இசைக் கொண்டாட்டங்களை வழங்குவதில் வல்லவர்

சிங்கப்பூரில் நான்கு நிகழ்ச்சிகள், லண்டனில் ஒன்று, டொரோன்டோவில் ஒன்று என சிங்கப்பூரர் பார்த்திபனின் நிறுவனம் மேடையேற்றிய நிகழ்ச்சிகள் நான்குதான்.

ஆனால், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் அனைவருக்கும் ஒரு முன்மாதிரியாகவும் துறையில் முத்திரை பதிக்கும் வித்தகராகவும் ‘மேஸ்ட்ரோ புரொடக்‌ஷன்ஸ்’ என்ற தன் நிறுவனத்தின் மூலம் முத்திரை பதித்து வருகிறார் பார்த்திபன் முருகையன்.

நுழைவுச்சீட்டுகள் விற்றுத் தீர்ந்த ‘ஹாய் ஒன் யுவன்’ இசை நிகழ்ச்சி, அக்டோபர் 14ஆம் தேதியன்று சிங்கப்பூர் உள்ளரங்கில் நடைபெற்றது. நான்கு மணி நேரம் நீடித்த அந்நிகழ்ச்சியில் புகழ்பெற்ற தமிழ் இசையமைப்பாளரும் பாடகருமான யுவன் சங்கர் ராஜா, உயர்தொழில்நுட்பத்தையும் பிரம்மாண்டத்தையும் கலந்து, வந்திருந்த 11,000 பார்வையாளர்களை மகிழ்வித்தார்.

மேடை அருகே யுவனை மிக அருகில் காண்பதுடன் ஆடுவதற்கும் இடம் ஒதுக்கப்பட்டதைப் பார்வையாளர்கள் பலரும் வரவேற்றனர்.

சிங்கப்பூர் உள்ளரங்கில் ரசிகர்களின் மத்தியில் பாடகர் யுவன் சங்கர் ராஜா. படம்: மேஸ்ட்ரோ புரொடக்‌ஷன்ஸ்

யுவனைப் போன்ற இசைத்துறை ஜாம்பவான்களைக் கொண்டுவரும் நோக்கில் திரு பார்த்திபன் ஆறு ஆண்டுகளுக்கு முன் தன் நிறுவனத்தைத் தொடங்கினார். முதன்முதலாக 2018ஆம் ஆண்டில் நிறுவனம் ‘த ஸ்டார் தியேட்டர்’ அரங்கில் தமிழ்த் திரைப்பட இசையமைப்பாளர் இசைஞானி இளையராஜாவுக்காக நிகழ்ச்சி ஒன்றை ஏற்பாடு செய்திருந்தது.

“பெரிய அளவில் வளர்ச்சி காணும் துறைக்கான ஆற்றல், இதில் உண்டு என்பதை விரைவில் நான் உணர்ந்தேன்,” என்றார் 51 வயது திரு பார்த்திபன்.

‘மேஸ்ட்ரோ’வின் நிர்வாக இயக்குநரும் சிராங்கூன் ரோட்டிலுள்ள ‘இஷ்தாரா ஜுவல்லரி’ கடையின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநருமான பார்த்திபன், தன் மனைவி ஜெசிக்காவின் ஆதரவுடன் செயலாற்றி வருவதாகக் குறிப்பிட்டார்.

(இடமிருந்து) மேஸ்ட்ரோ புரொடக்‌ஷன்ஸ் இயக்குநர் சுகுமார் குருசரவணன், பாடகர் யுவன் சங்கர் ராஜாவின் மனைவி ஸஃப்ரூன் நிசா, யுவன், திரு பார்த்திபன் முருகையன், அவரின் மனைவி ஜெசிக்கா. படம்: மேஸ்ட்ரோ புரொடக்‌ஷன்ஸ்

இவரின் பிரதான குழுவில் 10 உறுப்பினர்கள் உள்ளனர். நிகழ்ச்சித் தயாரிப்பு மற்றும் விளம்பரப் பணிகளை நிறுவனத்தார் கையாள்கின்றனர். ஊழியர்கள் சிங்கப்பூர், லண்டன், டொரோன்டோவில் இருந்தவாறு இயங்கிவருகின்றனர்.

உயர்தரமான இசை நிகழ்ச்சிகளுக்கு என்றும் தேவை இருப்பதாகக் குறிப்பிட்ட திரு பார்த்திபன், சிங்கப்பூரின் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் பெரும்பாலும் தாங்கள் வழங்கும் படைப்பைச் சிறந்த முறையில் அமைப்பதில்லை என்றார்.

மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள பிரபல இந்திய இசையமைப்பாளரும் பாடகருமான அனிருத் ரவிசந்தர், இவ்வாண்டு மார்ச் 4ஆம் தேதியன்று சிங்கப்பூர் உள்ளரங்கில் நிகழ்ச்சி படைப்பதாக இருந்தபோது ஒரே நாளில் ஒட்டுமொத்த 12,000 நுழைவுச்சீட்டுகளும் விற்றுத் தீர்ந்தன.

