தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

உரமூட்டி, என்னை உருமாற்றியவர் ரஜினிகாந்த்

3 mins read
ரஜினி என்பது ஓர் உணர்வு, ஓர் அதிசயம். அவர் பெயரே ஓர் அதிர்வு, எனக்கு அதுவே வாழ்க்கைமுறை என்று கூறித் தன் புத்தகத்தைத் தொடங்குகிறார் அரிய நோயுடன் போராடும் கே.எஸ். அம்பிகா. இவர் டிசம்பர் 14ஆம் தேதியன்று ‘த ரஜினி இன் மி’ என்ற புத்தகத்தை எழுதி வெளியிட்டிருந்தார்.
ba41224e-3647-4c4d-9f06-c6e8835c4664
தமது சூழ்நிலையைச் சமாளிக்கும் துணிச்சலை நடிகர் ரஜினிகாந்தின் படைப்புகளின்மூலம் பெறுவதாக ‘மல்டிபல் ஸ்க்லெரோசிஸ்’ நோயால் பாதிக்கப்பட்டுள்ள கே.எஸ். அம்பிகா கூறுகிறார். - படம்: டினேஷ் குமார்

இப்படி ரஜினிகாந்தை ரசித்து, வர்ணித்த அம்பிகா, ‘மல்டிபல் ஸ்க்லெரோசிஸ்’ என்ற அரியவகை நோய் தமக்கு உள்ளதை உறுதிசெய்து பதறியபோது, இவர் மனதை உற்சாகப்படுத்தியது ‘ரஜினிகாந்த்’ என்ற விடிவெள்ளிதான் என்றார்.

தனது புத்தகத்தில் கையெழுத்திடும் அம்பிகா.
தனது புத்தகத்தில் கையெழுத்திடும் அம்பிகா. - படம்: கே. எஸ். அம்பிகா

தன் புத்தகத்தை இவர் சென்னையில் வெளியிட்டார். புகழ்பெற்ற உள்ளூர்த் தயாரிப்பாளர் ஜெயா ராதாகிருஷ்ணன் புத்தகத்தின் அட்டைப் படத்தை வடிவமைத்துள்ளார்.

அம்பிகாவுக்கு நோய் இருந்ததை 2013ல் டிசம்பர் 12 அன்று மருத்துவர் உறுதி செய்தார். ரஜினிகாந்தின் பிறந்தநாள் அன்று இது தெரியவந்ததைக் குறிப்பிட்டார் திருவாட்டி அம்பிகா.

அதற்குச் சில மாதங்கள் முன் நடக்க சிரமப்பட்ட திருவாட்டி அம்பிகாவைப் பரிசோதனைக்கு வரும்படி மருத்துவர்கள் அந்த ஆண்டு அக்டோபர் கேட்டுக்கொண்டதாகக் குறிப்பிட்டார். இருந்தபோதும் திருவாட்டி அம்பிகா, 41, தாம் பெரிதும் விரும்பிய பரதநாட்டிய அரங்கேற்றத்தை முடித்துக்கொண்டு பரிசோதனையை மேற்கொண்டார்.

தமது நோயைப் பற்றிக் கேள்விப்பட்ட அதே நாளில், விருது ஒன்றைப் பெற்றுக்கொண்ட திரு ரஜினிகாந்த் பேசியிருந்த ஏற்புரையைக் கேட்டார் அம்பிகா. பேருந்து உதவியாளராக இருந்த தாம், திரைப்படக் கதாநாயகன் ஆனது, அதிசயங்களின் சாத்தியத்தை எடுத்துக் காட்டுவதாக ரஜினிகாந்த் அப்போது கூறிய தொலைக்காட்சிப்பதிவை திருவாட்டி அம்பிகா கண்டார்.

மருத்துவ சிகிச்சை பெற்றுவந்த திருவாட்டி அம்பிகா.
மருத்துவ சிகிச்சை பெற்றுவந்த திருவாட்டி அம்பிகா. - படம்: கே. எஸ். அம்பிகா

‘எனக்கும் அதிசயம் நேரலாம். என்னாலும் நோயிலிருந்து மீள முடியும்’ என்ற எண்ணத்தை திருவாட்டி அம்பிகா தம்முள் விதைத்துக்கொண்டார். அந்த நம்பிக்கை உணர்வு, அவரது உடல்நிலையைச் சில மாதங்களில் மேம்படுத்தத் தொடங்கியது. தற்போது அவர் சக்கர நாற்காலியைப் பயன்படுத்துகிறார்.

