வெற்றியாளர் யார் என்று ஆவலுடன் திரண்டு பார்த்துக்கொண்டிருந்தனர் போட்டியாளர்கள்.
அவர்கள் மத்தியில் மிகத் துல்லியமாக 80 கிராம் பிராட்டா மாவை, 61 சென்டிமீட்டர் அகலத்தில் புரட்டிப் போட்டார், 39 வயது சோ வய் லுவின்.
மாபெரும் இந்திய உணவுத் திருவிழாவின் இறுதி நாளை முன்னிட்டு பொதுமக்களுக்கு பிராட்டா புரட்டிப்போடும் போட்டி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
ஓட்டை எதுவுமின்றி ஆக அதிக அகலத்திற்கு பிராட்டாவைப் புரட்டிப் போடுபவருக்கு வெற்றி நிச்சயம்.
போட்டியில் வாகைசூடிய சோ வய் லுவின், சிங்கப்பூர் சாதனை புத்தகத்தில் இடம்பெற்று $1,000 பரிசுத்தொகையைத் தட்டிச் சென்றார்.
புரட்டிப் போட்ட பிராட்டாவின் வட்ட வடிவத்தையும் சுற்றளவையும் தற்காத்து மிக இலகுவாக பிராட்டாவைத் தனது விரல்களால் சுழற்றினார் சோ வய் லுவின்.
அவருக்குக் கடுமையான போட்டி கொடுத்து இரண்டாவது, மூன்றாவது நிலைகளில் 500 வெள்ளியையும் 250 வெள்ளியையும் கேஷுரீனா கறி உணவகத்தைச் சேர்ந்த சமையல் வல்லுநர்களான நாகலிங்கம், திருநாவுக்கரசு இருவரும் தட்டிச்சென்றனர்.
கடந்த ஈராண்டுகளாக கேஷுரீனா கறி உணவகத்தில் பணியாற்றிவரும் சோ வய் லுவின், 12 வயதிலேயே தன் தந்தையிடமிருந்து பிராட்டா புரட்டிப்போடும் நுணுக்கங்களைக் கற்றுத்தேர்ந்தார். அது அவருக்கு இப்போது கைதேர்ந்த கலையாகிவிட்டது.
தொடர்புடைய செய்திகள்
மியன்மார் நாட்டைச் சேர்ந்த சோ வய் லுவின், “சிறுவயதில் நான் பிடிவாதம் பிடித்தாலும் என் தந்தை எனக்கு பிராட்டா மாவு தரமாட்டார். ஆனால், அந்த நுணுக்கத்தைக் கரைத்துக் குடித்திட வேண்டுமென்று நான் உறுதியாக இருந்தேன். இன்று நான் வெற்றியாளராக நிற்கிறேன்,” என்று பெருமிதத்துடன் கூறினார்.
பர்ச் சாலையில் அமைக்கப்பட்டிருந்த கூடாரத்தில் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் பொதுமக்கள் போட்டியை ஆர்வத்துடன் காணச் சூழ்ந்துகொண்டனர்.
போட்டியில் 180 பேர் கலந்துகொண்டதை அடுத்து 60 பேர் இறுதிச் சுற்றுக்குத் தகுதிபெற்றனர். அந்த 60 பேரில் 40 பேருக்கு பிராட்டா புரட்டிப் போடுவது இதுவே முதல்முறை.
மீதமுள்ள 20 பேர் இந்திய உணவகங்களில் பணிபுரியும் சமையல் வல்லுநர்கள். இரு பிரிவுகளாக நடத்தப்பட்ட போட்டியில் முதல்முறையாக பிராட்டா புரட்டிப் போடுவோர் பிரிவில் சிறப்பாகத் செய்த மூவர், இறுதிச் சுற்றில் 20 சமையல் வல்லுநர்களுடன் மோதினர்.
அந்த மூன்று பேருக்கும் தலா $50 வழங்கப்பட்டது.
போட்டிக்காக அல் அன்சார் உணவு உற்பத்தி நிறுவனம் கிட்டத்தட்ட 1,000க்கும் மேற்பட்ட பினைந்த பிராட்டா மாவை இலவசமாக வழங்கினர். பயன்படுத்தப்படாத மாவு உணவகங்களுக்கு வழங்கப்பட்டது.
சிங்கப்பூர் சாதனைப் புத்தகத்தில் முதல்முறையாக இந்திய பாரம்பரிய உணவான பிராட்டாவைத் திறமையுடன் புரட்டிப் போடும் போட்டி பற்றி இடம்பெற்றுள்ளது.
கேஷுரீனா கறி உணவகத்தைச் சேர்ந்த இதர சமையல் வல்லுநர்களும் போட்டியில் கலந்துகொண்டு பிராட்டா புரட்டிப் போடுவதில் தங்கள் ஆற்றலை வெளிப்படுத்தினர்.
பிராட்டாவைச் சுழற்றி கீழும் மேலுமாக வீசி வித்தைகள் காட்டி மக்களைக் கவர்ந்தவர்களில் 40 வயது முனிசாமி பாபுலால் என்வரும் ஒருவர்.
“நான் பல ஆண்டுகளாக இந்தக் கலையில் ஈடுபட்டு வருகிறேன். நான் முன்பு இஸ்தானாவுக்குச் சென்று அங்கும் பிராட்டா புரட்டிப் போட்டுள்ளேன்,” என்றார்.
இப்போட்டி சிறுவர்களையும் வெகுவாகக் கவர்ந்தது. சிறார்கள் சிலர் மிக ஆர்வமாக முன்வந்து தைரியமாக பிராட்டா மாவை ஒரு கை பார்த்தனர்.
ஒன்பது வயதாகும் சிறுமி அனன்யா மணிமேகலை, “என்னை உணவுத் திருவிழாவிற்கு அழைத்து வர என் பெற்றோரிடம் சொல்லிருந்தேன். வந்தபோதுதான் இந்தப் போட்டி பற்றி அறிந்தேன். எனக்குப் போட்டிகளில் கலந்துகொள்வது மிகவும் பிடிக்கும்,” என்று கூறினார்.
உணவுத் திருவிழா பற்றி கேள்விப்பட்ட சுற்றுப்பயணிகள் இருவர், இதற்கு முன்பு பிராட்டா பற்றி கேள்விப்பட்டதில்லை. டென்மார்க்கிலிருந்து வந்திருந்த அவர்கள், எதேச்சையாகப் போட்டியில் கலந்துகொண்டனர்.
அவர்களில் ஒருவரான, நிகழ்ச்சி நிர்வாகத் தலைவர், லாஸே ஃபுக்மான் தேம்டுரூப், 24, “எனக்கு பிராட்டா பற்றி ஒன்றும் தெரியாது. ஆனால், பிராட்டாவைச் சுவைத்துப் பார்த்தே தீரவேண்டும்,” என்று புன்னகையுடன் கூறினார்.

