சிங்கப்பூரின் வரலாற்றை நினைவுகூரும் அதே நேரத்தில் நம் சாலைகளில் களைகட்டிய கைத்தொழில்களை மறக்க முடியாது. முன்னோடிகளிடமிருந்து கற்றுக்கொண்டு தங்களைத் தொடர்ந்து நாடி வரும் வழக்கமான வாடிக்கையாளர்களைக் கருத்தில் கொண்டு தொழிலைத் தக்க வைக்கும் ஒரு சிலரில் சலவைத் தொழிலாளியான அறிவழகன் சுப்பையாவும் ஒருவர். தனக்குப் பிறகு இந்தத் தொழிலை முன்னெடுத்துச் செல்ல யாரும் இல்லை என வருந்தும் இவரின் தொழிலையும் அனுபவங்களையும் தமிழ் முரசு கேட்டு வந்தது.
அவசர காலத்திற்கு சலவை அறைக்குள் சென்று, துணிகளைத் துவைக்கும் இயந்திரத்தில் போட்டு அது விரைவாக துவைத்துத் தரும் காலம் இப்பொழுது இருக்கையில், ஐந்து கிலோ இஸ்திரி பெட்டியைப் பிடித்து துணிகளுக்கு இஸ்திரி போட்டு, துணிகளை மாவுப் பொருளை வைத்து தேய்த்து, கல்லில் அடித்து இயற்கையான முறையில் வெயிலில் காய வைத்து, நீராவியில் துணியை அவித்து, இன்னும் பாரம்பரிய முறையில் சலவைச் சேவைகளை அளித்து வருகிறார் அறிவழகன் சுப்பையா, 59.
இக்கலாசாரம் இப்போது மலையேறிவிட்டாலும் இரண்டாம் தலைமுறையாக இந்தத் தொழிலை அவர் தொடர்ந்து வருகிறார். நோரிஸ் சாலை, பொத்தோங் பாசிர், மெக்பர்சன் ஆகிய இடங்களில் ஆரம்பத்தில் இயங்கிக்கொண்டிருந்த ப.சுப்பையா சலவை, உலர் சலவை எனும் இக்கடை, செயின்ட் ஜார்ஜ்ஸ் சாலையில் கடையின் பாரம்பரியத்தைக் கட்டிக்காக்கும் விதமாக மாற்றப்படாத பெயர் பலகையும் பழங்காலத்துக் கடையாக பெரிதளவில் மறுசீரமைப்புப் பணிகள் நடைபெறாமல் தோற்றமளிக்கிறது.
45 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் இந்தக் கடையை முதலில் தொடங்கி வைத்தது அறிவழகனின் தந்தையான பக்கிரி சுப்பையா. தமிழகத்தின் மன்னார்குடி நகரத்திலிருந்து சிங்கப்பூருக்கு குடிபெயர்ந்த அறிவழகனின் பெரியப்பா சிங்கப்பூரில் ஏற்கெனவே சலவைத் தொழிலை நடத்தி வந்தார். அண்ணனிடமிருந்து தொழிலைக் கற்றுத்தேர்ந்த பக்கிரி சுப்பையா பின்னர் அதை முன்னெடுத்துச் சென்றார்.
தொழிலின் நுணுக்கங்களைக் கற்றுத்தேற அறிவழகனுக்குத் தொடக்கத்தில் கடினமாக இருந்தாலும், இப்போது அவர் எளிதாக கனமான இஸ்திரிப் பெட்டியைத் தூக்கி பிடித்து பத்திலிருந்து பதினைந்து துணிகள் வரை தேய்த்து விடுவார்.
இரண்டு அண்ணன்களோடு பிறந்த அறிவழகன் தந்தையின் மறைவுக்குப் பிறகு அவரின் தொழிலை அழியவிடாமல் சுயமாக நடத்தி வருகிறார். சிறு வயதிலேயே இந்தத் தொழிலுக்கு அறிமுகமான அறிவழகன், தந்தையைப் பார்த்து அவருக்கு சலவைத் தொழில் நடத்துவது எளிதாக புலப்பட்டது.
