்த பயிற்சி ஆசிரியர் விருது கிடைத்த மகிழ்ச்சியில் திளைக்கும் இந்த இளம் ஆசிரியர்.
விருது பெற்ற மற்ற ஆசிரியர்கள்



விருது நிகழ்ச்சியில் கௌரவிக்கப்பட்ட மற்ற ஆசிரியர்களில் மூத்த தமிழ் ஆசிரியர்களான திருவாட்டி அ.மல்லிகா, திரு ஆறு.அஞ்சப்பன் ஆகியோர் வாழ்நாள் சாதனையாளர் விருதைப் பெற்றனர். தொடக்கப்பள்ளிப் பிரிவுக்கான சிறந்த தமிழாசிரியர் விருதினை திருவாட்டி ஹருன்னிஷா முகம்மது ஜமாலுதீன், திருவாட்டி பு.கயல்விழி, திருவாட்டி உஷா கிருஷ்ணசாமி ஆகியோர் பெற்றனர்.
செய்தித் தொகுப்பு: மோனலிசா, கி.ஜனார்த்தனன்