சுகாதாரத் துறையில் சிறந்த சேவையாற்றியவர்களுக்காக இவ்வாண்டு 95 ‘சுகாதாரப் பராமரிப்பு மனிதநேய விருதுகள்’ வழங்கப்பட்டுள்ளன. 2004ஆம் ஆண்டு முதல் சுகாதார அமைச்சு ஹோல்டிங்ஸ் வழங்கிவரும் இவ்விருது இவ்வாண்டு 70 தனிநபர்களுக்கும் 25 குழுக்களுக்கும் வழங்கப்பட்டன.
இம்மாதம் 12ஆம் தேதி பிற்பகல் 3 மணியளவில் கான்ரெட் சென்டினியல் சிங்கப்பூர் ஹோட்டலின் உள்ளரங்கில் இடம்பெற்ற விருது நிகழ்வில் அதிபர் தர்மன் சண்முகரத்தினமும் சுகாதார அமைச்சர் ஓங் யீ காங்கும் விருதுகளை வழங்கினர்.
“சுகாதாரத் துறை சார்ந்த பணியாளர்கள் இக்கட்டான சூழல்களிலும் வலிமையுடன் பணியாற்றி நம் சமூகத்திற்கு தூண்களாக உள்ளனர். இவ்விருதினை பெறுவோர் நம் அனைவருக்குமே ஊக்கம் அளிக்கின்றனர்,” என்று அதிபர் தர்மன் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் தனிநபர் பிரிவில் விருதுபெற்ற யோகேஸ்வரி சந்திரசேகரன் கூறுகையில், “உடல்நலமும் மனநலமும்தான் வாழ்க்கையின் அடித்தளம். பிறரின் வாழ்வைச் செம்மைப்படுத்த உதவும் இப்பணி மகத்தான ஒன்று. ஒவ்வொரு நாளும் மக்களுடன் இணைந்து பணியாற்றுவதே விருது பெறுவதைப் போன்ற ஒன்று தான்,” என்று கூறினார்.
ஸ்ரீ நாராயண மிஷன் முதியோர் இல்லத்தில் சமூக பணி மற்றும் குடியிருப்பாளர்கள் திட்டப் பிரிவின் தலைவரான இவர் தகுதிபெற்ற ஒரு தாதியாவார்.
ஏழு ஆண்டுகளுக்கும் மேல் பல்வேறு மருத்துவமனைகளில் தாதிமைத் துறை சார்ந்த பல பொறுப்புகளை வகித்த இவர், 2015ஆம் ஆண்டு முதல் சமூக சேவையாளராக ஸ்ரீ நாராயண மிஷன் இல்லத்தில் புதிய பயணத்தைத் தொடங்கினார். தற்போது 37 வயதாகும் இவர், சமூக சேவைத் துறையில் முதுநிலைப் பட்டமும் பெற்றுள்ளார்.
“தாதியாக இருந்தாலும் சமூக சேவையாளராக இருந்தாலும் இரு பணிகளுமே மக்களுக்குத் தொண்டாற்றுவதுதான். அதிலும் சமூக சேவையாளராக பிறரின் உணர்வுகளையும் தேவைகளையும் ஆழமாகப் புரிந்துகொள்ள முடிகிறது. அதேபோல் உடல் ரீதியான தொந்தரவுகளால் அவதியுறுவோருக்கு அடிப்படை மருத்துவத் தேவைகளையும் செய்ய முடிகிறது,” என்றும் இவர் கூறினார்.