‘கோபியோ சிங்கப்பூர்’ எனப்படும் சிங்கப்பூரிலுள்ள இந்திய வம்சாவளி மக்களுக்கான அனைத்துலக அமைப்பு அண்மையில் புதிய பெண்கள் பிரிவைத் தொடங்கியுள்ளது.
உலகளவில் 40 நாடுகளில் இயங்கிவரும் இந்த அமைப்பு, சிங்கப்பூரில் 21 ஆண்டுகளாகச் செயல்பட்டு வருகிறது.
வெவ்வேறு பின்னணியையும் பணிகளையும் சேர்ந்த 12 பெண்கள் இப்பிரிவினை வழிநடத்தும் பொறுப்பினை ஏற்றுக்கொண்டனர். லிஷா உள்ளிட்ட பல்வேறு இந்திய சமூக அமைப்புகளில் பணியாற்றி, கடந்த ஆறாண்டுகளுக்கும் மேலாக கோபியோவில் பங்காற்றிவரும் திருவாட்டி சந்திரிகா விஜயேந்திரன் இப்பிரிவின் தலைவராகப் பொறுப்பேற்றுக்கொண்டார்.
“இப்புதிய பிரிவின் மூலம் பெண்களை ஊக்குவிக்கவும் அவர்களை பல்வேறு வழிகளில் மேம்படுத்தவும் பல புத்தாக்க முயற்சிகளை முன்னெடுக்க உள்ளோம். மேலும், உலகளவில் ஒட்டுமொத்த பெண்கள் சமூகத்தை ஒன்றுபட்ட திறன்மிக்க சமூகமாக உருவாக்க முனைவோம்,“ என்று திருவாட்டி சந்திரிகா சொன்னார்.
இம்மாதம் 28ஆம் தேதி மாலை 6 மணிமுதல் ‘பெனின்சுலா எக்ஸ்செல்சியர்’ ஹோட்டலில் நடைபெற்ற இத்தொடக்க விழாவில் மத்திய சிங்கப்பூர் மாவட்ட மேயர் டெனிஸ் புவா சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.
“சமூகத்தில் பெண்களின் பங்களிப்பு மகத்தானது. ஓர் உயிரை உருவாக்குவதிலிருந்து, பல பொறுப்புகளையும் ஏற்றுக்கொண்டு, தொடர்ந்து பன்முகத்துடன் இயங்கிவரும் பெண்கள் போற்றுதலுக்குரியவர்கள். உலகளவில் 40 நாடுகளில் இயங்கிவரும் ‘கோபியோ’ அமைப்பில் சிங்கப்பூரிலே முதல்முறையாக பெண்கள் பிரிவு தொடங்கப்பட்டுள்ளது. பெண்களை ஊக்குவிக்கும் வண்ணம் தொடங்கப்பட்டுள்ள இம்முயற்சி பாராட்டுதலுக்குரியது,“ என்று கூறினார் திருவாட்டி புவா.
முன்னதாக துவக்க உரையாற்றிய ‘கோபியோ’ சிங்கப்பூர் அமைப்பின் தலைவரும் தமிழ் மொழிப் பண்பாட்டுக் கழகத் தலைவருமான திரு ஹரிகிருஷ்ணன், “பல்வேறு துறைகளில் சாதனை படைத்துவரும் பெண்களின் திறன்கள் அங்கீகரிக்கப்படவேண்டும். அவர்களை ஊக்குவிப்பதோடு அவர்கள் முன்னேற்றப்பாதையில் தொடர்ந்து பயணம் செய்வதற்கான வாய்ப்புகளையும் அளிக்க வேண்டும். அவ்வகையில், இப்புதிய பெண்கள் பிரிவு பல பெண் உறுப்பினர்களை இணைத்து பல சமூகப் பணிகளை முன்னெடுத்து நடத்த வாழ்த்துகிறேன்,“ என்றார்.
இந்நிகழ்வின் சிறப்பு அங்கமாக ‘சமூகத்தை வழிநடத்தும் ஆற்றலை பெண்கள் பெற்றுள்ளனரா?’ என்ற தலைப்பில் பல்வேறு துறைகளில் சாதித்த பெண்கள் கலந்துகொண்ட கலந்துரையாடல் அங்கம் இடம்பெற்றது. பெண்களின் பன்முகத்திறன்கள், குடும்பத்தையும் பணியினையும் லாவகமாகக் கையாளும் திறன், பெண்கள் எதிர்கொள்ளும் நேரடி, மறைமுக சமூக இடர்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு கருத்துகள் இவ்வங்கத்தில் கலந்துரையாடப்பட்டன.
தொடர்புடைய செய்திகள்
பல்வேறு சமூக அமைப்புகளின் தலைவர்களும் உறுப்பினர்களும் கலந்துகொண்ட இந்நிகழ்வில் நடனம், இசைக் கச்சேரிகள் உள்ளிட்ட கலை நிகழ்வுகளும் இடம்பெற்றன.
அத்துடன், அதிர்ஷ்டக் குலுக்கல் போட்டிகளும் வெற்றிபெற்றவர்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டன.