“தொடக்கத்தில் எனக்கு இந்தத் தொழிலைக் கற்றுக்கொள்ள ஒரு துளி நாட்டமும் இல்லை. நான் என் நண்பர்களோடு நேரத்தைப் போக்கிக்கொண்டிருந்தேன். ஆனால் அப்பாவுடன் கடையில் கூடவே இருந்து எனக்கு இது பழக்கமானது. இன்று இந்தத் தொழிலை விரும்புவதால் ஈடுபாட்டுடன் தொழிலைப் பாதுகாக்கிறேன்,” என்றார் அறிவழகன்.
கண்ணுக்குத் தென்படும் இடங்களில் செயல்பட்டு வந்த இந்திய சலவைக் கடைகள் இப்போது மறைந்துவிட்ட நிலையில் சிங்கப்பூரின் கடைசி இந்திய சலவைத் தொழிலாளியாக நிலைநாட்டி நின்றாலும் தனக்குப் பிறகு தமது மகன்கள் இருவரும் இந்தத் தொழிலை முன்னெடுத்து செல்லப்போவதில்லை எனும் உண்மையை ஏற்றுக்கொள்ளும் மனப் பக்குவத்துக்கு வந்துவிட்டார் அறிவழகன்.
தொடர்புடைய செய்திகள்
நவீன சலவைக் கடைகள் குவிந்துள்ள நிலையில் நேரத்தை மிச்சப்படுத்தும் விதத்தில் அவை இயங்கி வந்தாலும் பாரம்பரிய சலவைத் தொழிலுக்கு உரிய சிறப்பு தனி தான் என்கிறார் அறிவழகன். பெண்கள் விரும்பி அணியும் சேலை முதலானதை நீராவி செய்த பின் மாவுப் பொருளை வைத்து தேய்த்து இயந்திரத்தில் துவைத்து வெயிலில் காய வைத்து இஸ்திரி போட்டால் சேலை அழகாக இருக்கும் என்றார்.
அனைத்துவிதமான துணிகளுக்கும் சலவை சேவை அளித்துவரும் இவருடைய கடைக்குப் பாரம்பரிய சலவை சேவைகளை நாடும் வாடிக்கையாளர்களும் கோயில்களும் வழக்கமான வாடிக்கையாளர்களாக இருக்கின்றன.
தற்போது அறிவழகனுடன் ஒரே ஒரு வெளிநாட்டு ஊழியர் தான் பணியாற்றி வருகிறார். அன்றாடம் செயல்படும் இந்தக் கடையில் ஊழியர் விடுமுறை எடுப்பது மிக கடினமாக இருப்பதால் யாரும் பெரிதாக இதில் சேவையாற்றுவதில் ஈடுபாடும் காட்டுவதில்லை.
பல ஆண்டுகளாக இங்கு பணிபுரிந்து வரும் ஊழியரான சிதம்பரம் தண்டாயுதபாணி, “நான் இந்த வேலையைத் தவிர்த்து வேறு எந்த இடத்திலும் பணிபுரிந்ததில்லை. இந்தத் தொழில் இருக்கும் கடைசி நாள் வரை நான் வேலை பார்த்து கொண்டிருப்பேன். அதற்குப் பிறகு மீண்டும் நான் தமிழகத்திற்குச் சென்று விடுவேன் என்று நம்புகிறேன். சிங்கப்பூரில் மற்ற வேலை பார்த்த அனுபவமும் எனக்கு இல்லை,” என்று தெரிவித்தார்.
தனக்கு வாழ்வு தந்த இந்தத் தொழில் இன்னும் சில காலங்களில் மறைந்துவிடும் என்றாலும் 40 ஆண்டுகளுக்கு மேலாக தொழிலை இவ்வளவு நாள் வெற்றிகரமாக நடத்திவரும் அறிவழகன் தனது தந்தையின் பெயரைக் காக்கும் விதத்தில் தொழிலைக் கொண்டு செல்கிறார்.

