தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

தேசிய நூலகத்தில் சிறுகதைப் பயிலரங்கு

2 mins read
a4c9c6c0-7fbb-40e4-bf88-d8bd088d9089
பயிலரங்கில் பங்குபெற்றவர்கள். - செய்தி, படம்: சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம்

சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழக ஏற்பாட்டில் பிப்ரவரி 18ஆம் தேதி ஞாயிறு காலை 9 மணிக்கு தேசிய நூலகத்தில் சிறுகதைப் பயிலரங்கு நடத்தப்பட்டது. 

இப்பயிலரங்கானது முத்தமிழ் விழா 2024, சிறுகதை எழுதும் போட்டிகளில் பங்கேற்க மாணவர்களைத் தயார் செய்யும் நோக்கத்தைக் கொண்டு நடத்தப்பட்டது.

சிங்கப்பூர் எழுத்தாளர்கள் ஹேமாவும், மணிமாலா மதியழகனும் மாணவர்களுக்குச் சிறந்த பயிற்சியை அளித்தனர்.

உயர்நிலைப்பள்ளி, தொடக்கக் கல்லூரி, பலதுறைத் தொழிற்கல்லூரி, பல்கலைக் கழக மாணவர்கள் மற்றும் வளரும் எழுத்தாளர்களும் பயிலரங்கில் கலந்துகொண்டனர்.

நாம் படிக்கும் செய்திகளில், கேள்விப்படும் சம்பவங்களில் இருக்கும் கதைக்கருக்களை எப்படி அடையாளம் காண்பது? ஒரு கரு எப்போது கட்டுரையாகிறது, அதுவே எப்படிக் கதையாக மாறுகிறது? என்பனவற்றை மையமாகக்கொண்டு பயிலரங்கு நடந்தது.  

மேலும், சிறுகதையின் கட்டமைப்பும், நுணுக்கங்களும் பல எடுத்துக்காட்டுகளுடன் விளக்கப்பட்டன. மாணவர்கள் குழுக்களாகப் பிரிக்கப்பட்டு, சமூக வலைத்தளங்களிலும் செய்தித்தாள்களிலும் காணப்படும் மோசடி தொடர்பான சம்பவங்களைக் களமாகக் கொண்டு சிறுகதை எழுதும் பயிற்சி அளிக்கப்பட்டது.

ஒரு கதையை எப்படித் துவங்கி, எப்படிப்பட்ட  முடிவை நோக்கி நகர்த்துவது போன்ற நுணுக்கங்களைக் கற்றுக்கொண்டதாகவும், தனது எழுத்துத் திறமையை மேம்படுத்தவும் பள்ளிப் பாடங்களில் பயன்படுத்தவும் பயிலரங்கு உதவியாக இருக்கும் என்றும் இயோ சூ காங் உயர்நிலைப்பள்ளி மாணவர் துர்காஶ்ரீ ஶ்ரீதரன் தெரிவித்தார்.

ஆங்காங்கே சில முடிச்சுகளும், திடீர்த் திருப்பமும் ஒரு கதையைச் சுவைபடக் கொண்டுசெல்ல எவ்வாறு உதவுகின்றன போன்றவற்றைக் கற்றுக்கொண்டதாக கான் எங் செங் உயர்நிலைப் பள்ளி மாணவர் ஆஷிக் ரோஷன் தெரிவித்தார். 

தொடர்புடைய செய்திகள்

பயிலரங்கு மிகவும் விறுவிறுப்பாகச் சென்றதாகவும், பயிலரங்கின்போது  நடைபெற்றக்  கலந்துரையாடல் பயனுள்ளதாக இருந்ததாகவும் சிங்கப்பூர் சமூக அறிவியல் பல்கலைக்கழக மாணவர்கள் அபிராமி குணசேகரன், பாவை சிவக்குமாரும் குறிப்பிட்டனர்.

குறிப்புச் சொற்கள்