மகனுக்கு ஆதரவுத் தூணாக நிற்கும் தாய்

3 mins read
5da05e04-9859-46ea-b7ab-b99490c84b3f
மகனுடன் திருவாட்டி உமா. - படம்: அனுஷா செல்வமணி

பராமரிப்பாளர்களின் உழைப்பைப் போற்றும் விதமாக அண்மையில் இம்மாதம் (பிப்ரவரி) தேசிய பராமரிப்பாளர்கள் தினம் கொண்டாடப்பட்டது.

மருத்துவமனைகளில் பணிபுரியும் பராமரிப்பாளர்களுக்கு அப்பாற்பட்டு, தனிப்பட்ட முறையிலும் சில குடும்பங்களில் வீட்டில் இருப்பவர்கள் குடும்ப உறுப்பினர்களுக்குப் பராமரிப்பாளராக இருந்துவருகின்றனர்.

டோவர் பார்க் அந்திமகாலப் பராமரிப்பு நிலையம் சென்றாண்டு நடத்திய கணக்கெடுப்பில் பத்தில் நான்குக்கு மேற்பட்ட பராமரிப்பாளர்கள் இதனால் மனஅழுத்தத்திற்கு ஆளாவதாகத் தெரியவந்தது.

நமது அரசாங்கம் முடிந்த அளவில் பராமரிப்பாளர்களுக்குக் கூடுதலான உதவிகளை வழங்க முயல்கிறது.

கடந்த 22 ஆண்டுகளாக தனது மகனுக்கு ஒற்றைப் பராமரிப்பாளராக இருக்கும் திருவாட்டி உமா சண்முகம், 56, தனது அனுபவங்களைத் தமிழ்முரசுடன் பகிர்ந்துகொண்டார்.

பெருமூளை வாதத்தால் பாதிக்கப்பட்டுள்ள இவரது மகன் தக்ஷிணாமூர்த்திக்குப் பேசவும் நடக்கவும் முடியாது. மகன் சொல்ல நினைப்பதை சைகைகள் மூலம் அறிந்துகொள்கிறார் உமா.

சக்கர நாற்காலியைச் சார்ந்து வாழும் மகனுக்கு வீட்டிலேயே அதிக நேரம் இருந்தால் பிடிக்காது என்பதால், எங்காவது அவரை வெளியில் அழைத்துச் செல்லவேண்டிய கட்டாயத்துக்கு உமா தள்ளப்படுகிறார்.

தனக்கும் வயதாவதால் 80 கிலோகிராம் எடை கொண்ட தக்ஷிணாமூர்த்தியை சக்கர நாற்காலியில் தள்ளிச்செல்வது சிரமமாக இருப்பதாகக் கூறுகிறார் உமா.

வாரயிறுதியில் கணவர் கைகொடுத்தாலும் மீதமுள்ள நாள்களில், தக்ஷிணாமூர்த்தியைக் கவனித்துகொள்ளத் தடுமாறுகிறார் இவர்.

தற்போது ‘ஏவா’ எனப்படும் சமூக அறப்பணி நிறுவனத்திற்குச் செல்லும் தக்ஷிணாமூர்த்தி அங்கு ஏற்பாடு செய்யப்படும் நடவடிக்கைகளில் ஈடுபடுவதில் நேரம் செலவிடுகிறார்.

தக்ஷிணாமூர்த்திக்கு ஒவ்வொரு மாதமும் கிட்டத்தட்ட $2,000 செலவு செய்யும் உமாவும் அவரது கணவரும் நிதி நெருக்கடியால் திண்டாடுகின்றனர்.

மகனைப் பார்த்துக்கொள்ள அதிக உதவி கோரும் திருவாட்டி உமா.
மகனைப் பார்த்துக்கொள்ள அதிக உதவி கோரும் திருவாட்டி உமா. - படம்: அனுஷா செல்வமணி

“நான் இல்லத்தரசி. என் கணவர் சிறைச்சாலையில் அதிகாரியாக உள்ளார். அவருக்கு சம்பளம் அதிகம் என்பதால் பல சலுகைகள் கிடைப்பதில்லை. தக்ஷிணாமூர்த்திக்கான செலவுகள் மலைபோல் குவிகின்றன,” என்று உமா நாத் தழுதழுக்கச் சொன்னார்.

சிங்கப்பூரில் உடற்குறை உள்ளவர்களுக்கு வசதிகள் செய்து தரப்பட்டாலும் அது போதவில்லை என்று கூறிய உமாவின் கண்களின் ஓரத்தில் நீர் எட்டிப் பார்த்தது.

பேரங்காடிகளில் குறுகலான நடைபாதையில் செல்வது, பேருந்திலோ வாடகை உந்து வண்டியிலோ பயணம் மேற்கொள்வது போன்ற நேரங்களில் போராடும் உமா, “சில நேரங்களில் என்னால் முடியவில்லையே என்று பொது இடங்களில்கூட அழுதுள்ளேன்,” என்றார்.

திருமணத்திற்குப் பிறகு ஏழு ஆண்டுகள் குழந்தை இல்லாமல் இருந்த உமாவும் அவரது கணவரும் மலேசியா சென்று அங்கு இரு பிள்ளைகளைத் தத்தெடுத்தனர்.

ஒரு மாதக் குழந்தையாக இருந்த தக்ஷிணாமூர்த்தியை தத்தெடுத்த இருவரும் அவர் சிறப்புத் தேவையுடைய குழந்தையாக இருப்பார் என்று எதிர்பார்க்கவில்லை.

“அவனுக்கு இப்படி ஒரு பிரச்சினை இருக்கும் என்று எங்களுக்கு முதலில் தெரியாது. உரிய வயதில் அவர் நடக்கவில்லை எனும்போதுதான் ஏதோ சிக்கல் என்று உணரத் தொடங்கினோம். இந்த நோய்க்கு சிகிச்சை இல்லை என்று அறிந்ததும் நாங்கள் மனத்தளவில் நொறுங்கிப் போனோம்,” என்றார் உமா.

தக்ஷிணாமூர்த்தி பெருமூளை வாதத்தால் பாதிப்படைந்துள்ள பிள்ளைகளுக்கான சிறப்புப் பள்ளியில் 18 வயது வரை பயின்றார். பள்ளிக்குச் செல்லும்போது அவரைக் கண்காணிப்பது எளிதாக இருந்ததாக உமா கூறினார்.

‘ஏவா’வுக்கு தக்ஷிணாமூர்த்தியைத் தொடர்ந்து அனுப்ப, கூடுதல் நிதியுதவி எதிர்பார்க்கிறார் உமா. இது குறித்து விழிப்புணர்வு அதிகரிக்க வேண்டுமென்று கேட்டுக்கொண்ட உமா, “பொது இடங்களில் உடற்குறை உள்ளவர்களுக்காக இருக்கும் கழிப்பறைகளை சாதாரணமாக இருக்கும் மக்களும் பயன்படுத்துகின்றனர். மக்களிடம் அடிப்படைப் புரிந்துணர்வுகூட இல்லையே என்று இந்தப் போக்கு எனக்கு சினமூட்டும்,” என்கிறார் உமா.

குறிப்புச் சொற்கள்