திரைத்துறைக்கு இளையர்களை ஈர்க்க முயற்சி

திரைத்துறைக்கு இளையர்களை ஈர்க்க முயற்சி

2 mins read
33750cd4-7feb-479e-979f-79309227ee3e
திரைக்குப் பின்னால் நிகழ்ச்சியில் இடம்பெற்ற அமர்வு. - படம்: வாங்கோ ஸ்டுடியோஸ்
Google News Preferred Icon

உள்ளூர் இலக்கியம், மெய்ம்மை ஆகியவற்றை ஒட்டித் தயாரிக்கப்பட்ட ஐந்து உள்ளூர் குறும்படங்களைக் காட்சிப்படுத்தி, அதில் ஈடுபட்ட இளையர்களின் அனுபவங்களை எடுத்துரைக்கும் நிகழ்ச்சிக்கு கடந்த மாதம் 27ஆம் தேதி தேசிய நூலகக் கட்டடத்தில் சிங்கப்பூர் இந்திய நாடக, திரைப்பட ஆர்வலர்கள் மேடைக்கலை (சிட்ஃபி) எனும் அமைப்பு ஏற்பாடு செய்திருந்தது.

‘திரைக்குப் பின்னால்’ என்ற அந்நிகழ்ச்சியில் ‘மனிதன்’, ‘அலைகள்’, ‘உன் வாசலில்’, ‘டேக் இட் ஈசி ஊர்வசி’, ‘என் பிடியில் நீ’ எனும் ஐந்து உள்ளூர் குறும்படங்களைப் பார்வையாளர்கள் கண்டு மகிழ்ந்தனர். அதைத் தொடர்ந்து குறும்படத்தை இயக்கியவர்களும் அதில் நடித்தவர்களும் சிட்ஃபியின் நிறுவனரும் உள்ளூர் திரைப்பட இயக்குநருமான சலீம் ஹாடியுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.

திரைத்துறையில் இளையர்கள் முத்திரை பதிக்க வேண்டும் என்ற நோக்கத்திலும் திரைப்படங்களைத் தயாரித்தல், படங்களில் நடித்தல், திரைப்படம் இயக்குதல் போன்றவற்றில் மிகுந்த ஆர்வம் கொண்டவர்களின் ஆற்றலை மெருகூட்டவும் முயற்சி எடுப்பதாகக் கூறினார் திரு ஹாடி.

‘அலைகள்’ குறும்படத்தை இயக்கிய சைலேஷ், ஒருவரின் மனநலம் எவ்வளவு முக்கியம் என்பதைத் தனது குறும்படத்தில் வெளிப்படுத்தியுள்ளதைப் பற்றியும் இயக்குவதில் எதிர்நோக்கிய சவால்களைப் பற்றியும் பகிர்ந்தார்.

‘டேக் இட் ஈசி ஊர்வசி’ திரைப்படத்தை இயக்கிய கார்த்திக், ஒரு மனிதன் எவ்வாறு வேறொரு மனிதனை பாதிப்படையச் செய்கிறான் என்பதை நகைச்சுவை வடிவில் தனது குறும்படத்தில் காட்சிப்படுத்தி இருந்தார்.

சிட்ஃபி அமைப்பின் இணை நிறுவனரும் ‘என் பிடியில் நீ’ எனும் குறும்படத்தில் நடித்திருந்த நடிகையுமான த பிரியதரிசினி, நடிகர் என்ற கண்ணோட்டத்தில் தனது அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார்.

“நாம் நடிக்கும் ஒவ்வொரு கதாபாத்திரத்திலும் நம்மில் ஒரு பகுதி இருக்கும். கதாபாத்திரத்தை நன்கு உள்வாங்கிக்கொண்டு நடிக்கத் தொடங்குவது மிக முக்கியம்,” என்று பிரியதரிசினி கூறினார்.

அமர்வில் உரையாடிய அனைவரும் வரும் காலங்களில் உள்ளூர் சமுதாயம் சார்ந்த கதைகளை மையப்படுத்தித் திரைப்படங்கள் தயாரிக்க வேண்டும் என்று ஒருமித்துக் கூறினர்.

சிங்கப்பூர் இலக்கியத்தைக் கருவாக வைத்து திரைப்படங்களை உருவாக்க வேண்டும் என்பதில் அதிக நாட்டம் தெரிவித்த திரு ஹாடி, “உள்ளூரில் பல எழுத்தாளர்களின் கதைகள் உள்ளன. அந்தக் கதைகளைப் புத்தக வடிவில் மட்டும் புதைத்து வைக்காமல் மக்களுக்கு அந்தக் கதைகளின் அருமையைப் பரப்ப திரைப்படங்கள் எடுக்கப்பட வேண்டும்,” என்று தெரிவித்தார்.

சமுதாயத்தில் நிகழும் அநீதி, படம் எடுக்க தனக்கு உந்துதல் அளிப்பதாகக் கூறிய திரு ஹாடி, “படம் மூலம் நான் கதை சொல்ல விரும்புகிறேன். அதைத்தான் மக்களும் விரும்பிப் பார்ப்பார்கள். அதனால் திரைப்படங்கள்மீது எனக்கு ஆர்வம் அதிகரித்தது,” என்று சொன்னார்.

குறிப்புச் சொற்கள்