தொடர்ந்து 12 மணி நேரம் நின்றுகொண்டு வேலை பார்க்க வேண்டும் என்ற கட்டாயத்திற்குப் பாதுகாவல் அதிகாரிகள் பலரும் அன்றாடம் ஆளாவதுண்டு.
பாதுகாப்பு அதிகாரிகள் பலர் தங்களின் வேலைப்பளு தாங்க முடியாமல் வேலையைக் கைவிட விரும்புவதாகப் பாதுகாவல் துறை ஊழியர்கள், சில காலத்திற்கு முன்பு தொழிற்சங்கம் நடத்திய ஆய்வொன்றில் தெரிவித்தனர். இந்நிலையில், பாதுகாப்புத் துறையில் பல ஆண்டுகள் பணியாற்றிவரும் இருவரும் அத்துறையைக் கைவிட்ட ஒருவரும் தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டனர்.
சாதக நிலை இல்லை
வேலை தனக்கு வசதியாக இருக்கும் என்று நினைத்து குமரன் நாகலிங்கம், 16 ஆண்டுகளுக்கு முன்பு சாங்கி விமான நிலையத்தில் விமானத்துறைப் பாதுகாவல் அதிகாரியானார்.
ஆனால், 10 ஆண்டுகள் ஆகியும் வேலையில் முன்னேற்றம் அடையாததை எண்ணி வருந்தினார். ஊழியர் பற்றாக்குறை காரணமாக 12 மணிநேரத்தையும் தாண்டி கூடுதல் நேரம் அவர் வேலை பார்த்தார்.
“கிட்டத்தட்ட அன்றாடம் 12 மணி நேரத்திற்கு மேல் வேலை பார்த்தேன். சில சமயம் தொடர்ச்சியாக மறுநாளும் தூக்கமின்றி வேலை பார்த்தேன். ஒருவரால் இதை எவ்வளவு காலம்தான் தாங்க முடியும்?” என்று அவர் குமுறினார்.
மூன்று பிள்ளைகளுக்குத் தந்தையான 42 வயது குமரன், வீட்டில் தன் நேரத்தைச் செலவிட்டதைவிட வேலையிடத்தில் செலவிட்டதுதான் அதிகம். சிங்கப்பூரர்கள் பலர் இதனாலேயே பாதுகாவல் துறையில் வேலைக்குச் சேர விரும்புவதில்லை என்று கூறினார் அவர்.
“பெரும்பாலும் இங்கு வேலை பார்ப்பது வெளிநாட்டவர்தான். அவர்கள்தான் பல தியாகங்களைச் செய்து வேலையில் வேகமாக முன்னேற்றம் காண்கிறார்கள். சிலர் விமான நிலையத்தில் தங்கி மறுநாள் வேலைக்குச் செல்வதையும் நான் கவனித்திருக்கிறேன்,” என்றார்.
பெற்றோர் இருவருக்கும் புற்றுநோய் ஏற்பட்ட காரணத்தால் பாதுகாவல் துறை வேலையைக் கைவிட முடிவெடுத்த குமரன், “இப்படிப்பட்ட ஒரு வேலையில் இருந்துகொண்டு என் பெற்றோருக்கு ஒரே பிள்ளையான நான், எப்படி என் பெற்றோரையும் என் குடும்பத்தினரையும் கவனித்துக்கொள்ள முடியும்? வேலை எனக்குச் சாதகமாகவே அமையவில்லை,” என்று தெரிவித்தார்.
தொடர்புடைய செய்திகள்
தற்போது வாடகை உந்துவண்டி ஓட்டுநராகப் பணியாற்றி வருகிறார் குமரன்.
இன்பமளிக்கும் பணி
‘பாதுகாவல் துறை அதிகாரிதானே’ என்ற குறைகூறல் ஒருபுறம், கொச்சையான சொற்களைத் தன்மீது பயன்படுத்தும் நபர்கள் மறுபுறம்.
ஆனால் 34 வயது ரீனா ராமனுக்கு இது எல்லாம் பழகிவிட்டது.
தற்போது சாங்கி விமான நிலையத்தில் மூத்த விமான மேற்பார்வையாளராகப் பணியாற்றி வருகிறார்.
