சிங்கப்பூரின் பன்மொழி இலக்கிய விழாவான சிங்கப்பூர் எழுத்தாளர் விழா வெள்ளிக்கிழமை (நவம்பர் 17) கோலாகலமாக தொடங்கியது. ஆண்டுதோறும் நடைபெறும் இவ்விழா இம்மாதம் 17ஆம் தேதியிலிருந்து 26ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.
தி ஆர்ட்ஸ் ஹவுஸ் ஏற்பாட்டில் நடைபெறும் இவ்விழாவில் சிங்கப்பூரின் நான்கு ஆட்சிமொழிகளிலும் பல்வேறு நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன. 26வது முறையாக நடைபெறும் இவ்விழாவின் இவ்வாண்டின் கருப்பொருள் ‘திருப்புமுனை’ ஆகும். நாடகம், கலந்துரையாடல், பயிலரங்கு, சொற்பொழிவு என பல்வேறு தமிழ் நிகழ்ச்சிகளும் இடம்பெறும்.
தொடக்க விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட அதிபர் தர்மன் சண்முகரத்னத்தின் துணைவியாரான திருவாட்டி ஜேன் இட்டோகி, “வெவ்வேறு பின்னணியிலிருந்து வரும் எழுத்தாளர்கள் சிங்கப்பூரில் ஒன்றுகூடும் இவ்விழா பல்வேறு கலாசாரங்களை இணைக்கும் பாலமாக அமைகிறது. எழுத்தாளர்களும் பார்வையாளர்களும் தங்களுடைய தொடர்புகளை ஆழப்படுத்தி புரிதலை மேம்படுத்திக்கொள்ளும் தளமாகவும் இது இருக்கிறது,” என்று கூறினார்.
இவ்வாண்டு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் 200க்கும் மேற்பட்ட நேரடி நிகழ்ச்சிகளில் ஏறத்தாழ 260 உள்ளூர் மற்றும் அனைத்துலக எழுத்தாளர்கள் பங்குகொண்டு பல்வேறு புதுமைகளை படைக்கவுள்ளனர் என்று இவ்விழாவின் இயக்குநர் திருவாட்டி பூஜா நான்சி தெரிவித்தார்.
தொடக்கவிழாவின் சிறப்பு அம்சமாக ‘மனிதர்களைத் தாண்டிய சிறந்த எழுத்தாளரா செயற்கை நுண்ணறிவு?’ என்ற தலைப்பில் பட்டிமன்றம் ஒன்று நடைபெற்றது. எட்டுப் பேச்சாளர்கள் இப்பட்டிமன்றத்தில் கலந்துகொண்டு பேசினர்.
செயற்கை நுண்ணறிவு குறிப்பாக ‘சாட்ஜிபிடி’ பயன்படுத்துவதில் உள்ள பயன்களையும் அதனால் எவ்வாறு எழுத்து பரிமாணங்கள் மேம்படுகிறது என்பதை விளக்கியும் ஒரு அணி பேசியது. மனிதர்களின் எழுத்துகளில் உள்ள புத்தாக்க சிந்தனையும் மனதை நெருடும் கருத்துகளையும் செயற்கை நுண்ணறிவால் ஈடுசெய்ய இயலாது என்று எதிர் அணியும் வாதிட்டது.
செயற்கை நுண்ணறிவை ஆதரித்து பேசிய அணியில் சிலர், தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இயந்திரக் குரலிலும் காணொளி வாயிலாகவும் பேசினர். இது பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்ததோடு பலரின் பாராட்டையும் பெற்றது. இத்துடன் பார்வையாளர்களுடனான கேள்வி பதில் அங்கமும் இடம்பெற்றது.
இவ்வாண்டு நடைபெறும் சிங்கப்பூர் எழுத்தாளர் விழா குறித்த மேல்விவரங்களுக்கு https://www.singaporewritersfestival.com இணையத்தள முகவரியை நாடலாம்.