தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சுகாதாரத் துறைக்குத் தூண்களாக நிற்கும் பெண்மணிகள்

2 mins read
c7f01c4d-76c7-4f4f-80ef-7b8c38630797
மருத்துவ இயக்குநர் டாக்டர் ஷெறில் லதா கிளென், 49 (இடம்), நோயாளிகளுக்கு இல்லப் பராமரிப்புச் சேவை வழங்கும் கங்கா துரைதாஸ், 30 (நடுவில்). - படம்: சாட்டா காம்ஹெல்த்

வேலை, சொந்த வாழ்க்கை இவ்விரண்டிலும் மனவுறுதியுடனும் திறமையுடனும் செயல்பட்டு சமுதாயத்திற்குச் சீரிய பங்காற்றி வருகின்றனர் சுகாதாரத் துறையிலுள்ள இந்தப் பெண்மணிகள்.

சீராக நிர்வகிக்கும் திறன்

டாக்டர் ஷெறில் லதா கிளென், 49, கடந்த ஒன்பது ஆண்டுகளாக ‘சாட்டா காம்ஹெல்த்’ எனும் லாப நோக்கற்ற நிறுவனத்தில் மருத்துவராகப் பணியாற்றி வருகிறார்; 2016லிருந்து அதன் மருத்துவ இயக்குநராகவும் உள்ளார்.

நிறுவனத்தின் மருத்துவம் தொடர்பான அம்சங்களுடன் மருத்துவக் குழுக்களையும் இவர் மேற்பார்வையிடுகிறார். அவர் நோயாளிகளையும் பார்க்கிறார், புதிய முயற்சிகளுக்குத் திட்டமிடவும் செய்கிறார்.

இவரது தலைமையில், ‘சாட்டா காம்ஹெல்த்’ மருத்துவக் குழு, வெளிநாட்டு ஊழியர் தங்குவிடுதிகளுக்குச் சென்று 34,000க்கும் மேற்பட்ட கொவிட்-19 பரிசோதனைகளை நடத்தியது; கொவிட்-19 தனிமைப்படுத்தும் நிலையம் ஒன்றையும் பல இடங்களில் தடுப்பூசிச் சாவடிகளையும் செயல்படுத்தியது. இதுவரை கிட்டத்தட்ட 260,000 வெளிநாட்டு ஊழியர்களையும் ஆரம்பகட்ட சுகாதாரப் பராமரிப்புத் திட்டத்தில் சேர்த்துள்ளது.

“பெண்களால் ஒரே நேரத்தில் பலவற்றைச் செய்ய முடியும்; பிறருடன் கருத்துப் பரிமாற்றத்தில் நன்கு ஈடுபட முடியும்; பிறரது நிலைமையிலிருந்து சிந்திக்க முடியும்,” என்று டாக்டர் ஷெறில் கூறினார்.

‘சாட்டா காம்ஹெல்த்’ மருத்துவ நிலையம் ஒன்றை முன்னாள் அதிபர் ஹலிமா யாக்கோப்பிடம் சுற்றிக் காட்டும் டாக்டர் ஷெறில் லதா கிளென் (இடது).
‘சாட்டா காம்ஹெல்த்’ மருத்துவ நிலையம் ஒன்றை முன்னாள் அதிபர் ஹலிமா யாக்கோப்பிடம் சுற்றிக் காட்டும் டாக்டர் ஷெறில் லதா கிளென் (இடது). - படம்: சாட்டா காம்ஹெல்த்
பெண்களால் ஒரே நேரத்தில் பலவற்றைச் செய்ய முடியும். பிறருடன் கருத்துப் பரிமாற்றத்தில் நன்கு ஈடுபட முடியும். பிறரது நிலைமையிலிருந்து சிந்திக்க முடியும்.
டாக்டர் ஷெறில் லதா கிளென், 49.

ஆறுதலும் ஆதரவும் தருபவர்

‘சாட்டா காம்ஹெல்த்’தில் ஐந்தாண்டுகளாகப் பணியாற்றிவரும் 30 வயது திருவாட்டி கங்கா துரைதாஸ், வாழ்வில் பல சவால்களையும் எதிர்கொண்டவர்.

தன் முன்னாள் கணவரால் குடும்ப வன்முறைக்கும் மன அழுத்தத்துக்கும் கங்கா ஆளானார். அதனால் கணவரிடமிருந்து பிரிந்து தனி ஆளாக ஒன்றரை வயது குழந்தையை வளர்த்த அவர், நிதிப் பிரச்சினைகளால் அல்லல்பட்டார்.

அப்போது அவருக்கு ‘டோட்டர்ஸ் ஆஃப் டுமாரோ’ அறநிறுவனம் உதவியது. அதன்மூலம், ‘சாட்டா காம்ஹெல்த்’ இல்லப் பராமரிப்புச் சேவைகள் பிரிவில் சுகாதார உதவியாளர் வேலையைப் பெற்றார்.

வயதான, நடமாடச் சிரமப்படும் நோயாளிகளின் வீடுகளுக்குச் சென்று சுகாதாரப் பராமரிப்பு, வீட்டைச் சுத்தம் செய்தல் போன்ற சேவைகளை ஆற்றுகிறார் இவர்.

“எனக்கு வயதானவர்கள் மிகவும் பிடிக்கும். அவர்கள் தங்கள் வாழ்க்கையைப் பற்றி மனம்விட்டுப் பேசும்போது அவர்களுக்குச் செவிசாய்ப்பேன்,” என்று கூறினார் கங்கா.

வயதான நோயாளி உடற்பயிற்சி செய்ய வழிநடத்தும் சுகாதார உதவியாளர் கங்கா துரைதாஸ் (வலது).
வயதான நோயாளி உடற்பயிற்சி செய்ய வழிநடத்தும் சுகாதார உதவியாளர் கங்கா துரைதாஸ் (வலது). - படம்: சாட்டா காம்ஹெல்த்

“சில நோயாளிகள் கோபமடைவர். இதுபோன்ற சூழல்களையும் நாம் பொறுமையாகக் கையாள்கிறோம். நோயாளிகள் நம்மிடத்தில் வைத்திருக்கும் நம்பிக்கை முக்கியம்,” என்கிறார் கங்கா.

தன் பிள்ளையின் எதிர்காலத்தைக் கருதும் இவர், தன் முயற்சிகளைக் கைவிடப்போவதில்லை என்றார்.

குறிப்புச் சொற்கள்