சிங்கப்பூரில் தழைக்கும் பாரம்பரியக் கலைகள்

கொண்டாட்டங்கள், விளையாட்டுகள், கலைகள் நிறைந்தது தமிழர் மரபு.

தெருக்கூத்து தொடங்கி கரகாட்டம், காவடியாட்டம், நையாண்டி மேளம், தப்பாட்டம், பறை இசை, மயிலாட்டம், ஒயிலாட்டம், கும்மி, பொய்க்கால் குதிரை என அப்பட்டியல் நீளும்.

இசை, நடன வடிவங்கள், கபடி, கில்லி உள்ளிட்ட விளையாட்டுகள், சிலம்பம், அடிமுறை, மல்லர் கம்பம், இளவட்டக்கல், உறியடி, வழுக்குமரம், வடமாடு ஆகிய வீர விளையாட்டுகளும் தமிழரின் அடையாளங்களைப் பறைசாற்றுபவை.

இந்நிலையில், பாரம்பரியக் கலைகளையும் விளையாட்டுகளையும் சிங்கப்பூரில் தழைக்க வைப்பதோடு, அவற்றை அடுத்த தலைமுறைக்குக் கொண்டுசேர்க்கும் பணியிலும் ஈடுபட்டுள்ளனர் இளையர்கள்.

தற்காப்புக் கலைக்கு நிகழ்த்துக்கலை வடிவம் தரும் ஆசான் வேதகிரி

களரி அகாடமி நிறுவனர் வேதகிரி. படம்: வேதகிரி

சிலம்பாட்டம், அடிமுறை, களரி ஆகியவற்றைப் பயிற்றுவிக்கும் ஆசான் வேதகிரி கோவிந்தசாமி, 44, அவை தம் வாழ்வுடன் ஒன்றிப்போனதாகவே கருதுகிறார்.

சிறுவயதில் ‘நிஞ்சா’ உள்ளிட்ட சண்டைக் காட்சிகள் நிறைந்த படங்களை விரும்பிப் பார்த்த வேதகிரியின் ஆர்வத்தைக் கண்டு, பாரம்பரிய சண்டைக் கலையான சிலம்ப வகுப்புகளில் அவரைச் சேர்த்தார் அவருடைய தந்தை. தொடர்ந்து அதன் மீதான ஈடுபாடு வளரவே, அடிமுறை, களரி ஆகியவற்றையும் வேதகிரி கற்றுக்கொண்டார்.

இதனைத் தற்காப்புக்காக மட்டுமல்லாமல், இதற்குக் கலை வடிவம் கொடுத்து, இசை கோத்து, நாடகத்தில் இணைத்துச் செயல்படுத்துவது தம் விருப்பம் எனச் சொல்கிறார் வேதகிரி.

இந்திய மரபுடைமை நிலையம் உட்பட பல நிகழ்வுகளில் நடத்தப்பட்ட நாடகங்களுக்குச் சண்டைக் காட்சி அமைத்து, அதன் மூலம் பல இளையர்களை ஈர்த்த இவர், தற்போது 250க்கும் மேற்பட்ட மாணவர்களுக்குப் பயிற்சி அளித்து வருகிறார்.

நான்கு வயது சிறுவர் முதல் 40 வயதுக்கும் மேற்பட்ட பெண்மணிகள் வரை பலதரப்பட்ட மாணவர்களுக்கு இவர் பயிற்சியளித்து வருகிறார்.

“நம் பாரம்பரியக் கலைகள் சிங்கப்பூரில் உள்ள இளையர்கள் பலரையும் ஈர்த்துள்ளன. முன்பைவிட அவற்றின் மீதான ஆர்வமும் இது நம் அடையாளம் என்கிற உரிமையும் மேலோங்கி இருக்கின்றன. பலரும் அவற்றைக் கற்கவும் கற்பிக்கவும் முன்வருவதைப் பார்க்கிறேன். ஒரு பாரம்பரிய கலை வடிவத்தின் ஆசானாக, அதனை அடுத்த தலைமுறைக்குக் கொண்டுசேர்க்க கிடைத்துள்ள இந்த வாய்ப்பைப் பெரும்பேறாகக் கருதுகிறேன்,” என்றார் வேதகிரி.

