உள்ளூர்த் தமிழ் நாடகத்துக்குக் கிடைத்த அங்கீகாரம்

2 mins read
d6fa7c09-3e94-4e0a-9ab3-568c06fe1f3f
பச்ச பங்களா, ரெட்ட கொலடா! நாடகம். - படம்: எஸ்பிளனேட் - கடலோரக் கலை அரங்குகள்

அகம் நாடகக் குழு சில மாதங்களுக்கு முன்பு படைத்த ‘பச்ச பங்களா, ரெட்ட கொலடா!’ நாடகப் படைப்புக்கு ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழின் இவ்வாண்டுக்கான லைஃப் தியேட்டர் விருதில் அங்கீகாரம் கிடைத்துள்ளது.

சிறந்த குழுமம் விருதை பெற்ற அக்குழு, சிறந்த இயக்கம், சிறந்த நாடகத்திரை அமைப்பு ஆகிய இதர இரு பிரிவுகளுக்கும் முன்மொழியப்பட்டிருந்தது.

நாடக அரங்கேற்றத்தில் போதிய அனுபவம் இல்லாத ‘சட்னி டிராமா சொசைட்டி’ என்னும் கற்பனை நாடகக் குழு, எவ்வாறு தவறான முறைகளில் படைப்பைச் சொதப்புகிறார்கள் என்பதைத் துல்லியமாக தனது படைப்பு மூலம் எடுத்துக்காட்டியது ‘அகம் தியேட்டர் லேப்’ நாடகக் குழு.

இதற்கு முன்பு ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழின் லைஃப் தியேட்டர் விருதுகளுக்கு எந்த உள்ளூர் தமிழ் நாடகப் படைப்பும் முன்மொழியப்பட்டதில்லை. அகம் நாடகக் குழு உருவாகி ஐந்தாண்டுகள் ஆகவிருக்கும் நிலையில் இந்த விருது அவர்களுக்குப் புதிய அடையாளத்தை தந்துள்ளது.

“ஐந்து மாதங்கள் கடுமையான ஒத்திகை. நடிகர்கள் அனைவரும் இரவு பகல் பாராமல் முழு மனத்தோடு இந்தப் படைப்புக்கு உழைத்தனர். இந்த அங்கீகாரம் மொத்த குழுவுக்கே சேரும்,” என்றார் படைப்பின் தயாரிப்பாளர், இயக்குநர் மற்றும் அகம் நாடகக் குழுவின் நிறுவனருமான சுப்ரமணியன் கணேஷ்.

அழகான மேடை வடிவமைப்பு, அதற்கு ஏற்ற தளவாடங்கள், கதாபாத்திரங்களின் உயிரோட்டமான நடிப்பு ஆகியவை படைப்புக்கு மேலும் மெருகூட்டின.

‘தி பலே தட் கோஸ் ரோங்’ எனும் ஆங்கில நாடகத்தைத் தழுவிய முதல் தமிழ்மொழி படைப்பான ‘பச்ச பங்களா, ரெட்ட கொலடா!’, ‘நாடகத்திற்குள் நாடகம்’ என்னும் கதைக்கருவுடன் உருவாக்கப்பட்டது.

தமிழர்களைத் தவிர்த்து பிற இனத்தவர்களும் தமிழ் மேடை நாடகங்களைக் காண அதிகம் வருகின்றனர். அக்கலையையும் அவர்கள் பாராட்டுகின்றனர்.

நடிக்க தெரியாதவர் போல நடிப்பது கடினம். மேலும், மேடைக்குப்பின் செயல்படுபவர்களின் பொறுப்பு இன்னும் அதிகம். அவர்களின் ஒருங்கிணைந்து செயல்பட்டது பாராட்டுக்குரியது.

“இந்த அங்கீகாரம் தரம் வாய்ந்த மேடை நாடகங்களை மேடையேற்ற ஊக்கம் தருகிறது. தமிழ் நாடகங்களுக்கு அதிக வரவேற்பு கிடைத்துள்ளது. சிங்கப்பூரில் சிறப்பான உள்ளூர்த் தமிழ் நாடகங்கள் தயாரிக்கப்படுகின்றன என்பதற்கான அங்கீகாரமும் கிடைத்துள்ளது,” என்றார் நாடகத்தின் மற்றோர் இயக்குநரான கார்த்திகேயன்.

குறிப்புச் சொற்கள்