சிங்கப்பூர் இந்திய வர்த்தக, தொழில் சபையின் முதல் பெண் நிர்வாக இயக்குநர்

சிங்கப்பூர் இந்திய வர்த்தக, தொழில் சபையின் முதல் பெண் நிர்வாக இயக்குநர்

2 mins read
6de7946d-de4b-40fb-b59f-d89c8469bd36
ஜமுனா ராணி கோவிந்தராஜூ. - படம்: ஜமுனா ராணி கோவிந்தராஜூ

சிங்கப்பூர் இந்திய வர்த்தக, தொழில் சபை அதன் முதல் பெண் நிர்வாக இயக்குநராக திருவாட்டி ஜமுனா ராணி கோவிந்தராஜூவை நியமித்துள்ளது.

இவர் 26 ஆண்டுகளுக்கு மேலாக கல்வித் துறையிலும் சமூக சேவைத் துறையிலும் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். முதல்முறையாக சிங்கப்பூர் இந்திய வர்த்தக, தொழில் சபையில் தொழில் சார்ந்த பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.

நிர்வாக இயக்குநர் என்ற பொறுப்பின்கீழ் சபையின் செயல்பாடுகளில் ஈடுபடுதல், உறுப்பினர்களின் விருப்பங்களை ஆதரித்தல், அவர்களின் நலனைப் பாதுகாத்தல், இந்திய தொழில்முனைவர்களின் திறன்களை மேம்படுத்துதல் போன்ற அங்கங்களில் கவனம் செலுத்தி வருகிறார் இவர்.

பன்முகத்தன்மை, பாலின சமத்துவம், பணியிடத்தில் அனைவரையும் உள்ளடக்கும் தன்மை, தலைமைத்துவ பதவிகளில் பெண்களின் முன்னேற்றம் ஆகிய அம்சங்களை ஜமுனாவின் நியமனம் மூலம் சிங்கப்பூர் இந்திய வர்த்தக, தொழில் சபை ஊக்குவித்துக் குறிப்பிடத்தக்க முயற்சி எடுத்துள்ளது.

இதுவரை பெண் நிர்வாக இயக்குநர் நியமிக்கப்படாத நிலையில் சபையின் அமைப்புமுறைக்கு ஜமுனா புதிதாக அறிமுகமானதால் சில சவால்களுக்கு ஆளானார். ஆனால், சபையில் இருக்கும் உறுப்பினர்களின் ஆதரவு குறிப்பாக தலைவர் நீல் பரேக் ஜமுனாவுக்கு பேராதரவாக இருக்கிறார்.

“பெண்கள் ஆண்களுக்கு நிகராகக் கடுமையாக உழைக்க வேண்டும். பெண்களுடன் பணிபுரியும் ஆண்களும் அவர்களுக்கு ஆதரவுக்குரல் தர வேண்டும். இவை இரண்டும் இருந்தால் எந்த பெண்ணாலும் ஆண் ஆதிக்கம் நிறைந்த துறையில் சாதிக்க முடியும்,” என்றார் ஜமுனா.

ஆசிரியர் பணியில் தொடங்கி பிறகு சமூக சேவைத் துறைக்கு மாறிய ஜமுனா வெளிநாடுகளில் பணிபுரிந்த அனுபவம் உள்ளவர். ஈராண்டு ஒப்பந்த காலத்தில் அவர் இந்தோனேசியாவின் தலைநகர் ஜகார்த்தாவில் ஆசிரியராகப் பணியாற்றினார். மக்கள், கலாசாரம் என அனைத்தும் புதிதாக இருந்த சூழலுக்கு அறிமுகமான ஜமுனா, அதன் மூலம் கிடைத்த அனுபவப் பாடங்கள், தமது புதிய பொறுப்புக்குக் கைகொடுக்கும் என்று நம்புகிறார்.

சிங்கப்பூர் இந்திய வர்த்தக, தொழில் சபை 99 ஆண்டுகளுக்கு முன்பு நிறுவப்பட்டதை அடுத்து சிங்கப்பூரில் இயங்கி வரும் பெரும்பாலான இந்திய தொழில்களின் வளர்ச்சிக்குத் தூணாக இருந்து வருகிறது. அதைத் தொடர்ந்து ஜமுனா இத்தொழில்கள் அனைத்துலக அளவிலும் விரிவாக்கம் பெறுவதற்கு உதவிக்கரம் நீட்ட முனைந்து வருகிறார்.

தொழில்முனைவர்களுக்கு மேலும் அதிகமான தொழில் வாய்ப்புகளை அளிக்க வேண்டுமென்று கூறிய ஜமுனா, சபையில் இளம் தொழில்முனைவர்கள் சேர்ந்து தங்களுக்கு அளிக்கப்படும் உதவிகளைப் பயன்படுத்திக்கொள்ளுமாறு ஊக்குவித்தார்.

சபையில் உறுப்பினர்களுக்கு அதிக நடவடிக்கைகள் ஏற்பாடு செய்தல், வர்த்தகம் சார்ந்த வெளிநாட்டுப் பயணங்களில் சேர்தல் முதலியவற்றுடன் ஜமுனா அடுத்தாண்டு நடக்கவிருக்கும் சபையின் 100வது ஆண்டு விழா கொண்டாட்ட ஏற்பாடுகளில் முழுவீச்சாக ஈடுபட்டு வருகிறார்.

குறிப்புச் சொற்கள்