தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

கல்லூரி மாணவிகள் நடத்திய விழிப்புணர்வு நிகழ்ச்சி

2 mins read
99d8109a-918d-4193-a674-7c23e3f9ab49
செம்பவாங் அடித்தள அமைப்புகளின் ஆலோசகர் போ லி சான் உடன் மாணவிகள். - படம்: மாணவி பிரியங்கா

அனைத்துலக மகளிர் தினத்தையொட்டி சிங்கப்பூரில் நடைபெறும் எஸ்.ஜி. மகளிர் திருவிழா 2024இன் ஒரு பகுதியாக, மகளிர் சந்திக்கும் ‘மாதவிடாய் நிறுத்தல்’ (Perimenopause) கால உடல்நல பாதிப்புகள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

செம்பவாங் மக்கள் கழகம் சார்பில் நடத்தப்பட்ட இந்நிகழ்வில், நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில், தகவல் தொடர்புப் பிரிவில், இளங்கலை நான்காமாண்டு பயிலும் மாணவிகள் பிரியங்கா தமிழரசன், சீ வென்வேய், ஈடன் லோக் ஹுய் யி, லியோங் சியாவ் ஸின் நிசியா ஆகிய நால்வர் இணைந்து இந்த விழிப்புணர்வை வழிநடத்தினர்.

ஏறத்தாழ 800 வருகையாளர்களிடம் தனித்தனியே பேசி, இந்த மாதவிடாய் நிறுத்தம் குறித்து விளக்கம் அளித்துள்ளனர் மாணவிகள். தொடர்ந்து அவர்களுக்கு கேள்வி பதில் அங்கமும், சரியாக விடையளிப்போருக்கு சிறு பரிசும் அளிக்கப்பட்டது.

கேள்வி பதிலில் ஆர்வத்துடன் பங்கேற்ற பொதுமக்கள்.
கேள்வி பதிலில் ஆர்வத்துடன் பங்கேற்ற பொதுமக்கள். - படம்: மாணவி பிரியங்கா

கல்லூரிப் படிப்பின் ஓர் அங்கமாக இத்திட்டத்தைச் செயல்படுத்தியுள்ள இக்குழுவைச் சேர்ந்த மாணவி பிரியங்கா, “என் தாய் அவரது 35 வயதிலேயே மாதவிடாய் நிறுத்த சுழற்சியின் தொடக்கத்தைச் சந்திக்கத் தொடங்கினார். அதனால் அவருக்குப் பல உடல், மன சிரமங்களைக் கண்ட எனக்கு, இது குறித்த விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்த வேண்டும் என்கிற எண்ணம் ஏற்பட்டது”, என்றார்.

“இவ்வாறு பொதுமக்களிடம் சென்று இந்த விழிப்புணர்வை ஏற்படுத்தலாம் எனச் சொன்னபோது, என் சக நண்பர்களும் ஒப்புக்கொண்டு என்னுடன் இணைந்து இதனைச் செயல்படுத்தியுள்ளனர்,” என்றார் பிரியங்கா.

மாதவிடாய் நிறுத்த காலத்தில், பல்வேறு உடல் மாற்றங்கள் நிகழும். ஹார்மோன்கள் சீராக இல்லாததால், மனச் சோர்வு, எரிச்சல் ஆகியவையும் ஏற்படும். அக்காலகட்டத்தில், குடும்பத்தினரின் ஆதரவு அதிகம் தேவைப்படும். தங்களுக்கு ஏற்படும் உடல்நல பாதிப்புகளைப் புறக்கணிக்காமல் இருக்க வேண்டும். மேலும் பெண்களுக்கும் எப்படி ஆதரவாக இருப்பது என அனைவர்க்கும் தெரியப்படுத்துவதே இந்த திட்டத்தின் நோக்கம் என்கின்றனர் குழுவினர்.

இந்த விழிப்புணர்வுத் திட்டத்தில் பங்கேற்ற திருவாட்டி ஜுனைதா பீவி, 73, “நான் இச்சுழற்சி காலத்தைக் கடந்து வந்திருக்கிறேன். அப்போது முதல் இப்பொழுது வரை பல உடல்நலக் குறைபாடுகள் தொடர்கின்றன. இது பற்றி அனைவர்க்கும் இவர்கள் தெரியப்படுத்துவது நல்ல முன்னெடுப்பு” என்றார்.

குறிப்புச் சொற்கள்