இந்தியர்களில் சிங்கப்பூரர், இந்தியக் குடிமக்கள், வெவ்வேறு தாய்மொழிகளைக் கொண்டவர்கள், பிற இனத்தவர்கள் என அடையாளத்தில் வேறுபட்டுள்ள பலர் சிங்கப்பூர் இந்திய நுண்கலை க் கழகத்தில் (சிஃபாஸ்) கடந்த வாரயிறுதியின்போது இணைந்தனர்.
லிட்டில் இந்தியா வட்டாரத்தின் ஸ்டார்லைட் ரோட்டிலுள்ள சிஃபாஸ் வளாகத்தில் பொது வரவேற்பு தின நிகழ்ச்சிகள் இம்மாதம் 13, 14ஆம் தேதிகளில் நடைபெற்றன. ஒவ்வொரு நாளும் சுமார் 600 பேர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். இந்நிகழ்ச்சிகளின்போது 298 பேர் புதிய வகுப்புகளுக்கு விண்ணப்பம் செய்ததாக அக்கழகம் தெரிவித்தது.
தபேலா ஆசிரியர் மிஹிர் குண்டுவின் விறுவிறுப்பான கச்சேரியுடன் முதல் நாள் நிகழ்ச்சி தொடங்கியது. அதையடுத்து பரத நாட்டியம் சார்ந்த கண்காட்சிகள் இடம்பெற்றிருந்தன.
இரண்டாவது நாளில் ஆசிரியர் சுபதீப், இந்துஸ்தானி இசை பாடினார். அதன் பின்னர் திரைப்படங்களில் சங்கீத ராகங்கள் என்ற அங்கத்தை கர்நாடக வாய்ப்பாட்டு ஆசிரியர்கள் பி.சுஷாந்த், ஜானகி இருவரும் தங்கள் மாணவர்களுடன் இணைந்து படைத்தனர். குருபிரகாஷ் கீபோர்ட் கருவியை வாசித்தார். அதன் பின்னர் ஒன்றரை மணி நேரத்திற்கு கதக் நடனம் இடம்பெற்றது.
“பொது வரவேற்பு தின நிகழ்ச்சியைக் கழகம் நான்கைந்து ஆண்டுகளாக நடத்தி வருகிறது. பல இனங்களைச் சேர்ந்தோர் இங்கு மாணவர்களாக சேர்கின்றனர். பல்வேறு அடையாளங்களைக் கொண்டோரை ஒன்றிணைக்கும் தளமாகக் கலை விளங்குகிறது,” என்று சிஃபாசின் இயக்குநர் தெரிவித்தார்.

