‘ஆற்றலின் கருவறை நம் வகுப்பறை’

சிங்கப்பூரின் தமிழ் மொழி வளர்ச்சியில் தமிழ் ஆசிரியர்களின் பங்களிப்பு, காட்சிப்படுத்தல் அதிகம் உள்ள காலகட்டத்தில் தமிழ் மொழியை மாணவர்களிடத்தில் சேர்த்தல் உள்ளிட்ட தலைப்புகளுக்கு, ‘ஆற்றலின் கருவறை நம் வகுப்பறை’ கருத்தரங்கில் பயன்மிக்க விளக்கங்கள் அளிக்கப்பட்டன.

சிங்கப்பூர்த் தமிழாசிரியர் சங்கம் நடத்திய கருத்தரங்கில், தமிழுக்கு இடம் நிறுவிய தமிழவேள் கோ சாரங்கபாணியின் பணியைத் தொடரும் உள்ளூர்த் தமிழ் ஊடகங்கள் மக்களால் பராமரிக்கப்படவேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.

உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையத்தில் ஏப்ரல் 20ஆம் தேதி காலை நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு சுமார் 170 பேர் வருகையளித்தனர்.

தமிழாசிரியர் மேம்பாடு, கற்பித்த உத்திகளின் பகிர்வு உள்ளிட்டவற்றை நோக்கமாகக் கொண்டுள்ளது இக்கருத்தரங்கு.

திரு சாரங்கபாணியின் பிறந்தநாள் அன்று தமிழவேள் கோ சாரங்கபாணியின் பெயரில் இந்த நினைவுக் கருத்தரங்கு நடத்தப்பட்டுள்ளதை சிங்கப்பூர் தமிழாசிரியர் சங்கத் தலைவர் தனபால் குமார் சுட்டினார்.

சமூக சிந்தைமிகு பணி

“சிங்கப்பூரில் தமிழ்மொழிக்கு உள்ள உயர்வான இடத்திற்கும் தமிழ் ஆசிரியர்களின் உன்னத நிலைக்கும் அடித்தளம் அமைத்தவர்,” என அமரர் சாரங்கபாணியை திரு குமார் புகழ்ந்தார்.

ஆசிரியர்கள் சமூக முன்னேற்றத்தை விரும்பி விழுமியங்களையும் பண்பாட்டையும் மாணவர்களுக்குச் சேர்ப்பிப்பிப்பதாக அவர் குறிப்பிட்டார்.

தமிழாசிரியர்கள் கூடுதலானோர் இதுபோன்ற கருத்தரங்குகளிலும் இதர நடவடிக்கைகளிலும் சேரும்படி கேட்டுக்கொண்ட திரு குமார், வரும் ஜூன் மாதம் கனடாவில் நடைபெறவுள்ள உலகத் தமிழாசிரியர் மாநாடு, ஆண்டியிறுதியில் நிகழவிருக்கும் தமிழ்நாட்டுக் கற்றல் பயணம் போன்றவற்றை வாய்ப்புகளாகச் சுட்டினார். பாலர் பள்ளி ஆசிரியர்களும் இத்தகைய திட்டங்களில் ஒருங்கிணைக்கப்பட்டதை அவர் குறிப்பிட்டார்.

தமிழ் ஊடகத்துறை துணை

நிகழ்ச்சியில் தமிழ் முரசின் பொறுப்பாசிரியர் த.ராஜசேகர், தமிழ் ஆசிரியர்களின் தொண்டைச் சிறப்பித்து தமிழ் வளர்க்கும் அவர்களது முயற்சிக்கு தமிழ் ஊடகத்துறை துணை நிற்பதைக் குறிப்பிட்டார்.

“சிங்கப்பூரில் தமிழை ஆணித்தரமாக ஊன்றச்செய்த பெரியவர்களில் திரு சாரங்கபாணி, சிறந்த பேச்சாளர், எழுத்தாளர். அரிய தொண்டுகளில் ஒன்று, தமிழ் முரசு பத்திரிகையைத் தொடங்கியது. பேனா முனை பலமாகப் பேசும் என்பதைத் திண்ணமாக நம்பினார்,” என்று திரு ராஜசேகர் கூறினார்.

பள்ளியைத் தாண்டி சிங்கப்பூரில் தமிழுக்கு தமிழ்ச் செய்தி ஊடகங்கள் உரம் சேர்ப்பதைச் சுட்டிக்காட்டினார் அவர். அதேநேரத்தில் இந்த ஊடகங்களின் தொடர்ச்சி மக்களின் கையில் உள்ளது என்றும் அவர் கூறினார்.

“நம் தமிழ் ஊடகங்கள், காட்டில் முளைக்கும் மரங்கள் போலவோ சாலையோர செடிகள் போலவோ அல்ல. நாம் அதற்குத் தண்ணீர் ஊற்றவேண்டும்,” என்று கூறினார்.

தமிழ் அதிகாரத்துவ மொழியாக இருப்பதால் மட்டும் அரசாங்கத்தார் எப்படியாவது அதனைக் காத்துவிடுவார்கள் என மெத்தனத்துடன் இருந்துவிடக்கூடாது என்று அவர் அறிவுறுத்தினார்.

தமிழ் முரசு செயலி, செய்தி மீடியாகார்ப் செயலி போன்றவற்றையும் பதிவிறக்கம் செய்யும்படி திரு ராஜசேகர் பார்வையாளர்களை ஊக்குவித்தார்.

காட்சிப்படுத்துதல்வழி கற்றல்

‘தர்மதுரை’ (2016), ‘மாமனிதன்’ உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கிய சீனு இராமசாமி, நிகழ்வில் கலந்துகொண்டு தமிழாசிரியர்களின் முக்கியப் பங்கு குறித்துப் பேசினார்.

தமிழாசிரியர்கள் வரும்போதுதான் வகுப்பு பூந்தோட்டமாக மாறுவதாகக் கூறிய அவர், தாய் தந்தை பேசும் மொழியைத் தமிழ் ஆசிரியர்கள் பேசுவதால் மாணவர்களுக்கு அவர்களைப் பிடிக்கும் என விளக்கினார். இந்தியாவில் டிவிஎஸ் பள்ளியின் அருணாசலம் என்ற தம் தமிழ் ஆசிரியருக்கு நன்றி நவின்றார் திரு சீனு.

காட்சிப்படுத்துதல் என்பது இக்கால கல்விக்கு மிக அவசியம் என்பதை வலியுறுத்திய திரு சீனு, இதனை ஆசிரியர்கள் கலந்துரையாடிப் பேசுவது நெகிழ்வை அளிப்பதாகக் கூறினார்.

திருவள்ளுவர், கம்பர், பாரதிதாசன் பற்றிய திரைப்படங்களும் சிறந்த ஆவணப்படங்களும் இல்லாத நிலையில் அவற்றைக் காட்சிக்குக் கொண்டுவரும் பணி தமிழாசிரியர்களுக்கு இருப்பதாகக் கூறினார்.

தமிழாசிரியர்கள் இயக்குநர்களைப் போல செயல்படவேண்டும் என்ற கட்டாயம் உள்ளது. ஆனால் இதனை ஆராேக்கியமான போக்கு என்று அவர் கூறினார்.

‘ஆடிப்பாடி வேலை செய்தால் அலுப்பிருக்காது’ என்பது கல்விக்கும் பொருந்தும் என்று கூறிய திரு சீனு, சிரித்து மகிழக்கூடிய இனிமையான கல்வி அனுபவத்தைத் தமிழ் வகுப்பிலிருந்து பெற முடியும் என்று கூறினார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!