இந்திய-அமெரிக்கப் பாடகர் சித் ஸ்ரீராமின் நிகழ்ச்சியை 2020ஆம் ஆண்டு மே மாதத்தில் மேஸ்ட்ரோ படைப்பதாக இருந்தபோது கொள்ளைநோய் காரணத்தால் அது ரத்தானது. இருப்பினும், ஐந்தில் மூவர் தங்களின் நுழைவுச்சீட்டை வைத்திருந்து கடந்த ஆண்டு நவம்பரில் த ஸ்டார் தியேட்டரில் நிகழ்ச்சி நடைபெற்றபோது பயன்படுத்திக்கொண்டனர்.

மேஸ்ட்ரோவின் ஏற்பாட்டில் நடைபெறும் நிகழ்ச்சிக்கு $2 மில்லியன் வரை செலவாகக்கூடும். இதன் மூலம் 30% முதல் 50% வரை லாபம் ஈட்ட முடிவதாக திரு பார்த்திபன் கூறியதுடன் இது மகிழ்ச்சி தரும் விழுக்காடு என்று குறிப்பிட்டார். 2017ஆம் ஆண்டில் நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யத் தொடங்கியபோது தோல்வி மட்டுமே எஞ்சியதாக அவர் பகிர்ந்துகொண்டார்.

தந்தையின் நகைக்கடை வியாபாரத்தை அவர் தனது 23வது வயதில் ஏற்று நடத்தத் தொடங்கிய நிலையில், இசை மீது இருந்த ஈடுபாட்டால் அத்துறையிலும் கால்பதிக்க எண்ணினார்.

இசையமைப்புத் துறைக்குள் காலடி எடுத்துவைத்ததுடன் தானே அனைத்து வேலைகளைச் செய்திடவும் முடிவெடுத்தார்.

பிரபல தைவானியப் பாடகர் எரிக் சாவ், சிங்கப்பூர் கலைஞர் ஜேஜே லின், பிரிட்டிஷ் குழு ‘கோல்டுபிளே’, தென்கொரியக் குழு ‘பிளேக்பிங்க்’ போன்றோரின் இசை நிகழ்ச்சிகளுக்கு திரு பார்த்திபன் தன் குழுவினருடன் சென்று அங்குக் காணப்பட்ட பயனுள்ள அம்சங்களை உள்வாங்கிக்கொண்டார்.

விக்டோரியா பள்ளியிலும் கத்தோலிக்க தொடக்கக் கல்லூரியிலும் பயின்ற திரு பார்த்திபன், இந்தத் துறையில் பணத்தை மட்டும் முதலீடு செய்வது போதாது என்றார்.

“ரசிகர்களின் விருப்பத்தை அறிந்திருக்க வேண்டும். நுழைவுச்சீட்டு விலை குறித்த தெளிவு வேண்டும். கலைஞரை நன்கு கையாளத் தெரிந்திருக்க வேண்டும். இந்த வட்டாரத்தில் எந்தக் கலைஞருக்கு மதிப்பு உண்டு என்பதையும் உணர வேண்டும்,” என்றார் அவர்.

அனிருத்தின் இசை நிகழ்ச்சித் தயாரிப்புக்கு வழக்கமான நிகழ்ச்சித் தயாரிப்பை ஒப்பிடுகையில் மும்மடங்குச் செலவானது. 360 டிகிரி பார்வையாளர் அனுபவத்தை இந்நிகழ்ச்சி வழங்கியது. பார்வையாளர்கள் அந்த அனுபவத்தில் லயித்துப் போனதை அடுத்து மேஸ்ட்ரோ அதே 360 டிகிரி அனுபவத்தை யுவனின் இசை நிகழ்ச்சியின்போதும் வழங்கியது.

“இளைய தலைமுறையினரைப் பொறுத்தவரை அமர்ந்து பார்ப்பது மட்டும் ஒரு நிகழ்ச்சி அல்ல. நண்பர்களுடன் ஓர் ஒன்றுகூடலுக்குப் போவது போன்றது. நான்கு மணிநேரத்திற்கு மக்கள் தங்களின் பிரச்சினைகளை மறந்து இன்பமாகப் பொழுதைக் கழிக்கவேண்டும்,” என்றார் திரு பார்த்திபன்.

சிங்கப்பூர், கனடா, பிரிட்டன் ஆகிய நாடுகளில் ஐந்து இந்திய இசை நிகழ்ச்சிகளை இவ்வாண்டு நடத்த திரு பார்த்திபன் திட்டமிட்டுள்ளார். அடுத்த ஆண்டு மேற்கத்திய, தென்கொரிய, பாலிவுட் இசை அங்கங்களையும் சேர்த்துக்கொள்ள எண்ணியுள்ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!