சுய உதவிக் குழுக்களான சீனர் மேம்பாட்டு உதவி மன்றம், யுரேஷியர் சங்கம், சிண்டா எனப்படும் சிங்கப்பூர் இந்தியர் மேம்பாட்டுச் சங்கம், யயாசன் மெண்டாக்கி ஆகிய நான்கு குழுக்களும் ஒன்றிணைந்து தங்களின் கல்வியாளர்களுக்கான புதிய கூட்டு கற்றல் விழா ஒன்றை அண்மையில் நடத்தியது.
‘உறவுகளை கட்டியெழுப்புதல், பிணைப்புகளை வலுப்படுத்துதல், ஆற்றல்களை அதிகப்படுத்துதல்’ எனும் கருப்பொருளைக் கொண்ட இவ்விழா சனிக்கிழமை (நவம்பர் 18) காலை 9 மணிமுதல் சிங்கப்பூர் நிர்வாகக் கழகத்தில் நடைபெற்றது.
கல்வியாளர்களின் சுய முன்னேற்றத்தை மேம்படுத்துவதிலும் அவர்களுக்குள்ளான நட்புவட்டத்தை விரிவாக்குவதிலும் கவனம் செலுத்திய இவ்விழாவில் கல்வியாளர்கள், பார்வையாளர்கள், ஊழியர்கள் உட்பட ஏறத்தாழ 300 பேர் கலந்துகொண்டனர்.
இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட தற்காலிக போக்குவரத்து அமைச்சரும் நிதி அமைச்சின் மூத்த துணை அமைச்சருமான சீ ஹொங் டாட், “குறைந்த வருமானம் ஈட்டும் குடும்பத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு கற்பிக்கும் கல்வியாளர்கள் அவர்களுக்கான எதிர்கால வாய்ப்புகளை ஏற்படுத்துவதோடு அவர்களின் ஆற்றல்களையும் வளர்க்கின்றனர். வகுப்புக்கு அப்பாலும் இந்த கற்பித்தல் தொடர்கிறது ,” என்று கூறினார்.
மேலும் இந்த கூட்டு முயற்சி சமூக நல்லிணக்கத்தையும் முக்கியத்துவத்தையும் பறைசாற்றும் வண்ணம் அமைகிறது என்று குறிப்பிட்ட அவர், இதுவரையிலும் சுய உதவிக் குழுக்கள் நிறுவியுள்ள 205 ஒன்றிணைந்த கற்பித்தல் நிலையங்களின் மூலம் ஏறத்தாழ 17,000 மாணவர்கள் கற்று வருகின்றனர் என்றும் தெரிவித்தார்.
விழாவின் ஓர் அங்கமாக முதன்மை ஆசிரியர் டான் செர் சோங்-கின் சிறப்பு சொற்பொழிவு ஒன்று நடைபெற்றது. ‘உணர்வுகளே கவனத்திற்கும் நினைவாற்றலுக்கு அடித்தளம்’ எனும் தலைப்பில் ஆற்றப்பட்ட இவரின் உரைக்கு கல்வியாளர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு கிடைத்தது. இந்த அங்கம் பயனுள்ளதாக இருந்ததாக பலரும் கருத்து தெரிவித்தனர்.
அதனைத் தொடர்ந்து திரு டான் செர் சோங், வழிகாட்டு ஆசிரியர் திருவாட்டி மிஷல் சூ ஆகியோர் பங்குகொண்ட கேள்வி-பதில் அங்கமும் இடம்பெற்றது. மாணவர்களைக் கையாளும் உத்திகளும் அவர்களின் மனப்போக்குகளை புரிந்துகொள்ளும் வழிமுறைகளும் இந்த அங்கத்தில் பேசப்பட்டன.
கல்வியாளர்கள் பயன்பெறும் வகையில் கற்பித்தல் முறைகள் சார்ந்த ஏழு வெவ்வேறு தலைப்புகளில் பாட அங்கங்கள் நடைபெற்றன. கல்வியாளர்கள் தாங்கள் விரும்பிய தலைப்பில் இந்த அங்கங்களில் பங்குகொண்டு பயன்பெற்றனர். விழாவில் சுய உதவிக் குழுக்களின் சாவடிகளும் இடம்பெற்றன.
இது குறித்து சிண்டாவின் தலைமை நிர்வாக அதிகாரி திரு அன்பரசு ராஜேந்திரன் கூறுகையில், “சிறந்த கற்பித்தல் நடைமுறைகளை சுய உதவிக் குழுக்கள் பகிர்ந்துகொள்வதற்கு இந்த விழா ஒரு நல்ல தளமாக அமைகிறது. மாணவர்களின் திறன்கள் மேம்படும் வகையில் சுய உதவிக் குழுக்களின் இந்த இணைந்த முயற்சி மாணவர்களின் வளமான எதிர்காலத்திற்கு வழிவகுக்கும்,” என்று கூறினார்.
இவ்விழாவில் கலந்துகொண்ட சிண்டாவில் 9 ஆண்டுகளாக கல்வியாளராக இருக்கும் திருவாட்டி ஷைலாஷ் குமாரி, 56, “பிற கல்வியாளர்களுடன் கலந்துரையாடி கற்றுக்கொள்ளும் அரிய வாய்ப்பை இவ்விழா தந்துள்ளது. பகிர்ந்துகொள்ளப்பட்ட கற்பித்தல் அனுபவங்களும் புத்தாக்க வழிமுறைகளும் பயனுள்ளதாக இருந்தன,” என்று கூறினார்.