சிங்கப்பூர் வானொலியில் படைப்பாளராகவும் தயாரிப்பாளராகவும் பல ஆண்டுகள் பணியாற்றிய திருவாட்டி பிச்சையம்மாள் பழனியாண்டி திங்கட்கிழமையன்று (நவம்பர் 13) காலமானார். அவருக்கு வயது 74. அவர் தன்னுடைய கணவர், இரு மகன்கள், மருமகள் மற்றும் ஒரு பேத்தியை விட்டுச் சென்றுள்ளார்.
இவருடைய நல்லுடல் மண்டாய் தகனச்சாலையில் நேற்று (நவம்பர் 14) மாலை 4.15 மணியளவில் எரியூட்டப்பட்டதாக குடும்பத்தினர் தெரிவித்தனர்.
25 ஆண்டுகளுக்கும் மேலாக வானொலியில் பணியாற்றிய இவர் பல்வேறு மொழிசார் நிகழ்ச்சிகளைத் தயாரித்துள்ளார். தமிழ்மொழியில் அதீத ஈடுபாடும் ஆர்வமும் கொண்ட இவரின் செய்தி உச்சரிப்பு பலரின் பாராட்டைப் பெற்றது.
தொலைக்காட்சியிலும் இவர் தமிழ் செய்தி வாசிப்பாளராகவும் இருந்துள்ளார்.
1990களில் வானொலியில் ஓராண்டிற்கும் மேலாக தொடராக ஓடிய ராமாயண இதிகாச நாடகத்தை இவர் எழுதி, இயக்கினார். அக்காலத்தில் இந்த நாடகம் ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பைப் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
“சில ஆண்டுகளாக சிறுநீரக உடற்கோளாறால் அவதியுற்ற என் மனைவி ரத்த சுத்திகரிப்பு உள்ளிட்ட சிகிச்சைமுறைகளை மேற்கொண்டு வந்தார். இறுதியாக எங்களை விட்டுப் பிரிந்து இறைவனடி சேர்ந்துவிட்டார்,” என்று ஆழ்ந்த துயருடன் கூறினார் அவரின் கணவர் திரு பழனியாண்டி பக்கிரிசாமி, 84.
“அவருடன் ஒலி 96.8 வானொலியில் பணியாற்றிய காலங்கள் மறக்கமுடியாதவை. அவர் தயாரித்த ராமாயண நாடகத்தில் எனக்கு ஆஞ்சநேயர் கதாபாத்திரம் கொடுத்து, அதில் எவ்வாறு நடிக்க வேண்டும் என்ற உத்திகளையும் கற்றுக்கொடுத்தார். வானொலி அறிவிப்புகளைத் தெளிவாக உச்சரித்து படைப்பதில் வல்லவர். வானொலி அறிவிப்புக் கலையில் எனக்கு பலவற்றைச் சொல்லிக்கொடுத்தவர்,” என்று நினைவுகூர்ந்தார் தமிழ்முரசு நாளிதழின் இணை ஆசிரியரான திரு வீ. பழனிச்சாமி, 60.
“அவர் எனக்கு ஒரு வழிகாட்டியாகவும் தாயாகவும் இருந்தார். அனைவரிடமும் அன்பு, பணிவு, மரியாதையுடன் பழகக்கூடியவர். என்னுடைய தமிழ்மொழிப் பயன்பாட்டிற்கு அவரே காரணம். அவருடைய மறைவு ஈடுகட்ட முடியாத ஓர் இழப்பு,” என்று கண்ணீருடன் பகிர்ந்துகொண்டார் தற்சமயம் பகுதிநேர விரிவுரையாளராகப் பணியாற்றிவரும் திருவாட்டி தேவகி சிங்காரவேலு, 53.
தொடர்புடைய செய்திகள்
திருவாட்டி பிச்சையம்மாள் இயக்கிய ராமாயண இதிகாச வானொலி நாடகத்தில் சீதா கதாபாத்திரத்தில் தான் பங்குபெற்றது தன் வாழ்வில் கிடைத்த பெரும் வாய்ப்புகளில் ஒன்று. அவருடன் இணைந்து பணியாற்றிய காலங்களில் அவரிடமிருந்து மொழியாற்றலையும் தலைமைத்துவ பண்புகளையும் கற்றுக்கொண்டதையும் நினைவுகூர்ந்தார் திருவாட்டி தேவகி.
“தமிழ் இலக்கியத்தில் மிகுந்த ஆர்வம் கொண்டவர். தமிழ்மொழியினை மக்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில் பல நிகழ்ச்சிகளைத் தயாரித்து வழங்கியுள்ளார். சிங்கப்பூர் வானொலியின் வளர்ச்சிக்கு வித்திட்டவர்களில் இவரும் ஒருவர்,” என்று கூறினார் அவருடன் இணைந்து பணியாற்றியுள்ள திரு என்.எஸ். நாராயணன், 64.