பாசிர் ரிஸ் பூங்கா கடற்கரையில் ஒன்றுகூடிய உறவுகள்

3 mins read
cf5118b9-5269-4dd6-8e9b-5a99a9f7e846
உறவுகள் ஒன்றுகூடலில் கலந்துகொண்டவர்கள். - படம்: அனுஷா செல்வமணி
multi-img1 of 3

தமிழகத்தின் மன்னார்குடி பகுதியிலிருக்கும் மேலவாசல் கிராமத்தைச் சேர்ந்த மக்கள் பல ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்வாதாரம் தேடி சிங்கப்பூருக்கு இடம்பெயர்ந்தனர்.

அவ்வூர் மக்கள் சிங்கப்பூருக்கு வந்ததும் தங்கள் உறவுகளை மறக்காமல் அவர்களுடன் ஒன்றிணைய ஆண்டுதோறும் ஒன்றுகூடல் நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்து வருகின்றனர்.

ஒரே ஊரில் இருந்து வருவதால் அவர்கள் தங்களின் உறவுகளோடு எப்பொழுதும் தொடர்பில் இருக்க வேண்டும் என்பதற்காகவும் அவர்களுடனான பாசமும் பந்தமும் நிலைத்து நிற்க வேண்டும் என்பதற்காகவும் கடந்த 2019ஆம் ஆண்டில் அவர்கள் ‘உறவுகள் ஒன்றுகூடல்’ என்னும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தனர்.

மேலவாசலைச் சேர்ந்த மக்களை சமூக நிகழ்வுகள், கோவில்கள், குடும்ப விழாக்கள் போன்றவற்றின் மூலம் அடையாளம் கண்டு, அவர்கள் ஒன்றாக கைகோத்து அந்த நிகழ்வுக்கு ஏற்பாடு செய்தனர்.

கொவிட்-19 கிருமித்தொற்று கட்டுப்பாடுகளின் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட ஒன்றுகூடல், நாலாண்டு இடைவெளிக்குப் பிறகு இம்மாதம் 19ஆம் தேதி, ஞாயிற்றுக்கிழமை காலை பாசிர் ரிஸ் பூங்கா கடற்கரையில் நடைபெற்றது.

நூற்றுக்கும் மேற்பட்டோர் நிகழ்வில் கலந்துகொண்டு தங்கள் நண்பர்களையும் உறவினர்களையும் கண்டு அளவளாவிய மகிழ்ச்சியில் திளைத்தனர்.

காலையில் தொடங்கி கிட்டத்தட்ட மாலை ஐந்து மணிவரை நடைபெற்ற அந்நிகழ்வில் பல குடும்பங்களைச் சேர்ந்த சிறுவர்கள், பெற்றோர்கள், தாத்தா பாட்டி என அனைத்து வயதினரும் ஒன்று திரண்டனர். குடும்பங்களுக்கு நிகழ்வு சலிப்பு தட்டாமல் இருக்கும் வகையில் ‘பாட்டுக்குப் பாட்டு’, ‘இசை நாற்காலி’, ‘பலூன் ஊதும் போட்டி’ போன்ற பல விளையாட்டு அங்கங்கள் இடம்பெற்றன.

இந்த ஒன்றுகூடலில் தன் குடும்பத்தோடு கலந்துகொண்ட திரு வரதராஜன் அண்ணாதுரை, 41, “என் இரு மகன்களும் இந்த நிகழ்வில் மிக உற்சாகமாக இருந்தனர். பரபரப்பாக இருக்கும் வாழ்க்கைச் சூழலில் அவ்வப்போது எங்கள் ஊரைச் சேர்ந்த மக்களைப் பார்க்கும்போது மனத்திற்கு மிகவும் நிறைவாக உள்ளது. உறவுகளை இதுபோன்ற நிகழ்வுகளில் பார்த்துக்கொள்வதால் எங்கள் உறவைப் பேணவும் முடிகிறது,” என்று சொன்னார்.

பிற்பகல் நேரத்தில் மழை மேகங்கள் சற்று எட்டிப் பார்த்த போதிலும், மக்கள் உற்சாகம் குறையாமல் தொடர்ந்து விளையாட்டுகளில் முழுவீச்சில் ஈடுபட்டு வந்தனர்.

மேலவாசல் ஊரைச் சேர்ந்த வெளிநாட்டு ஊழியர் நண்பர்களும் சிலரும் நிகழ்வில் பங்குகொண்டு உறவுகளைக் கண்டு மகிழ்ந்தனர். நண்பகல் உணவுக்குப் பிறகு விளையாட்டுகள் மேலும் சூடுபிடிக்கத் தொடங்கின.

நிகழ்வின் இறுதியில் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு மேலும் ஊக்கந்தரும் வகையில் பரிசுகள் வழங்கப்பட்டன. அத்துடன், கலந்துகொண்டவர்கள் அனைவருக்கும் ‘உறவுகள் ஒன்றுகூடல்’ என்று பெயரிடப்பட்ட அன்பளிப்புப் பைகளும் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சி ஏற்பாட்டுக் குழுவில் இடம்பெற்ற திரு கோவிந்தசாமி பரமசிவம், 58, “2019ல் நாங்கள் முதல் முறையாக நிகழ்விற்கு ஏற்பாடு செய்தபோது நல்ல வரவேற்பு கிடைத்தது. பலர் மறுபடியும் எப்போது இது போன்ற நிகழ்வு நடக்கும் என்று கேட்டதால் நாங்கள் அவர்களின் விருப்பத்திற்கு இணங்கினோம்,” என்றார்.

திரு வரதராஜன் அண்ணாதுரையின் மகனான எட்டு வயது அண்ணாதுரை மிதுன், “எனக்கு இந்த ஒன்றுகூடல் மூலம் நினைக்க முடியாத அளவிற்குப் பல நண்பர்கள் கிடைத்துள்ளனர். விளையாட்டுகளில் கலந்துகொண்டது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. அடுத்த ஆண்டு ஏற்பாடு செய்தால் நான் மீண்டும் வருவேன்,” என்று உற்சாகத்துடன் கூறினார்.

குறிப்புச் சொற்கள்