இந்தியாவில் நடந்த தம் திருமணத்திற்கு வருகை தந்த தம் சீன முதலாளியை வரவேற்பதற்காக 28 வயது ஜெயபால் ஜெயபிரகாஷ் தடபுடலான ஏற்பாடுகள் செய்திருந்ததைக் காட்டும் படங்கள் அண்மையில் சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்பட்டன.
குடும்பத்தில் நிதி நெருக்கடி காரணமாக ஜெயபிரகாஷ் தமது பூர்வீகமான தஞ்சையிலிருந்து 2016ல் சிங்கப்பூருக்கு வேலைக்காக வந்தார்.
கடந்த ஏழு ஆண்டுகளாக தீப் பாதுகாப்பு செயல்முறை தீர்வுகள் வழங்கும் ‘ஆக்டிவ் ஃபயர்’ கட்டுமான நிறுவனத்தில் பணியாற்றி வரும் ஜெயபிரகாஷ், அண்மையில் மேற்பார்வையாளராகப் பதவி உயர்வு பெற்றார். 18 ஊழியர்களைக் கொண்டுள்ள குழுவின் பணிகளை மேற்பார்வையிடும் பொறுப்பை அவர் ஏற்றுள்ளார்.
தான் திருமணம் செய்துகொள்ளப் போகும் செய்தியை இவ்வாண்டு மே மாதம் தனது நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரான டோமினிக் ஆங் பாவ் லெங்கிடம் தெரிவித்தபோது, டோமினிக் கட்டாயமாகத் தனது ஊழியரின் திருமணத்திற்கு இந்தியா செல்ல வேண்டுமென்று விரும்பினார். கொள்ளைநோய்க் காலத்திற்கு முன்பே தம் குடும்பத்தாருடன் இந்தியாவுக்குச் சுற்றுலா மேற்கொள்ள விரும்பியவர் டோமினிக்.
டோமினிக்கின் மனைவி, மகள் மற்றும் நிறுவனத்தில் வேலை பார்ப்போரைச் சேர்த்து மொத்தம் 11 பேர் ஜெயபிரகாஷின் திருமணத்தில் கலந்துகொள்ள அண்மையில் இந்தியா சென்றிருந்தனர்.
சிங்கப்பூர், மலேசியாவில் நடந்த ஊழியர்களின் திருமணங்களுக்கு மட்டுமே சென்றுவந்த டோமினிக், முதன்முறையாக இந்திய மண்ணில் காலடி எடுத்து வைத்தார்.
கிராமத்தில் ஜெயபிரகாஷின் வீட்டை அடைந்ததும் அவரின் குடும்ப உறுப்பினர்கள் மலர்த்தூவி வரவேற்றது டோமினிக்கை மெய்சிலிர்க்க வைத்தது. தமிழர் கலாசார விருந்தோம்பல் அவரை வெகுவாகக் கவர்ந்தது.
கொடைக்கானலில் இருக்கும் விடுதியில் தங்கிய அவர்கள், அங்கிருக்கும் இயற்கை எழிலைக் கண்டு மலைத்துப் போனார்கள்.
“பாரம்பரிய காலை உணவு, கிராமத்தினர் பொழியும் அன்பு, அங்கிருக்கும் மலைகள் இவை அனைத்தையும் நான் இதுவரை எங்கும் அனுபவித்ததே இல்லை,” என்று டோமினிக் கூறினார்.
திருமணத்திற்கு முன்பு ஜெயபிரகாஷின் மனைவியின் வீட்டிற்குச் சென்ற அவர்கள், பக்கத்தில் இருக்கும் மற்ற மூன்று ஊழியர்களின் குடும்பங்களையும் சந்தித்து வந்தனர்.
பாரம்பரிய உடைகளில் டோமினிக்கும் அவரது குடும்ப உறுப்பினர்களும் மேளதாளத்தோடு குதிரை வண்டியில் திருமண மண்டபத்துக்கு அழைத்துவரப்பட்டனர்.
