தொழில் முன்னேற்றம் தேடும் உள்ளூர் இந்தியப் பணியாளர்களை மேம்படுத்தும் நோக்கில் ஜாலான் புசார் சமூக மன்றத்தில் மே 4ஆம் தேதி மாலை நடத்தப்பட்ட ‘நாளை நமதே’ நிகழ்ச்சியில் கிட்டத்தட்ட 300 பேர் கலந்துகொண்டு பலனடைந்தனர்.
மீடியாகார்ப் தமிழ்ச் செய்தி, நடப்பு விவகாரப் பிரிவு ஏற்பாடு செய்த இந்த நிகழ்ச்சியில் கல்வி, மனிதவளத் துணை அமைச்சர் கான் சியாவ் ஹுவாங் கலந்துகொண்டார்.
“ஸ்கில்ஸ்ஃபியூச்சர் தளத்தில் திறன்களை வளர்த்துக்கொள்ள பல வாய்ப்புகள் உள்ளன. 40 அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடைய சிங்கப்பூரர்களுக்கு, ஸ்கில்ஸ்ஃபியூச்சர் பயிற்சி உதவிநிதியாக கூடுதலாக $4,000 வழங்கப்படுகிறது. அதற்குக் காலாவதித் தேதி கிடையாது. இதன் மூலம், நீங்கள் உங்கள் திறன்களை மேம்படுத்திக்கொள்ளலாம்,” என்றார் அவர்.
இரண்டாவது ஆண்டாக நடைபெறும் இந்நிகழ்ச்சி, மத்திய சிங்கப்பூர் சமூக மேம்பாட்டு மன்றம், இ2ஐ, சிங்கப்பூர்ப் பணியாளர்கள், வாழ்நாள் கற்றல், ஸ்கில்ஸ்ஃபியூச்சர் ஆலோசனை போன்ற அமைப்புகளின் ஆதரவுடன் நடத்தப்பட்டது. பயிலரங்குகள், கண்காட்சி, விளையாட்டுகள், அதிர்ஷ்டக் குலுக்கு எனப் பல்வேறு அம்சங்கள் இந்த நிகழ்ச்சியில் இடம்பெற்றன.
பங்கேற்பாளர்களில் ஒருவரான விண்வெளித் துறையில் பணிபுரியும் சீனிவாசன் பாஸ்கர், 49, தம் திறன்களை இக்காலகட்டத்தில் பயன்படுத்துவதற்கு உதவ நிகழ்ச்சியில் பல தளங்கள் உள்ளதை அறிந்துகொண்டதாகக் கூறினார்.
மத்திய சிங்கப்பூர் மேம்பாட்டு மன்றத்தின் ஸ்கில்ஸ்ஃபியூச்சர் ஆலோசகர் ரமேஷ் முத்துசாமி, ஸ்கில்ஸ்ஃபியூச்சர் ஆலோசனைப் பயிலரங்கை நடத்தினார்.
பகுதிநேர நிர்வாகியாக வேலைசெய்யும் திருமதி ரங்கராஜன் பிரியா, 47, “ஒரு முழுநேர வேலைக்குத் தேவைப்படும் திறன்கள் குறித்து அறிந்துகொள்ள இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டேன்.”
“இந்தியப் பெண்கள் பலரும் தங்கள் பிள்ளைகளைக் கவனித்துக்கொள்ள வேண்டியிருப்பதால் வேலைக்குச் செல்வதில்லை. அவர்கள், வேலையில் சேர்வதற்கான திறன்களையும் அறிவாற்றலையும் நம்பிக்கையையும் இதுபோன்ற நிகழ்ச்சி மூலம் கற்றுக்கொள்ளலாம்,” என்று கூறினார்.