இன்னும் பலரும் இதனைப் பெருமையாக நினைக்கவும் கற்கவும் வேண்டுமென ஊக்குவிக்கிறார் இவர்.

நாடகத்தின் மூலம் ஈர்க்கப்பட்டு அடிமுறை, சிலம்பம் கற்ற புருஷோத்தமன்

வேதகிரியிடம் பயின்று, கற்பிக்கவும் தொடங்கியிருக்கும் புருஷோத்தமன். படம்: வேதகிரி

ஆசான் வேதகிரியிடம் பயின்று, களரி, அடிமுறை கற்பிக்கும் ஆசானாகியுள்ள ராமதாஸ் புருஷோத்தமன், 27, நடிகராகும் ஆசையில் வலம் வந்தவர்.

இந்திய மரபுடைமை நிலையத்தில் நடந்த நாடகத்தில் நடிக்க வாய்ப்பு கிட்டியபோது, அதில் இடம்பெற்ற அடிமுறை சண்டைக் காட்சி மூலம் ஈர்க்கப்பட்ட புருஷோத்தமன், பின்னர் முறையாகப் பயிற்சிபெறத் தொடங்கினார்.

நவீனப் பாடல், நடனம் போன்றவற்றைவிட, பாரம்பரியக் கலையைக் கற்று, பின்னர் பிறருக்கு அதைக் கற்பிப்பதால் தான் தனித்துவம் பெற்றவனாகத் தெரிவதாகச் சொல்கிறார் இவர்.

இக்காலச் சமூக ஊடகங்கள் இளையர்களைக் கலாசார அடையாளங்களைத் தேடி ஓட வைக்கின்றன என்றும் அதனால் பலர் இதனைக் கற்க முயல்வது மகிழ்ச்சி தருகிறது என்றும் புருஷோத்தமன் சொன்னார்.

கற்றலைப் போலவே, கற்பித்தலும் ஒரு சிறந்த அனுபவம் எனக் கூறும் இவர், உடல் நெகிழ்வுத்தன்மை அதிகமாக உள்ள சிறுபிள்ளைகளுக்கு வேறு பாணியிலும், பெரியவர்களுக்கு வேறு பாணியிலும், முதியவர்களுக்கு முற்றிலும் வேறு விதங்களிலும் கற்பிப்பதாகச் சொல்கிறார்.

தற்காப்புக் கலை கற்பதற்கு வயது ஒரு தடையாக இருக்கக்கூடாது. மனம் வைத்தால் யாரும் கற்கலாம் என ஊக்குவிக்கும் புருஷோத்தமன், பலர் இதனைக் கற்றுத் தமிழர் அடையாளத்தைத் தூக்கிப் பிடிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுக்கிறார்.

விடுதலையின் அடையாளம்: பறையாட்டக் கலைஞர் அக்‌‌ஷரா திரு

பறையாட்டம் ஒரு சக்திவாய்ந்த சமூகக் கருவி என்கிறார் அக்‌‌ஷரா திரு. படம்: அக்‌‌ஷரா திரு

பறையிசை, தமிழ்ச் சமூகத்தின் வாழ்வியலுடன் இணைந்துவிட்ட பேரடையாளம் என்கிறார் 35 வயதான பறையிசைக் கலைஞர் அக்‌‌ஷரா திரு.

தமிழ்நாட்டின் காந்திகிராம பல்கலைக்கழகம் நடத்திய நாட்டுப்புறக்கலைப் பயிலரங்கில் கலந்துகொண்டபோது பறையிசை அறிமுகம் ஏற்பட்டு, பின் பிரபல பறையிசைக் கலைஞர் தஞ்சாவூர் ராஜ்குமாரிடம் அதனைக் கற்றதாகச் சொன்னார் திரு.

