தங்க முனை விருது 2023

தங்க முனை விருதினை இவ்வாண்டு நான்கு மொழிகளிலும் மொத்தம் 44 பேர் பெற்றுள்ளனர். தேசியக் கலை மன்றத்தின் ஏற்பாட்டில் நடத்தப்படும் இந்தப் படைப்பிலக்கியப் போட்டியில் இவ்வாண்டு ஒட்டுமொத்தமாக 900க்கும் மேற்பட்ட படைப்புகள் சமர்ப்பிக்கப்பட்டன.

ஈராண்டுக்கு ஒருமுறை நான்கு அதிகாரத்துவ மொழிகளிலும் சிறுகதை, கவிதைப் பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டு இவ்விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. 16வது முறையாக இவ்வாண்டு நடைபெற்ற போட்டிகளில் இம்முறை புதிதாக ‘உள்ளூர் சிறுகதைகளுக்கான ஆங்கில மொழிப்பெயர்ப்பு’ எனும் பிரிவு அறிமுகப்படுத்தப்பட்டு விருதுகளும் வழங்கப்பட்டன. டிசம்பர் 2ஆம் தேதியன்று ‘தி ஆர்ட்ஸ் ஹவுஸ்’ அரங்கில் விருது வழங்கும் விழா நடைபெற்றது.     

தமிழ் கவிதைப் பிரிவில் முதல் பரிசினைப் பெற்ற கவிஞர் பா.கங்கா, தன்னைப்பொறுத்தவரை கவிதை என்பது ஆழ்மனதில் உறங்கிக்கொண்டிருக்கும் கனவுகள் என்று வர்ணித்தார். அதிகம் திட்டமிடாமல் இயல்பான மனஓட்டத்தைப் பிரதிபலிக்கும் எழுத்துப் பாணியையே தான் பின்பற்றுவதாகவும் இவர் தெரிவித்தார். 

அரசாங்க ஊழியராகப் பணியாற்றும் இவர், படைப்பாளர்கள் தங்களை மேம்படுத்திக்கொள்ள அதிகம் வாசிக்க வேண்டும் என்றும் சொல்வளத்தை அதிகரிக்க அதுவே அடித்தளம் என்றும் பகிர்ந்துகொண்டார். 

தமிழ் கவிதைப் பிரிவில் இரண்டாவது பரிசினைத் தட்டிச் சென்ற மோகனப்ரியா சந்திரசேகரன், தமிழ் சிறுகதைப் பிரிவிலும் இரண்டாம் பரிசினைப் பெற்றுள்ளார். எந்த ஒரு படைப்பாளருக்கும் ரசனையே அடித்தளம் என்று கூறிய இவர், தன் படைப்புகள் அனைத்துமே உண்மைக்கு நெருக்கமாக இருத்தலை உறுதிப்படுத்திக்கொள்வதாகவும் தெரிவித்தார். 

தனியார் நிறுவனம் ஒன்றில் மாணவர்களுக்குப் பயிற்சியாளராகப் பணிபுரியும் இவர், “நாம் அன்றாடம் கடந்து செல்லும் இயல்பான அம்சங்களில் மிகச்சிறந்த படைப்பிலக்கியக் கருப்பொருள்கள் மறைந்திருக்கும். அவற்றைக் கண்டறியக் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்,” என்றும் கூறினார். மேலும், இரு பிரிவுகளிலும் வென்றிருப்பது இரட்டிப்பு மகிழ்ச்சியளிப்பதோடு அதிக ஊக்கத்தை அளிப்பதாகவும் மோகனப்ரியா தெரிவித்தார்.  

சிங்கப்பூரில் உள்ள பல்வேறு தமிழ் அமைப்புகளின் நிகழ்வுகளும் அந்நிகழ்வுகளில் கிட்டும் தமிழ் ஆளுமைகளின் சந்திப்புகளுமே தனக்குள் இருந்த கவிஞரைக் கண்டறியச் செய்ததாகக் கூறினார் தமிழ் கவிதைப் பிரிவில் மூன்றாவது பரிசினைப் பெற்ற தேன்மொழி அசோக்குமார். 

குடும்பத்தலைவியான 41 வயதாகும் பிரியா ராஜீவ் தமிழ் சிறுகதைப் பிரிவில் முதல் பரிசினைப் பெற்றுள்ளார்.

“வாழ்வின் இடைப்பட்ட காலத்தில் சில ஆண்டுகளுக்கு முன்னரே என் எழுத்தார்வத்திற்கு வித்திட்டேன். இந்த விருது நான் சரியான பாதையில் பயணித்துக் கொண்டிருக்கிறேன் என்ற நம்பிக்கையையும் ஊக்கத்தையும் அளித்துள்ளது,” என்று கூறினார். 

மனதை வருடும் விஷயங்களைப் படைப்புகளாக்குவதில் அதீத ஆர்வம் கொண்டுள்ளார் தமிழ் சிறுகதைப் பிரிவில் மூன்றாவது பரிசினைப் பெற்றுள்ள பானு சுரேஷ், 43. நாடகம், கவிஞர், ஓவியர், எழுத்தாளர் எனப் பன்முகங்களைக் கொண்டுள்ள இவர், “எண்ண ஓட்டத்தை ஒருநிலைப்படுத்தி உருவாக்கும் எந்தவொரு படைப்பும் அந்தப் படைப்பாளியின் பிம்பமே,” என்று கூறினார். இவர் 2021ஆம் ஆண்டின் தமிழ் கவிதைப் பிரிவில் முதல் பரிசினைப் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

கவிஞர்கள் தங்களது படைப்புகளை எழுத்துப் பிழையின்றி சமர்ப்பிப்பதில் அக்கறை செலுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டார் தமிழ் கவிதைப் பிரிவின் நடுவர்களில் ஒருவரான கவிஞர் நெப்போலியன். மூன்றாவது முறையாக நீதிபதியாக இருக்கும் இவர், படைப்புகளின் தரம் இன்னும் மேம்படலாம் என்று தாம் கருதுவதாகவும் தெரிவித்தார்.    

இவரைப் போலவே தமிழ் கவிதைப் பிரிவின் மற்றொரு நடுவரான கவிஞர் இன்பா, “இம்முறை அதிக எண்ணிக்கையிலான படைப்புகள் வந்திருப்பது மகிழ்ச்சியளித்தது. அனைத்து பிரிவுகளிலுமே அதிக அளவிலான பெண்கள் வெற்றி வாகை சூடியிருப்பது வரவேற்கத்தக்க ஒன்று,” என்று கூறினார். 

கருப்பொருளைத் தேர்ந்தெடுப்பதில் எழுத்தாளர்கள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்று கூறினார் தமிழ் சிறுகதைப் பிரிவின் நடுவர்களில் ஒருவரான எழுத்தாளர் சித்ரா ரமேஷ். தொடர்ந்து இரண்டாவது முறையாக நீதிபதியாக இருக்கும் இவர், “வந்திருந்த 72 சிறுகதைகளில் 30 மட்டுமே சிறுகதை வடிவத்தில் இருந்தன. எழுத்துத் துறையில் ஆர்வமுள்ளவர்கள் தங்களை மேம்படுத்திக்கொள்ளும் முயற்சிகளில் ஈடுபட வேண்டும். குறிப்பாக, இளையர்கள் எழுத்துப் பயிலரங்குகளில் கலந்துகொண்டு பயன்பெறலாம்,” என்றும் கூறினார்.  

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!