பின்னர், 1991ஆம் ஆண்டு நவம்பர் 5ஆம் தேதியான தம் பிறந்தநாளன்று வெளிவந்த ‘தளபதி’ திரைப்படத்தைக் கண்டதிலிருந்து அப்படத்தின் கதையாலும் இசையாலும் தாம் அவரது ரசிகர் ஆனதாக குமாரி அம்பிகா கூறினார்.

அதற்குமுன் திரு ரஜினிகாந்த் நடித்திருந்த பழைய படங்களைச் சிறுமியாகப் பார்த்தபோது பெரிய அளவில் அவற்றில் தாம் ஈடுபாடு காட்டவில்லை என்றார் அக்கா, தங்கையுடன் வளர்ந்த குமாரி அம்பிகா.

ஈசூனில் தமிழ்த் திரைப்படங்கள் மட்டும் காட்டும் திரையரங்குகள் திரையிட்ட முதல் படங்களில் ஒன்றான பாட்ஷாவையும் பார்த்தது இவருக்கு மற்றுமோர் இனிய நினைவு.

பாட்ஷா திரைப்படம் வெளிவந்தபோது அதுபற்றிய பேச்சுதான் எங்கும் ஒலித்தது. பெற்றோருக்குத் தெரியாமல் படம் பார்த்தபோது திரையரங்கு விழாக்கோலம் பூண்டிருந்ததை அம்பிகா நினைவுகூர்ந்தார். இப்படிப்பட்ட திருப்புமுனைகளும் நினைவுகளும் நிறைந்தவை திருவாட்டி அம்பிகா எழுதிய இந்த 280 பக்க நூல்.

திரு ரஜினிகாந்த் திரையுலகத்துக்குள் நுழைந்தபோதும் அந்தக் காலகட்டத்தில் கதாநாயகர்களிடம் எதிர்பார்க்கப்பட்ட லட்சணம் இன்றி வேறுபட்டு காட்சியளித்தார்.

ஆணாதிக்கம் இன்றளவும் நிறைந்துள்ள திரையுலகச் சூழலில் தன்னம்பிக்கை நிறைந்த திரு ரஜினிகாந்த், பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் மன்னன், சந்திரமுகி உள்ளிட்ட திரைப்படங்களின் கதைகளிலும் இடம்பெறுவதை அம்பிகா சுட்டினார்.

எடுத்த காரியத்தைத் திறம்பட முடித்துக்காட்டுவார்; அதேநேரத்தில் தம்மால் என்ன செய்ய முடியாது என்பதிலும் திரு ரஜினிகாந்த் தெளிவாக இருந்தார். இதைத் திருவாட்டி அம்பிகா சுட்டினார்.

“சக்கர நாற்காலியில் இருக்கும் என்னாலும் சிலவற்றைச் செய்யமுடியாது. வேறு சில காரியங்களைத் திறம்பட செய்ய முடியும். எதற்கு முக்கியத்துவம் தரவேண்டும் என்பதைத் தற்போது ஒரு மாற்றுத்திறனாளியாக இருந்து அவரிடம் கற்றுக்கொண்டேன்,” என்று அவர் கூறினார்.

“உங்கள் ரஜினி யார்?” என்பதே திருவாட்டி அம்பிகா, தம் வாசகர்களுக்கு முன்வைக்க விரும்பும் கேள்வி. நற்குணங்கள் நிறைந்த ஓர் ஆளுமையை மனதில் முன்னிறுத்தும்போது சவால்களை ஒருகை பார்க்கும் தைரியம் ஏற்படும் என்பது அவரது கருத்து.

“உங்களுடன் நீங்களே செலவிடும் நேரமும் தன்னிலை அறிந்துகொள்ள கேள்வி கேட்கும் தன்மையும் காட்டிவிடும்,” என்றார் அம்பிகா.

டிசம்பர் 26ஆம் தேதியன்று அமேசான் தளத்திலும் புத்தகம் வெளியீடு காணும். அடுத்தாண்டு ஜனவரி மாதம் இந்நூல் சிங்கப்பூரிலும் வெளியீடு காணும்.

குறிப்புச் சொற்கள்