ஏழாண்டுகளுக்கு மேலாக பறையிசை கற்ற திரு, நாலாண்டுகளாக ‘டமரு சிங்கப்பூர்’ குழுவில் கற்பித்து வருகிறார்.

பறை தரும் இடி முழக்கம் போன்ற சத்தத்தினால் ஈர்க்கப்பட்டதாகச் சொல்லும் இவர், ஆடலுக்கும் அடவுக்கும் சம முக்கியத்துவம் இருக்கும் ஒரே கலை பறையாட்டந்தான் என்கிறார்.

பல சமூக சிக்கல்களைச் சந்தித்து, மீண்டெழுந்து தனித்து நிற்கும் பறையாட்டம், விடுதலைக்கும் சமூக, பாலின சமத்துவத்துக்கும் ஒற்றுமைக்கும் அடையாளம் என்று பெருமையாகச் சொல்கிறார் திரு.

தபலா, மிருதங்கம் தொடங்கி எல்லாவித இசைக்கருவிகளைக் கற்கவும் தேர்ச்சி பெறவும் பல ஆண்டுகள் ஆகும். உணர்வுகளை வெளிப்படுத்தும் பறையைக் கற்க நிபுணத்துவமோ அதிக நேரமோ தேவையில்லை எனவும் திரு சுட்டிக்காட்டினார்.

தமிழர் அடையாளம் என்பதைத் தாண்டி, சமூக ஒன்றிணைவை பறைசாற்றுவதாலும் மூளை, மனம், உடல் என அனைத்தையும் நேர்கோட்டில் இருத்தும் ஒரு சிறந்த பயிற்சியாக இருப்பதாலும் அடுத்த தலைமுறை பறையிசையைக் கண்டிப்பாகக் கற்க முயல வேண்டும் என்று திரு வலியுறுத்துகிறார்.

தமிழர் விளையாட்டை உலக அரங்கில் விளையாடும் முஹம்மது காலித்

மாணவர்களைப் போட்டிக்குத் தயார் செய்யும் முஹம்மது காலித். படம்:  முஹம்மது காலித்

தமிழக கிராமப்புறங்களில் விளையாடப்பட்டு, இன்று அனைத்துலக முக்கியத்துவம் பெற்ற விளையாட்டாக கபடி முன்னேறியுள்ளது பெருமை எனச் சொல்கிறார் முஹம்மது காலித், 29.

பலதுறைக் கல்லூரியில் பயின்ற காலத்திலிருந்தே கபடி கற்று வரும் காலித், கடந்த ஏழாண்டுகளாக அதனைக் கற்பித்து வருகிறார். 13 முதல் 35 வயது வரையிலான பலருக்கும் இவர் கபடி பயிற்சி அளித்து வருகிறார்.

கிரிக்கெட், கூடைப்பந்து, காற்பந்து போன்ற விளையாட்டுகள் பரவலாகப் புகழ் பெற்றிருந்தாலும், கபடி இன்றைய இளைய தலைமுறையினரின் ஆர்வத்தைத் தொடர்ந்து ஈர்க்கிறது என்கிறார் இவர்.

“கபடியைப் பாதுகாத்து அடுத்த தலைமுறைக்குக் கடத்துவது மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று. கபடி வளமான வரலாற்றையும் ஆழ்ந்த மரபையும் கொண்ட விளையாட்டு. இது மரபுகளுடனான தமிழரின் தொடர்பை உயிர்ப்புடன் வைத்திருக்கும்,” என்கிறார் காலித்.

கடந்த காலத்தையும் நிகழ்காலத்தையும் எதிர்காலத்தையும் இணைக்கும் பாலமாக இருக்கும் கபடி, உடல் ஆற்றலையும் மனவலிமையையும் சேர்த்து வளர்க்கும் ஒரு விளையாட்டு என்று பெருமையுடன் சொல்கிறார் காலித்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!