தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சிங்கப்பூரிலுள்ள தெற்காசிய முஸ்லிம் பெண்களை அங்கீகரிக்கும் புத்தகம்

5 mins read
1e593910-7bd9-4a46-8064-ceb78fb67760
சிங்கப்பூரின் தெற்காசிய முஸ்லிம் பெண்களை அங்கீகரிக்கும் ‘தி இல்ஹாம்’. - படம்: ஐஎம்ப்ரோஃப்
multi-img1 of 2

சிங்கப்பூரிலுள்ள தெற்காசிய முஸ்லிம் பெண்கள் சமூகத்தினரை அங்கீகரிக்கும் வண்ணம் அண்மையில் ‘தி இல்ஹாம்’ எனும் ஆங்கிலப் புத்தகம் வெளியிடப்பட்டது.

இந்தச் சமூகத்தைச் சார்ந்த பல்வேறு துறையிலுள்ள 20 பெண்களின் சாதனைகளும் அவர்கள் கடந்து வந்த சவால்களும் இந்தப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளன.

அக்டோபர் 7ஆம் தேதியன்று தேசிய நூலக வாரியத்தில் பிற்பகல் 2.30 மணிமுதல் நடைபெற்ற இப்புத்தக வெளியீட்டை ஐஎம்ப்ரோஃப் (IMPROF) எனும் இந்திய முஸ்லிம் இளையர்களால் ஆன குழு ஏற்பாடு செய்திருந்தது. 

இந்தப் புத்தகத்தை வெளியிட்ட பிரதமர் அலுவலக அமைச்சர் குமாரி இந்திராணி ராஜா, “பெண்கள் வளர்ச்சியடைவதால் ஒட்டுமொத்த சமூகமும் பன்முகத்தன்மையுடன் மேம்படுகிறது, முன்னேற்றம் காண்கிறது. அந்த வகையில் இப்புத்தகம் சிங்கப்பூரிலுள்ள தெற்காசிய முஸ்லிம் பெண்களின் வலிமையைப் பிரதிபலிக்கிறது,” என்று கூறினார். 

இப்போதுள்ள பெண்களின் சாதனைகளை நாம் சிறப்பிக்கும் அதே சமயம் வருங்கால இளையர்களும் இந்த முன்மாதிரி பெண்களிடமிருந்து கற்றுக்கொள்ளும் வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்றும் இவர் கேட்டுக்கொண்டார். 

மேலும், வழிகாட்டுதல் திட்டங்கள் இளையர்கள் தங்களின் எதிர்காலப் பாதைகளைத் தேர்ந்தெடுப்பதில் பெருமளவு உதவுகின்றன என்றும் அவ்வகையில் ஐஎம்ப்ரோஃப்-வின் ‘ஐமேன்’ (IMAN) திட்டமும் சிண்டாவின் ‘லெட் ஹெர் ஷைன்’ (Let Her Shine) திட்டமும் வரவேற்கத்தக்கவை என்றும் இவர் பகிர்ந்துகொண்டார். 

இந்நிகழ்வின் ஓர் அங்கமாக ‘ஃபைன்டிங் யுவர் டிரைப்’ (Finding your Tribe) எனும் தலைப்பிலான கலந்துரையாடலும் இடம்பெற்றது. ஒவ்வொரு தலைமுறையிலும் பெண்கள் சந்தித்த/சந்தித்துவரும் வெவ்வேறு இடர்பாடுகள், அதிக அளவில் ஆண்கள் இருக்கும் துறைகளில் இருக்கும் பெண்கள் எதிர்கொள்ளும் சவால்கள், குடும்பம் மற்றும் பணியினைச் சமாளிக்கும் வழிமுறைகள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இக்கலந்துரையாடலில் பேசப்பட்டன. 

இந்தப் புத்தகத்தில் இடம்பெற்ற பெண்களுள் சிலரின் சாதனைகளும் அவர்கள் சந்தித்த சவால்களும் பின்வருமாறு: 

கவலைகளைக் கைவிடுங்கள்; லட்சியங்களை அல்ல 

தன்னுடைய 12 வயதில் சுடர்விட்ட எழுத்தார்வத்தை இன்றளவும் அதே பிரகாசத்துடன் வைத்திருக்கிறார் எழுத்தாளரும் கவிஞருமான திருவாட்டி நூர்ஜஹான் சுலைமான். தற்போது 72 வயதாகும் இவர், தன்னுடைய இளம்வயதில் வெளியுலகைப் புத்தகங்கள் மூலமாவே கண்டார். 

