மகன், தாயார், தங்கை வாழ்க்கையில் தூணாக நிற்கும் பராமரிப்பாளர் பொற்செல்வி

2 mins read
939f5e28-e2d9-4578-afd7-3ebea6a10b03
மகனுடன் பொற்செல்வி. - படம்: மைண்ட்ஸ் சமூக சேவை அமைப்பு

வாழ்க்கை தொடர்ந்து போராட்டமாக இருந்தாலும் தனது பொறுப்புகளைக் கையாள்வதில் கண்ணும் கருத்துமாகச் செயல்படுகிறார் 60 வயதுடைய தம்புராஜுலு பொற்செல்வி.

மதியிறுக்கத்தால் பாதிப்படைந்துள்ள 33 வயது மகன், 80 வயதில் பல்வேறு உடல் உபாதைகளால் தவிக்கும் தாயார், மறதி நோய் கொண்டுள்ள 58 வயது தங்கை ஆகிய மூவருக்கும் முதன்மைப் பராமரிப்பாளராக பொற்செல்வி இருக்கிறார்.

தளவாடத் துறையில் முழுநேர நிர்வாகப் பணியில் இருக்கிறார் பொற்செல்வி.

மகன் ஜனார்தன் பாலகிருஷ்ணனுக்குப் பேச்சுத் தடுமாற்றம் இருப்பதால் சைகை மூலம் மகனின் எண்ணங்களை அறிந்திடுவார் பொற்செல்வி.

திடீரெனக் கோபப்படுவது, கத்துவது எனப் பல உணர்ச்சிகளைக் கட்டுக்குள் வைத்துக்கொள்ள முடியாமல் அவதிப்படும் ஜனார்தனுடன் ஆழமான புரிதலோடு பழகுவது பொற்செல்வியும் அவரது தாயாரும்தான்.

தாயாருக்கு நீரிழிவு, இதய நோய், கல்லீரலில் கல், தைராய்டு பிரச்சினை என நோய்கள் அடுத்தடுத்து வந்து துன்பத்துக்கு ஆளாக்கின. பொற்செல்வி வேலைக்குச் செல்லும்போது மகனைத் தன் தாயாரிடம் விட்டுச் செல்வார்.

அவ்வப்போது ஜனார்தனுக்கு வலிப்பு நோய் ஏற்படுவதுண்டு. அதனால் வீட்டிலேயே அவரைக் கவனித்துக்கொள்ள முடிவு செய்தார் பொற்செல்வி.

ஜனார்தன் அதிகம் வீட்டிலேயே இருப்பதால் மகனின் நேரம் பயனுள்ளதாக அமைய வீட்டில் பல நடவடிக்கைகளை ஏற்பாடு செய்து வைத்துள்ளார்.

பொற்செல்வியின் தங்கைக்கு மறதிநோய் உள்ளது. திருமணமாகாத தங்கை தனியாக வசித்து வந்தாலும் இயன்றவரை அவருக்கு ஆதரவாக இருக்க பொற்செல்வி விரும்புகிறார்.

பொற்செல்வி போன்ற பராமரிப்பாளர்களுக்கு அரசாங்கம் பல உதவிகளைச் செய்து தருகிறது.

‘மைண்ட்ஸ்’ எனப்படும் சமூக சேவை அமைப்பு பொற்செல்வி போன்ற பராமரிப்பாளர்களுக்குக் கூடுதலான உதவித் திட்டங்களை தொடங்கியுள்ளது. நிதியுதவி, பராமரிப்பாளர்களுக்குப் பயிற்சி, காப்புறுதித் திட்டம், சுகாதாரச் சேவைகள் ஆகியவை அந்த உதவித் திட்டங்களில் அடங்கும்.

தோளுக்கு மேல் வளர்ந்த மகனைப் பார்த்துக்கொள்ள தத்தளிக்கும் பொற்செல்வி, ஆண் தொண்டூழியர்கள் முன்வந்து ஜனார்தன் போன்றவர்களை வெளியே அழைத்துச் செல்ல உதவிக்கரம் நீட்டினால் தனது பாரம் குறையும் என்று கேட்டுக்கொண்டார்.

குறிப்புச் சொற்கள்