தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சிங்கப்பூர் கடற்படையின் ‘நேவி@விவோ23’ கண்காட்சி

2 mins read
8f7a6678-3583-42b8-8e59-7beb8fd814fa
சிங்கப்பூர் கடற்படையின் ‘நேவி@விவோ23’ கண்காட்சி - படம்: டினேஷ் குமார்

சிங்கப்பூர்க் குடியரசு கடற்படையின் (ஆர்எஸ்என்) ‘நேவி@விவோ23’ கண்காட்சி இவ்வாண்டு நவம்பர் மாதம் 17ஆம் தேதி முதல் 19ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.

வருடாந்தர கண்காட்சியான இது கொவிட்-19 பேரிடர் காரணத்தால் நான்காண்டு இடைவெளிக்கு பின் மீண்டும் இவ்வாண்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

விவோசிட்டி கடைத்தொகுதியில் நடைபெறவிருக்கும் இந்தக் கண்காட்சியில் பொதுமக்கள் சிங்கப்பூர் குடியரசு கடற்படையின் ஆகப் பெரிய கப்பல்களில் பயணம் செய்யலாம். பொதுமக்கள் இந்தக் கப்பல்களில் விரைவுக் கப்பல் சவாரிகளை மேற்கொண்டு சிங்கப்பூரின் தெற்குக் கரையோரப் பகுதியைக் காணமுடியும். 

இந்தக் கண்காட்சியில் ‘ஆர்எஸ்எஸ் என்டீவர்’ எனப்படும் 141 மீட்டர் நீளமுள்ள எண்டூரன்ஸ் கிளாஸ் தரையிறங்கும் டேங்க் கப்பலில் பொதுமக்கள் பயணிக்கலாம். பார்வையாளர்கள் விவோசிட்டி புரோமனாட்டில் இந்தக் கப்பலில் ஏறிக்கொள்ளலாம். மேலும் இந்தக் கப்பலின் சிறப்பு அம்சங்களும் இதனை இயக்குவதற்கான வழிமுறைகளையும் பார்வையாளர்கள் தெரிந்துகொள்ளமுடியும்.   

அத்துடன் இந்த மூன்று நாள் கண்காட்சியின்போது சூரிய அஸ்தமனத்தில் இந்தக் கப்பல் அல்லது விவோசிட்டிக்கு வருபவர்கள், சிங்கப்பூர் குடியரசு கடற்படையின் சடங்குபூர்வ சூரிய அஸ்தமன செயல்பாடுகளையும் காணலாம். அன்றைய நாளின் முடிவைக் குறிக்கும் வகையில் கொடியை இறக்குவதற்கு முன், ராணுவ இசைக்குழு மற்றும் ஆர்எஸ்என் பணியாளர்கள் சீருடையில் அணிவகுத்துச் செல்வார்கள். 

அதேபோல் விவோசிட்டி திறந்தவெளி அரங்கில் பார்வையாளர்கள் கடற்படை முக்குளிப்புப் பிரிவின் உடற்பயிற்சி செயல் விளக்கங்களைக் காற்றடைக்கப்பட்ட மிதவைகளைப் பயன்படுத்தி கண்டுகளிக்கலாம். 

மேலும் ‘கடற்படை’ என்ற கருப்பொருளைக்கொண்ட சிங்கப்பூர் ஆயுதப்படையின் மத்திய இசைக்குழுவின் நிகழ்ச்சிகளையும்

சிங்கப்பூர் ஆயுதப்படை இசை மற்றும் நாடக நிறுவனத்தின் படைப்புகளையும் பொதுமக்கள் காணலாம். சிறார்களை மகிழ்விக்கும் வண்ணம் லைப்ரரி@ஹார்பர்ஃபிரண்ட் நூலகத்தில் கதைசொல்லும் அங்கங்களும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. 

இக்கண்காட்சிக்கான அனுமதி இலவசம். இருப்பினும், எல்எஸ்டி கப்பலைப் பார்வையிடுதல், விரைவுப் படகுச் சவாரிகள, விவோசிட்டி திறந்தவெளி அரங்கில் நடைபெறும் கலை நிகழ்ச்சிகள், குழந்தைகளுக்கான கதை சொல்லும் அங்கங்கள் போன்ற சில நிகழ்வுகளுக்கான நுழைவுச்சீட்டுகளுக்கு பொதுமக்கள் வாக்குப்பதிவு செய்ய வேண்டும். 

இந்தக் கண்காட்சி ஒவ்வொரு நாளும் காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை நடைபெறும். இந்தக் கண்காட்சியைப் பற்றிய கூடுதல் தகவல்களுக்கும் நுழைவுச்சீட்டுகளுக்கான பதிவுக்கும் https://go.gov.sg/NV23 என்ற இணையத்தள முகவரியை நாடலாம். அக்டோபர் 22ஆம் தேதி நுழைவுச்சீட்டுகளுக்கான வாக்குப்பதிவு நிறைவடைகிறது. 

குறிப்புச் சொற்கள்