மென்பொருள் ராணி அடுத்து அழகுராணியாக விரும்புகிறார்

மென்பொருள் ராணி அடுத்து அழகுராணியாக விரும்புகிறார்

2 mins read
14a203d6-23e8-4aec-b333-5148d7e4df37
சிங்கப்பூரைப் பிரதிநிதித்து ‘ஹோட் மோண்ட்’ திருமதி இந்தியா 2024 அனைத்துலக அழகுராணி போட்டியில் பங்கேற்கவுள்ளார் ராணி ஸ்ரீகந்தாச்சாரி. - படம்: ராணி ஸ்ரீகந்தாச்சாரி

தகவல் தொழில்நுட்பத் துறையில் 17 ஆண்டுகளாக பணியாற்றிவரும் ராணி ஸ்ரீகந்தாச்சாரி, 13வது ‘ஹோட் மோண்ட்’ திருமதி இந்தியா 2024 அனைத்துலக அழகுராணி போட்டியில் பங்குபெறுகிறார்.

ஐஸ்வர்யா ராய், சுஷ்மிதா சென் போன்றோரைக் கண்டு வளர்ந்த ராணிக்கு அழகுராணியாக வேண்டும் என்ற ஆர்வம் இருந்தது.

ஆனால், தன் குடும்பத்தார் காரணமாக அந்த ஆசையைத் தனக்குள்ளேயே வைத்துக்கொண்டார்.

இளநிலை, முதுநிலைப் பட்டங்களைப் பொறியியல் துறையில் பெற்று, திருமணமாகி சிங்கப்பூருக்கு வந்த அவர், தகவல் தொழில்நுட்பப் பொறியாளராகத் தொடங்கி, குழுத் தலைவர், நிறுவன உதவித் துணைத் தலைவர் போன்ற நிலைகளுக்கு உயர்ந்தார். தற்போது வங்கித் துறையில் செயல்திட்ட மேலாளராகப் பணிபுரிகிறார்.

எனினும், தன் வாழ்வில் ஏதோ ஒன்று குறைவதாக உணர்ந்தார் ராணி.

அழகுராணிப் போட்டிக்கான விளம்பரத்தைக் கண்டதும் விண்ணப்பித்த அவர், ஸூம்வழி நேர்முகத் தேர்வைக் கடந்து துபாயில் மே மாதம் முதல் வாரத்தில் நடக்கவிருக்கும் இறுதிச்சுற்றுக்குத் தகுதிபெற்றுள்ளார்.

அங்கு பன்னாட்டுப் போட்டியாளர்களோடு அவரும் ஐந்து பெண்மணிகளும் சிங்கப்பூரைப் பிரதிநிதித்துப் போட்டியிடுவர்.

குடும்பம், வேலை, அழகுராணி என வெவ்வேறு பொறுப்புகளையும் சுமந்துவரும் ராணி, தன் நேரத்தைச் சரியாக வகுத்துக்கொள்கிறார்.

“அதிகாலையில் எழுந்து யோகா, உடற்பயிற்சி செய்கிறேன். பின்பு, வேலைக்குச் செல்கிறேன். இரவு 7 மணிக்குப் பிறகு அழகுராணிப் போட்டிக்கான இணையவழிப் பயிலரங்குகளில் பங்குபெறுகிறேன்,” என்கிறார் ராணி.

போட்டியின் திறன் சுற்றுக்காகப் புதிய நடனவடிவையும் அவர் கற்றுவருகிறார்.

பெண்கள் தங்கள் தனித்துவத்தைப் பாராட்ட ஊக்குவியுங்கள். அவர்களது சாதனைகளைப் பாராட்டுங்கள்.
ராணி ஸ்ரீகந்தாச்சாரி

தன் குடும்பத்தார் தனக்குப் பெரும் ஆதரவாக இருப்பதாகக் கூறுகிறார் ராணி.

தன் இன்ஸ்டகிராம் தளத்தில் (@itzme__irreplaceable) பெண் சுகாதாரம், ஆரோக்கிய வாழ்க்கைமுறை, தன்னம்பிக்கை, போன்றவைக் குறித்த கலந்துரையாடல்களை நடத்துகிறார் ராணி.
தன் இன்ஸ்டகிராம் தளத்தில் (@itzme__irreplaceable) பெண் சுகாதாரம், ஆரோக்கிய வாழ்க்கைமுறை, தன்னம்பிக்கை, போன்றவைக் குறித்த கலந்துரையாடல்களை நடத்துகிறார் ராணி. - படம்: ராணி ஸ்ரீகந்தாச்சாரி

“பெண்கள் தங்கள் தனித்துவத்தை அறிய ஊக்குவியுங்கள். அவர்களது சாதனைகளைப் பாராட்டுங்கள்,” என்று கேட்டுக்கொள்ளும் ராணி, பழகிப்போன சூழலிலிருந்து விடுபட்டு சவால்களை எதிர்கொள்ளுமாறு பெண்களுக்கும் அறிவுறுத்துகிறார்.

குறிப்புச் சொற்கள்