கிறிஸ்துமஸ் கேக்குகளையும் பலகாரங்களையும் கிட்டத்தட்ட 10 ஆண்டுகளாக தன் சொந்த வீட்டிலிருந்து தயாரித்து விற்றுவந்த ஷீலா ஜெய், 35, இம்முறை ‘பேஸ்திரிலவ்’ என்ற தம் சொந்தக் கடையிலிருந்து தயாரிக்கத் தொடங்கியுள்ளார்.
இந்தத் தொழில்மீதான ஆர்வம் அவர் தமது இருபது வயதுகளில் இருந்தபோது தொடங்கியது.
தமக்குத் தெரிந்த கேக் வகைகளில் பெரும்பாலானவற்றை இவர் சுயமாகச் செய்யக் கற்றுக்கொண்டார்.
கேக் செய்யக் கற்றுக் கொடுக்கும் வகுப்புகளுக்கான ஓர் இடத்தில் தொடக்கத்தில் தட்டுக் கழுவுபவராகச் சேர்ந்த திருவாட்டி ஷீலா, அங்கு படிப்படியாகத் தமது சமையல் திறன்களை வளர்த்துக்கொண்டார். இப்போதும் இவர் தனியாகவே எல்லாவற்றையும் செய்கிறார்.
திருவாட்டி ஷீலா உருவாக்கும் புதுமையான பலகாரங்களில் ‘கன்ட்ஸ்ரக்ஷன் ஜிஞ்சர்பிரெட்’ (construction gingerbread) வீட்டு மாதிரியை வாடிக்கையாளர்கள் விரும்பி வாங்குவதாகக் குறிப்பிட்டார்.
இத்தகைய பதார்த்தத்தை ஈராண்டுகளுக்கு முன்பு இவர் விற்க ஆரம்பித்தார்.
“வெல்லப்பாகு, சாதிக்காய், இலவங்கப்பட்டை ஆகியவை இந்தப் பதார்த்தத்திற்குச் சுவை சேர்க்கிறது. இதனை ஒரு மாதம் வரை நீங்கள் வைத்துச் சாப்பிடலாம்,” என்று அவர் கூறினார். ‘திராமிசு’, ‘ஸ்னோபால்’, ‘கேண்டி பீக்கன்ஸ்’ உள்ளிட்ட வேறு சில கிறிஸ்துமஸ் பதார்த்தங்களையும் இவர் செய்கிறார்.
கோவன் வட்டாரத்திலுள்ள ‘த புரோமனேட்@பெலிகாட்’ வளாகத்தில் அமைந்துள்ள இவரது கடைக்கு வருகையளிக்கும் வாடிக்கையாளர்கள் நட்பார்ந்த முறையில் பேசிக்கொள்வர்.
தொடர்புடைய செய்திகள்
வீட்டிலிருந்தே பலகாரங்களைத் தயாரித்து விற்றுவந்ததை அடுத்து சொந்தக் கடைக்கு மாறிச் சுயமாக அதனை நடத்துவது பெரும் மாற்றம்தான் என்றார் திருவாட்டி ஷீலா.
“கடையைத் தக்கவைப்பதற்குக் கூடுதலாக உழைக்கவேண்டும். களைப்புக்கு இடம் தரக்கூடாது. வேலை இடத்திற்குரிய ஒழுங்குடன் செயலாற்ற வேண்டும்,” என்று அவர் கூறினார்.
‘நைட் சஃபாரி’, அரும்பொருளகம் போன்ற சுற்றுலாத் தலங்களில் வழிகாட்டியாகப் பணியாற்றிய முன்னைய அனுபவத்தின் மூலம் வாடிக்கையாளர்களுடன் நயமாகப் பேசும் கலையைத் தாம் வளர்த்துக் கொண்டதாகக் கூறினார் ஷீலா.
மக்களை மகிழ்வித்து, அவர்களுக்கு ஓய்வு தந்து அவர்களைச் சிந்திக்க வைக்கும் தருணங்களை கிறிஸ்துமஸ் வழங்குகிறது என்று அவர் கூறினார்.
“நன்றியுணர்வை வெளிப் படுத்தவும் குடும்பத்துடன் சேர்ந்து கொண்டாடவும் ஊக்குவிக்கிறது இந்தத் திருநாள். இதனை வாடிக்கையாளர்களுடன் சேர்ந்து கொண்டாடுவதில் இன்பம் காண்கிறேன்,” என்று கூறினார் ஷீலா.


