வாழ்வில் இனி என்ன இருக்கிறது என்ற விரக்தியுடன் 2016ல் தொடங்கியது கோபால் மகேவின் எட்டு ஆண்டு சிறைவாசம்.
அப்போது அவருக்கு 33 வயது. மனைவியும் மூன்று வயது மகனும் இருந்தபோதும் போதைப் புழக்கத்திற்கு அடிமையானார்.
போதைப் புழங்கிகளுக்கு ஆலோசகராக இருந்தவேளையில் அவரே போதைப் புழக்கத்திற்கு அடிமையானது அவரைச் சுற்றியிருந்தோர்க்கு முரணாக இருந்தது. ஆனால் இப்போது அப்பழக்கத்திலிருந்து மீண்டு நல்வழியில் சென்று தன் மகனுக்கு நல்ல முன்மாதிரியாக இருக்கவேண்டும் என விரும்புகிறார் கோபால்.
முன்னதாக, நோய்வாய்ப்பட்டிருந்த தம்பியை கவனித்த அளவிற்கு பெற்றோர் தன்னைப் பராமரிக்காததுபோல உணர்ந்தார் அவர்.
அடுத்தடுத்து ஏற்பட்ட உடற்காயங்களால் காற்பந்து வீரராகவேண்டும் என்ற கோபாலின் கனவு கலைந்தது.
இவற்றால் ஏற்பட்ட மன வலியை மறக்க பதின்ம வயதிலேயே அவர் மது, சிகரெட், கஞ்சா ஆகியவற்றைப் பயன்படுத்தத் தொடங்கினார். விமானச் சிப்பந்தியாக வேலை செய்தபோது உலகின் பல்வேறு நாடுகளுக்குச் சென்று, கொண்டாட்ட மாயையில் திளைத்தார்.
போதைக்கு அடிமையானோரைப் பற்றி நன்கு புரிந்துகொள்ள மனநல ஆலோசனைத் துறையில் முதுநிலைப் பட்டம் பெற்றார். ஆனாலும் அவர் தீய பழக்கங்களின் பிடியில் இருந்தார்.
‘மெத்’ போதைப் பொருளை அவரது பழைய நண்பர் மீண்டும் அறிமுகம் செய்த நிலையில் கோபால் மீண்டும் தடம்புரண்டார்.
தொடர்புடைய செய்திகள்
மனைவியுடன் புதிய இல்லம் புகுந்து ஓராண்டுகூட நிறைவடையாத நிலையில், 2013ல், கோபால் கைது செய்யப்பட்டார். மூன்று ஆண்டுகள் நீடித்த விசாரணைக்குப் பிறகு சிறைக்குச் சென்றார்.
மனைவி தன்னிடமிருந்து மணவிலக்குப் பெறுவார் என்று கோபால் நினைத்ததுண்டு. ஆனால் அவர் மனைவி அவரைக் கைவிடவில்லை. மகனுக்காகத் திருந்தவேண்டும் என்ற வைராக்கியத்துடன் சிறைவாசத்தைக் கழித்தார் கோபால்.
முன்னாள் கைதிகளுக்கும் அவர்களது குடும்பங்களுக்கும் ஆதரவு வழங்கும் ‘நியூ லைஃப் ஸ்டோரிஸ்’ (என்எஸ்எல்) எனும் கைதிகளின் புனர்வாழ்விற்கான அமைப்பு, ஒரு புத்தகத்திற்குப் பங்காற்ற அணுகியபோது கோபால் அந்த வாய்ப்பை ஆர்வத்துடன் ஏற்றுக்கொண்டார்.
‘லவ் பியாண்ட த வால்ஸ்’ என்ற அந்தப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ள எட்டுக் கதைகளில் ஒன்று கோபாலின் வாழ்க்கைக் கதை.
ஜூன் 4ஆம் தேதி வெளியீடு கண்ட அந்த நூல், முன்னாள் அதிபர் ஹலிமா யாக்கோப்பின் பாராட்டைப் பெற்றது. பலருக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தக்கூடிய வகையில் தன் தந்தையின் வாழ்க்கைக் கதை ஒரு புத்தகத்தில் இடம்பெற்றிருப்பதை அறிந்து தனது ஏழு வயது மகன் மகிழ்ச்சி அடைந்ததாக கோபால் கூறினார்.
கடந்த ஆண்டு ஜனவரியில் சிறையிலிருந்து வெளியேறிய கோபால், மீண்டும் மனநல ஆலோசகராகச் செயல்பட்டு மனநிறைவுடன் வாழ்ந்து வருகிறார்.