மாற்றுத்திறனாளிகளுக்கு ஆதரவுக்கரமாக விளங்கும் செயல்முறை சிகிச்சையாளர் நீதா

மாற்றுத்திறனாளிகளுக்கும் மூப்படையும் சமூகத்திற்கும் ஆதரவுக்கரமாக விளங்க மருத்துவத் துறைக்குச் சுகாதாரப் பராமரிப்புத் துணை நிபுணர்கள் அதிகம் தேவைப்படுவதாகச் சில தனியார் மருத்துவமனைகள் அண்மையில் தெரிவித்தன.

அத்தகைய பொறுப்பில் 34 வயது நீதா பொன்மலர், கடந்த 14 ஆண்டுகளாக செயல்முறை சிகிச்சையாளராகப் பணியாற்றி வருகிறார். இவரது பணி சுகாதாரப் பரமாரிப்புத் துணை நிபுணர் பிரிவின்கீழ் அடங்கும்.

பெரும்பாலும் சிறப்புத் தேவையுடைய பிள்ளைகளைக் கையாளும் நீதா, அவர்களை அரவணைத்துச் சோர்வடையாமல் பணியில் இன்பம் காண்கிறார்.

செயல்முறை சிகிச்சை அமர்வில் சிறுவனுக்கு வழிகாட்டும் நீதா. படம்: அனுஷா செல்வமணி

செயல்முறை சிகிச்சைக்கும் உடற்பயிற்சி சிகிச்சைக்கும் உள்ள வேறுபாடு குறித்து விளக்கிய அவர், “ஒரு நோயாளிக்கு வலி ஏற்படும்போது அதற்கு நிவாரணம் அளிக்கும் விதமாக உடற்பயிற்சி சிகிச்சை இயங்கும்.

“ஆனால், ஒருவரின் அன்றாட அத்தியாவசிய செயல்களைக் கையாளத் தடுமாறுபவர்களுக்குச் செயல்முறை சிகிச்சைக் கருவியாக விளங்கும்,” என்றார்.

பெரும்பாலும் மாற்றுத்திறனாளிகளுக்குக் குறைபாடு இருப்பதால் அவர்களால் வழக்கமாகச் செய்யவேண்டிய செயல்களில் ஈடுபட முடியாது. அப்போது நீதா போன்ற சிகிச்சையாளர்கள் தோள்கொடுக்கின்றனர்.

செயல்முறை சிகிச்சை அமர்வில் சிறுவனுக்கு வழிகாட்டும் நீதா. படம்: அனுஷா செல்வமணி

பல் துலக்குதல், குளித்தல் போன்ற அடிப்படைச் செயல்களுக்குப் பிறரைச் சார்ந்திருக்கும் நோயாளிகளுக்கு நீதாவின் உதவி தேவைப்படுகிறது.

இப்பணிக்கு அர்ப்பணிப்புடன் பொறுமையும் தேவைப்படுகிறது.

‘மைண்ட்ஸ்’ சமூக சேவை அமைப்பில் பணியாற்றும் நீதா, அன்றாடம் பார்ப்பது சிறப்பு தேவையுடைய பிள்ளைகளைத்தான். ஒவ்வொருவரையும் நல்ல புரிதலுடன் அறிந்துகொண்டு அவர்களின் வாழ்வை மேம்படுத்தக் கடப்பாடு கொண்டுள்ளார் இவர்.

“என்னைப் போன்ற செயல்முறை சிகிச்சையாளர்கள் பலரும் தனியார் மருத்துவமனைகளில் பணியாற்றுவார்கள், அல்லது சொந்த மருந்தகங்கள் வைத்திருப்பார்கள்.

“ஆனால், மைண்ட்ஸ் அமைப்பில் பணியாற்றுவதால் என்னால் ஒரு பிள்ளையுடன் அதிக நேரம் செலவிட முடிகிறது. இதனால், அவர்களின் முன்னேற்றத்தையும் என்னால் கண்காணிக்க முடியும்,” என்றார் நீதா.

தன் பணி அளிக்கும் மனநிறைவுக்கு அப்பாற்பட்டு பிள்ளைகள்மீது தான் கொண்டுள்ள பாசமும் நீதாவின் பேச்சில் தொனித்தது.

ஒரு நோய்க்கு இதுதான் மருந்து என்று அறுதியிட்டு கூறமுடியாமல் ஒரு செயல்முறை சிகிச்சையாளராக, தனது புத்தாக்கத் திறனைப் பயன்படுத்திப் பிள்ளையின் வாழ்க்கையை மேம்படுத்துவதில் நீதா களிப்படைகிறார்.

தான் முன்பு கண்ணும் கருத்துமாகக் கவனித்துக்கொண்ட ஒரு சிறுமியைப் பற்றி நீதா நினைவுகூர்கையில், “அந்தச் சிறுமியால் பேசவும் முடியாது, சரியாக நடமாடவும் முடியாது. சைகைகள் மூலமாக என்னிடம் பதில் கூற முற்படுவார். பல ஆண்டு சிகிச்சைக்குப் பிறகு அவர் வெகுவாக முன்னேற்றம் அடைந்தார்,” என்றார்.

மருந்தியல் துறையில் பணியாற்றிய தன் தாயார் இத்துறையைத் தேர்ந்தெடுக்க தனக்கு உந்துசக்தியாக இருந்ததாகக் கூறிய நீதா, “முன்பு மதியிறுக்கம் போன்ற குறைபாடுகள் பற்றி நாம் அரிதாகவே கேட்டிருப்போம். தற்போது நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. அதனால், இத்துறைக்குத் தேவை இருந்துகொண்டே இருக்கும்,” என்றார்.

சுகாதாரப் பராமரிப்புத் துணை நிபுணர்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்ட நீதா, இத்துறைக்கு வர விரும்புபவர்கள் வளர்ச்சி காண வளங்கள் பல கொட்டிக் கிடக்கின்றன என்றும் சொன்னார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!