கடந்த 13 ஆண்டுகளாக இத்துறையில் இருக்கும் ரீனா, “எனக்கு என் வேலையில் மிகவும் பிடித்தது, அனுதினமும் புது முகங்களைப் பார்ப்பதுதான். இந்த வேலை எனக்குச் சலிப்பு தட்டவில்லை,” என்றார்.
வாரம் நான்கு நாள்கள், ஒவ்வொரு நாளும் 12 மணிநேரத்திற்கு வேலை பார்க்க வேண்டும். உடல் சோர்வு அதிகம் இருந்தாலும் அதை பொருட்படுத்துவதில்லை ரீனா.
“நீண்ட நேரம் வேலை பார்ப்பதால் என் முதலாளி நாங்கள் இளைப்பாற அனுமதி தருவார். சக ஊழியர்களுடன் விளையாட்டுகளில் ஈடுபட்டுச் சோர்வைத் தளர்த்திக்கொள்வதால் எனக்கு வேலை சுமுகமாக இருக்கிறது,” என்றார்.
பயணிகளுடன் உரையாடிய அனுபவங்களை நினைவுகூர்ந்த ரீனா, “நான் இந்த வேலையில் புதிதாகச் சேர்ந்தபோது, என் மீது பொருள் வீசிய பயணி ஒருவரைச் சந்தித்தேன். பயணப்பையில் திரவங்களை எடுத்துச் செல்லக்கூடாது என்று கூறியதற்கு, அந்தப் பயணி திரவ பாட்டிலை என்னைக் குறிவைத்து வீசினார். ஆனால், அது என்மீது படாமல் நான் தப்பிவிட்டேன்,” என்று புன்னகையுடன் கூறினார் ரீனா.
சவால்கள் தவிர்க்கமுடியாதவை
வேலை பிடிக்காமல் போவதால் மற்றத் துறைகளுக்குத் தாவும் பலர் இருக்கையில், 57 வயதாகும் மாதவராஜ் பாதுகாவல் துறையில் 18 ஆண்டுகள் உள்ளார்.
‘வாட்ச்மேன்’ என்று பலர் தன்னை அழைத்தாலும், பாதுகாவல் அதிகாரியாகப் பணியாற்றுவதில் பெருமை கொள்கிறார் இவர்.
“பொது விடுமுறை நாள்களிலும் வேலை பார்க்க வேண்டும். இரவுநேரப் பணியில் இருப்பதால் பலமுறை தீபாவளியைக் குடும்பத்தோடு கொண்டாடி முடித்த பிறகு அந்த இரவே வேலைக்குக் கிளம்பிவிடுவேன்,” என்றார் மாதவராஜ்.
மூத்தப் பாதுகாப்பு மேற்பார்வையாளராக இருக்கும் அவர், நான்கு வர்த்தகக் கட்டடங்களைத் தன் கண்காணிப்பின்கீழ் வைத்துள்ளார்.
இரவுபகல் பாராமல் எந்நேரமும் விழிப்புடன் இருக்க வேண்டும். கட்டடத்திற்குள் யாரும் நுழையாதபடி பார்த்துக்கொள்ள வேண்டும். கட்டடத்தின் அலுவலகங்களில் சந்தேகப்படும்படியான பிரச்சினைகள் ஏதும் ஏற்படாமல் தடுப்பதும் எளிதல்ல என்றார் மாதவராஜ்.
தொடக்கத்தில் ஹோட்டலில் வேலை பார்த்துவிட்டு பாதுகாவல் துறைக்கு மாற எண்ணிய மாதவராஜ், புதிய வேலை சுலபமாகத்தான் இருக்கும், ஒரே இடத்தில் இருந்தவாறு கண்காணிப்புப் பணிகளில் ஈடுபடுவது கம்பச்சூத்திரம் அல்ல என்று நினைத்துக் கொண்டார்.
சில காலம் வேலை பார்த்த பிறகு அவரது எண்ணம் மாறியது. ஆனால், 18 ஆண்டுகளில் பலவற்றைக் கற்றுக் கொண்டு மீள்திறனுடன் நடை போடுகிறார் மாதவராஜ்.