“ஒவ்வொரு புத்தகமும் பல்வேறு புதுவித அனுபவங்களைத் தந்தது. என் வாழ்வின் சாளரங்களே புத்தகங்கள் தான்,” என்று சிலாகிக்கிறார் நூர்ஜஹான். பெண்களுக்கு அடிப்படை உரிமைகள்கூட மறுக்கப்பட்ட காலத்தில் பிறந்து வளர்ந்த நூர்ஜஹான், தன் எழுத்துப் பயணத்தைக் குடும்ப உறுப்பினர்கள் உறங்கிய பின்னர் ஒவ்வொரு நாளும் இருளிலேயேதான் தொடங்கினார். 

“அந்தக் காலத்தில் என் படைப்பிற்காக என் பெயர் வெளியிடப்பட்டாலே குடும்பத்திற்குள் பூகம்பம் வெடிக்கும். என் படைப்பு பிரசுரிக்கப்பட்டுள்ளது என்ற மகிழ்ச்சியை விட குடும்பத்தில் என்ன நிலை ஆகுமோ என்ற கவலையே அதிகரிக்கும்,” என்று நினைவுகூர்ந்தார் நூர்ஜஹான். 

புத்தகப் புழுவான இவர், குடும்பச்சூழலினால் ஆறாம் வகுப்புடன் பள்ளிப்படிப்பை நிறுத்திக்கொண்டார். பின்னர் அன்புக்கணவரின் கரம் பற்றிய இவர் அவரின் உந்துதலால் எழுதுகோலை ஏணியாக்கி மெல்ல முன்னேறினார். கடும் முயற்சியும் தளராத மனமும் இருளுக்குள் புதைந்து கிடந்த இவரது திறமையை வெளிச்சத்திற்குக் கொண்டுவந்தது. 

கவிஞர், நாடக ஆசிரியர், எழுத்தாளர் எனப் பல்வேறு எழுத்துலகு பணிமானங்களைத் தொட்ட இவர் பத்திரிகைகள், வானொலி நிகழ்ச்சிகள் எனத் தொடர்ந்து தடம் பதித்தார். மூன்று பிள்ளைகளுக்குத் தாயான இவர், குடும்பத்தையும் தன் கலைத்தாக்கத்தையும் செவ்வனே கையாள உதவிய கணவரைக் கண்ணீருடன் நினைவுகூர்ந்தார். 

“இக்கால பிள்ளைகளுக்கு எங்கள் காலம் போன்ற நெருக்கடிகள் இல்லை. காலத்தின் அருமையை உணர்ந்து இளம்வயதில் பொறுப்புடன் பிள்ளைகள் செயலாற்ற வேண்டும்,” என்றும் இவர் கூறினார். 

இன்றளவும் வாசிப்பைக் கைவிடாத இவர், தன் ஒவ்வொரு நாளையும் புத்தத்துடனே தொடங்கி புத்தகத்துடனே முடிக்கிறார். இவ்வாண்டிற்கான கவிமாலையின் ‘கணையாழி விருது’ உட்பட பல்வேறு விருதுகளை இவர் வாங்கியுள்ளார்.  

அனைத்து பொறுப்புகளிலும் முன்னிலை 

நியமன நாடாளுமன்ற உறுப்பினரும் சிங்கப்பூர்ச் சமூக அறிவியல் பல்கலைக்கழகத்தின் இணைப் பேராசிரியருமான ரஸ்வானா பேகம், சட்டத் துறையில் முனைவர் பட்டம் பெற்றவர். இளம்வயதுமுதலே கல்வியில் மீது நாட்டம் கொண்ட இவர், கல்விப்பாதையை இருகப்பற்றிக்கொண்டார். 

தற்போது 48 வயதாகும் இவர், தன்னுடைய 30களில் சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சின் முழுநேரப்பணி, இரு பிள்ளைகளுக்குத் தாய், சட்டத்துறை முனைவர் பட்டயப் படிப்பு எனப் பல்வேறு சவால்களை ஒரே நேரத்தில் எதிர்கொண்டார். 

“பொறுப்புகள் கூடினாலும் அனைத்திலும் முன்னிலை வகிக்க வேண்டும் என்ற சுய தூண்டுதலே என்னை ஊக்கப்படுத்தியது. பிள்ளைகளைக் கவனித்துக்கொள்வதில் என் தாயாரின் பங்கும் பெருந்துணையாக இருந்தது,“ என்று கூறினார் திருவாட்டி ரஸ்வானா. 

பாலின பேதமின்றி எவர் வாழ்வில் முன்னேற முற்பட்டாலும் அதற்குக் குடும்பம், சமூகம், நண்பர்கள் எனப் பல சாராரின் ஒத்துழைப்பு தேவைப்படும் என்று கூறிய இவர், தன்னுடைய இளமை காலத்தில் தன் சமூகம் சார்ந்த பெண்களுக்கு அந்த ஒத்துழைப்பு சற்று குறைவாகவே இருந்தது என்றும் குறிப்பிட்டார். 

