அன்னையர் தினத்தை முன்னிட்டு, எலிசபத் மீரா பல்குணன், 41, விருந்தினர்களை வரவேற்பதற்காக தம் வீட்டை அலங்கரிப்பது வழக்கம்.
வீட்டின் வரவேற்பறையில் பெரிய படம் ஒன்று மாட்டப்பட்டிருந்தது. அதில் ஒரு பிஞ்சுக் குழந்தையின் செல்ல முகம்.
ஆதாம் ஆதிராஜ் முருகன் என்ற அந்தக் கைக்குழந்தை, அரியவகை நோய்களால் பிறந்து ஆறே மாதங்களில் இறந்தது.
இத்துயரம் நடந்து நான்கு ஆண்டுகள் ஆகிவிட்டன.
உற்றார் புடைசூழ குழந்தையை வரவேற்க திருவாட்டி மீராவும் அவரின் கணவரும் தேசிய பல்கலைக்கழக மருத்துவமனையில் 2019ஆம் ஆண்டு அக்டோபர் 16ஆம் தேதி காத்திருந்தனர். ஆவல் விரைவில் பேரதிர்ச்சியாய் [Ϟ]உருமாறியது.
நுரையீரலிலுள்ள ரத்த அழுத்தம், தொண்டைக்குழாய் சரியாக உருவாகாமல் மிக மிருதுவாக உள்ளதைக் குறிக்கும் ‘கொன்ஜெனிட்டல் லெரிங்கோமலெசியா’ நோய் உள்ளிட்ட சிக்கல்களுடன் ஆதாம் பிறந்தார்.
திருவாட்டி மீராவின் மூத்த மகளுக்கு அப்போது 11 வயது. இரண்டாவது திருமணமாக தளவாடத் துறையில் பணியாற்றிய பாலமுருகன் மசாப்சாமியை மணந்தார் மீரா.
தம் குடும்பத்தில் முதல் பேரனாகவும் தம் கணவர் குடும்பத்தில் முதல் பேரப்பிள்ளையாகவும் ஆதாம் பிறந்ததாகத் திருவாட்டி மீரா கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
கர்ப்பகாலத்தில் சென்ற பரிசோதனைகளில் பிரச்சினை எதுவும் தென்படவில்லை என்றார் அவர். இதற்கான காரணம் சரியாக இன்னும் அறியப்படவில்லை என்று மருத்துவர்கள் கூறியதாகச் சொன்னார்.
“எங்கள் மகனுக்குப் பலவற்றைக் கற்றுத்தர எண்ணியிருந்தோம். இதற்கு மாறாக, ஆதாம்தான் எங்களுக்குக் கற்றுக்[Ϟ]கொடுத்தார். வாழ்க்கையைப்பற்றி,” என அவர் கூறினார்.
குழந்தை ஆதாமின் நிலையால் குழந்தையின் வயிற்றில் இணைக்கப்பட்ட குழாய்களின் வழியாக குழந்தைக்குப் பால் ஊட்டப்பட்டது.
இறுதியில், ஆதாமின் உயிர் 2020ஆம் ஆண்டு மே 2ஆம் [Ϟ]தேதி இரவன்று பிரிந்தது. அதற்குச் சற்று முன்தான் ஆதாமின் தந்தை முதல்முறையாக ஆதாமைத் தம் கைகளில் தூக்கினார்.
குழந்தைக்காக வாங்கிய துணிகள், விளையாட்டுப் பொருள்கள் ஆகியவற்றை அப்[Ϟ]புறப்படுத்திய வேதனையைப் பற்றிக் கூறியபோது திருவாட்டி மீரா கண்கலங்கினார்.
வீட்டில் குழந்தையாகத் தவழ்ந்து, நடை பழகி பெரிய ஆளாகியிருந்தால் எப்படி இருந்திருக்கும் என்ற எண்ணங்கள், தன்னுள் தோன்றி மறைவதாக அவர் கூறினார்.
“இந்நேரத்தில் நான் என் மகளையும் நினைத்துப்பார்க்கவேண்டும். அன்னையர் தினத்தைத் தொடர்ந்து கொண்டாடவேண்டும். என் தாயார் என்னுடன் தங்குகிறார். நான் எல்லாருக்காகவும் சமைத்து உபசரிப்பேன். அத்துடன் தேசியப் பல்கலைக்கழக மருத்துவமனை தாதியருக்கும் ரோனல்டு மெக்டோனல்ட் இல்லத்தினருக்கும் உணவு அனுப்புவேன்,” என்றார் அவர்.
குழந்தைகளை இழந்த வேறு பல அன்னையரின் தொடர்பைச் சமூக ஊடகங்களின் மூலம் பெற்ற திருவாட்டி மீரா, அவர்[Ϟ]களிடமிருந்து கற்றுக்கொண்டு இப்போது பிறருக்கும் வழிகாட்டுகிறார்.
“இவ்வாண்டு ஆதாமின் நினைவு[Ϟ]நாளுக்காக கோயிலில் அன்னதானம் செய்தோம். அவர் பெயரில் தொடர்ந்து நற்காரியங்கள் செய்து அன்புடன் வாழ உறுதியாய் இருக்கிறோம்,” என்று கூறினார் மீரா.