எழுத்துத் துறையில் பன்முகம் கொண்டிருந்த பாத்தென்றல் முருகடியான் இம்மாதம் 11ஆம் தேதி காலமானார். அவருக்கு வயது 79.
வியாழக்கிழமை மாலை 6.30 மணியளவில் மண்டாய் தகனச்சாலை மண்டபம் 4ல் அவருடைய நல்லுடல் தகனம் செய்யப்பட்டது. அவருக்கு மனைவி, ஒரு மகன், இரு மகள்கள் உள்ளனர்.
தமிழகத்தின் தஞ்சை மாவட்டத்தில் பூம்புகாருக்கு அருகிலுள்ள வாணகரியில் ஜூலை 15, 1944ஆம் ஆண்டு பிறந்த இவருடைய இயற்பெயர் வே. பழனி ஆகும். 1957ஆம் ஆண்டு சிங்கப்பூர் வந்த இவர் கப்பல் பணி, மின்னாளுநர் என பல்வேறு பணிகளில் இருந்தார்.
இளம்வயதிலிருந்தே கவிதைகளில் அதிக ஈடுபாடு கொண்டிருந்த இவர், தன்னுடைய 13 வயதிலிருந்தே இசைப் பாடல்களை எழுதினார். கதை, கட்டுரை, கவிதை ஆகியவற்றை எழுதிய இவரது படைப்புகள் மேடை, வானொலி, தொலைக்காட்சிகளில் இடம்பெற்றன.
மேலும் இவர் சிங்கப்பூரில் உள்ள பல்வேறு இலக்கிய அமைப்புகளுடனும் இணைந்து பணியாற்றியுள்ளார். இவர் ‘திருமுருகன் காவடிச் சிந்து’, ‘தேன்மலர்கள்’ உள்ளிட்ட புத்தகங்களையும் ‘சூரியதாகம்’, ‘நெற்றிக்கண்’ உள்ளிட்ட கவிதைத் தொகுப்புகளையும் ‘விழி! எழு! விரைந்து வா!‘, ‘பாத்தென்றல் முருகடியானின் சங்கமம்: கூடுகை (காப்பியம்)’ உள்ளிட்ட படைப்புகளையும் எழுதி வெளியிட்டுள்ளார்.
“முருகடியான் ஒரு தலைசிறந்த மரபுக்கவிஞர் ஆவார். அவருடைய பல்வேறு நூல்களுக்கு நானே அணிந்துரை வழங்கியுள்ளேன். அவருடைய காவடிச் சிந்து தொகுப்பை சிங்கப்பூரின் தைப்பூசத் திருவிழாவின் போது பயன்படுத்தியுள்ளோம். தீமிதித் திருவிழாவில் அவருடைய வில்லுப்பாட்டு நிகழ்வுகள் இன்றளவும் நினைவிலுள்ளது,” என்று கூறினார் மூத்த தமிழ் அறிஞரான பேராசிரியர் சுப. திண்ணப்பன்.
மேலும் தூக்கத்திலேயே மரணம் எய்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்ததாகவும் அவர் ஆன்மா சாந்தியடைய பிரார்த்திப்பதாகவும் டாக்டர் சுப. திண்ணப்பன் தெரிவித்தார்.
“அவர் என்னுடைய 50 ஆண்டு கால நண்பர். மிகச்சிறந்த மரபுக்கவிஞரான அவருடைய மரணம் எழுத்துலகிற்கே ஒரு மாபெரும் இழப்பு,” என்று மூத்த எழுத்தாளர் க.து.மு. இக்பால் வருத்தம் தெரிவித்தார்.
தொடர்புடைய செய்திகள்
‘பாத்தென்றல்’, ‘வில்லிசை வேந்தர்’ ஆகிய பட்டங்களைப் பெற்ற இவர் மோண்ட் பிளாங்க் இலக்கிய விருது(1998), சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகத்தின் தமிழவேள் விருது(2003), தமிழ்மொழி பண்பாட்டுக் கழகத்தின் திருக்குறள் விருது(2004), சிங்கப்பூர் கவிமாலை வழங்கிய கணையாழி விருது(2019) உட்பட பல்வேறு விருதுகளையும் பெற்றுள்ளார்.