இப்போதுள்ள பக்குவப்பட்ட சமூகத்தில் பெண்களுக்குக் கிடைக்கும் ஆதரவு தொடர்ந்து மேம்பட வேண்டும் என்றும் அதனை இளையர்கள் சரியான விதத்தில் பயன்படுத்தி முன்னேற வேண்டும் என்றும் இவர் சொன்னார். 

வாய்ப்புகளை உருவாக்கிக்கொள்ள வேண்டும் 

வூட்ஸ் பார்மசி நிறுவனரான ருஸானா பானுவிற்கு இளம்வயதிலிருந்தே மருத்துவராக வேண்டும் என்ற கனவு இருந்தது. அது கைகூடாமல் போயினும் மருத்துவத் துறை சார்ந்த படிப்பையே அவர் தேர்ந்தெடுத்தார். 

மருந்தாளர் துறையில் இளநிலைப் பட்டப்படிப்பை முடித்த இவர், சில ஆண்டுகள் சமூக மருந்தகங்களில் மருந்தாளராகப் பணியாற்றினார். சில ஆண்டுகளிலேயே இத்தொழிலின் நேர்த்தியைக் கற்றுக்கொண்ட இவர், 2018ஆம் ஆண்டில் தனியார் மருந்தகம் ஒன்றை நிறுவினார். 

“அப்போது என் முதல் பிள்ளைக்கு 5 வயது. இரண்டாம் பிள்ளை பிறந்த ஏழு மாதக் கைக்குழந்தை. இச்சூழலில் கடையைத் துவங்கினோம். மிகுந்த தொழில் நெருக்கடிகளுக்கு மத்தியில் குடும்பப்பொறுப்புகள் சேர்ந்து ஒவ்வொரு நாளுமே கடுமையாகத்தான் இருந்தன. அப்போது என் கணவரும் தாயாரும்தான் பக்கபலமாக இருந்தனர்,” என்று நெகிழ்ந்து கூறினார் ருஸானா. 

தற்போது 35 வயதாகும் ருஸானா அண்மையில் இம்மருந்தகத்தின் புதிய கிளை ஒன்றையும் கிளார்க் கீ பகுதியில் திறந்துள்ளார்.

“வாழ்வில் வாய்ப்புகள் தானாக வராது. நாம்தான் உருவாக்கிக்கொள்ள வேண்டும். தடைகளைக் கண்டு அஞ்சி பின்வாங்காமல் ஒவ்வொரு தடையின் பின்னணியையும் ஆராய்ந்து தீர்வு காண முனைய வேண்டும்,” என்றும் இவர் கூறினார். 

தெளிவான குறிக்கோள்; தீர்க்கமான செயல்பாடுகள் 

ஹார்ட்ஸ்.க்வெஸ்ட்(Hearts.Quest) நிறுவனத்தின் தோற்றுனரும் தனியார் ஆலோசகருமான (Counsellor, Private Practitioner) நஸ்ரின் ஷா பிவி, மனநல ஆரோக்கியத்தின் முக்கியத்துவத்தைச் சமூகத்திற்குக் கொண்டு செல்வதையே தன் வாழ்வின் பொருளாகக் கருதுகிறார். 

தற்போது 34 வயதாகும் இவர், இத்துறையில் முதுகலைப் பட்டமும் பெற்றிருக்கிறார். தன்னுடைய பணியினைப் பற்றி தன் குடும்ப உறுப்பினர்களால் நன்குப் புரிந்துகொள்ளமுடியவில்லை என்று ஆதங்கப்படும் இவர், தொடர்ந்து மக்களுக்குச் சேவையாற்றுவதையே தன் லட்சியமாகக் கொண்டுள்ளார். 

“மக்கள் வெளியில் சொல்ல முடியாமல் தவிக்கும் பிரச்சினைகளைத் தீர்ப்பது அவ்வளவு எளிதல்ல. அவர்கள் மனந்திறந்து பேசினால் மட்டுமே தீர்வு காண முடியும்,” என்று கூறினார் நஸ்ரின். மேலும் இதற்கான விழிப்புணர்வு முன்பைவிட பெருமளவு மக்களிடம் சென்று சேர்ந்துள்ளபோதும் இதற்கான சிகிச்சைகளை மேற்கொள்வதில் பெரும்பாலானோருக்கு தயக்கம் இருக்கிறது என்பதையும் இவர் சுட்டினார். 

பெண்களுக்குப் பொதுவாக பல்வேறு பொறுப்புகள் இருந்தாலும்கூட தங்களுடைய குறிக்கோளில் தெளிவும் செயல்பாடுகளில் தீர்க்கமும் இருந்தால் தொடர்ந்து வெற்றிநடை போட முடியும் என்று புன்னகைத்துக் கூறினார் நஸ்ரின்.