மேளதாள இசையில் மூழ்கிய டோமினிக் அதற்கு ஏற்றாற்போல் ஆடியும் மகிழ்ந்தார். முதல் அனுபவமாக இந்திய திருமணத்தில் 700க்கும் மேற்பட்ட விருந்தினர்களைக் கண்ட டோமினிக், “திருமணங்கள் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும். குடும்ப உறுப்பினர்களின் பாசமும் பாரம்பரியமும் கலந்த ஒரு திருமணத்தை கண்டது ஒரு மறக்கமுடியாத தருணம்,” என்று சொன்னார்.
திருமணம் ஐந்து நாட்களுக்கு நடைபெற, அவர்கள் ஒருநாள் மட்டும் கலந்துகொண்டு பின்னர் ஜெயபிரகாஷ் பயின்ற எளிய கிராமத்துப் பள்ளியையும் அங்கு பயிலும் மாணவர்களையும் சந்திக்கச் சென்றனர். சிங்கப்பூரில் இருக்கும் நவீன பள்ளிகள் போல் இல்லாமல் இருக்கும் அப்பள்ளியைக் கண்டு டோமினிக் வருந்தினார்.
அங்கிருக்கும் 70 மாணவர்களுக்கு அவரும் அவரது மனைவியும் $50 மதிப்புடைய பொருள்களைக் கொண்ட அன்பளிப்புப் பைகளை வழங்கினர். சிறுவர்கள் அப்பைகளைப் பெற்றுக்கொண்டபோது அவர்களின் முகத்தில் தெரிந்த மகிழ்ச்சி, டோமினிக்கை நெகிழ வைத்தது. அத்துடன் அவர்கள் அப்பள்ளிக்கு நான்கு மடிக்கணினிகளையும், படம் காட்டும் திரைகளையும் வழங்கினார்கள்.
மாணவர்களுடன் உரையாடிக்கொண்டிருந்தபோது ஐந்தாம் வகுப்புப் படிக்கும் சிறுவன் ஒருவன் டோமினிக்கைச் சந்தித்துத் தனது தந்தை அதே நிறுவனத்தில் பணிபுரிவதாகவும் அவரைப் பார்க்கத் தான் மிகவும் ஏங்குவதாகவும் கூறியது டொமினிக்கைக் கலங்க வைத்தது.
தன்னால் முடிந்தது அந்தச் சிறுவனிடம் அவனது தந்தையை நன்றாகப் பார்த்துக் கொள்வோம் என்று உறுதியளிப்பது தான் என்ற டோமினிக் ஊழியர்களின் பாதுகாப்பில் அதிக கவனம் செலுத்துபவர்.
அவ்வப்போது ஊழியர்களுக்குப் பாதுகாப்பு சார்ந்த பயிற்சிகள் வழங்குவது, நடவடிக்கைகளுக்கு ஏற்பாடு செய்வது முதலியவற்றில் டோமினிக் அக்கறை காட்டி வருகிறார்.
சிங்கப்பூரில் பணிபுரிந்து தனது வாழ்வில் முன்னேற்றம் கண்ட ஜெயபிரகாஷ், முன்பு ஓலைக்குடிசை வீட்டில் வாழ்ந்து வந்தார். இப்பொழுது அவர் அழகான ஒரு மாடி வீட்டைக் கட்டி, இருந்த கடனையும் அடைத்துவிட்டார்.
திரு டோமினிக்குடன் நெருக்கமான நட்பு கொண்டுள்ள ஜெயபிரகாஷ், இன்னும் ஒரு மாதம் இந்தியாவில் இருந்துவிட்டு சிங்கப்பூர் திரும்பும்போது தனது மனைவியையும் கூடவே அழைத்துப் வரப்போவதாகத் தெரிவித்தார்.
வரும் காலத்தில் டோமினிக்கும் அவரது குடும்பத்தினரும் இந்தியாவுக்குச் சென்று சமூக சேவையில் ஈடுபட முனைப்புக் கொண்டுள்ளனர். மேலும், நிறுவனத்தில் ஊழியர்களை ஊக்குவிக்கும் விதத்தில் நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெறும் என்றும் டோமினிக் கூறினார்.