செஞ்சிலுவை இல்லத்தில் தொண்டாற்றிய சிண்டா இளையர்கள்

செஞ்சிலுவை இல்லத்தில் தொண்டாற்றிய சிண்டா இளையர்கள்

3 mins read
33f8d613-ca04-4a5c-bec0-50d3df3c7294
‘செஞ்சிலுவை இல்லத்தில்’ உதவிய இளையர்கள்.  - படம்: சிண்டா  

சிண்டா இளையர் குழு, ஊனமுற்றோருக்கான ‘செஞ்சிலுவை இல்லம்’ உடன் இணைந்து, சமூகத்தில் உள்ள ஊனமுற்ற முதியவர்களின் வாழ்க்கையை மேம்படுத்தும் நோக்கில் முயற்சி ஒன்றை மேற்கொண்டது.  

ஏப்ரல் 27 நடைபெற்ற நிகழ்ச்சியில் 24 இளையர்கள், முதியவர்களுடன் நட்புறவை ஏற்படுத்திக் கொண்டனர். நிகழ்ச்சியில் மாணவர்கள் சக்கர நாற்காலிகளைச் சுத்தம் செய்வதில் உதவினர், அதன் பிறகு அவர்கள் முதியவர்களுடன் விளையாட்டுகள் மூலம் இணைந்தனர்.

இந்தத் தொண்டூழிய நிகழ்ச்சி தொழில்நுட்பக் கல்விக் கழக (ஐடிஇ) தலைமைத்துவத் திட்டத்தின் ஒரு பகுதியாகும். இதில், சமூகத்தில் வசிப்பவர்களின் வாழ்க்கையைப் பங்கேற்பாளர்கள் மேம்படுத்துவதற்கும் ஈடுபடுத்துவதற்கும் பல்வேறு நடவடிக்கைகள் ஏற்பாடு செய்யப்படும்.  

சிண்டாவின் தலைமை நிர்வாக அதிகாரி திரு அன்பரசு ராஜேந்திரன், “இந்த நிகழ்ச்சி இளைய மற்றும் மூத்த தலைமுறையினரை ஒன்றிணைத்தது. கணிசமான முதியோர் தொகை உள்ள இந்த நாட்டில், அவர்களைப் பராமரிப்பதற்குத் தேவையான திறன்களையும் அறிவையும் நமது இளைய தலைமுறையினர் பெற்றிருப்பது மிகவும் அவசியம். 

“இதுபோன்ற அர்த்தமுள்ள தொடர்புகளை நமது இளையர்கள் தீவிரமாக ஏற்பாடு செய்வதைக் கண்டு சிண்டா பெருமிதம் கொள்கிறது,” என்றார். 

ஐடிஇ தலைமைத்துவ திட்டம் 

ஐடிஇ மாணவர்களுக்கான ஐந்து வாரத் திட்டமாகும். இது அவர்களின் தலைமைத்துவ திறன்களை மேம்படுத்துவதற்கான வாய்ப்பை வழங்குகிறது. தலைமைத்துவ முகாம், மென்திறன் தொகுதி பயிற்சிகள் மற்றும் சமூக ஈடுபாடு நிகழ்ச்சிகள் போன்ற தொடர் நடவடிக்கைகளில் அவர்கள் பங்கேற்பார்கள்.

பங்கேற்பாளர்களில் ஒருவரான தனிதா நாகராஜன், 18, மூத்த இல்லவாசிகளைப் பார்த்தது, அவர்களில் பலருக்குக் குறைபாடுகள் காரணமாக சிறப்பு மருத்துவக் கவனிப்பு தேவைப்பட்டது போன்றவை தனக்குள் ஆழ்ந்த சிந்தனையைத் தூண்டியதாகக் கூறினார். 

ஐடிஇ காலேஜ் சென்ட்ரலில் கணக்கியல் படிக்கும் இவர், ”இல்லவாசிகளுக்கு உடல்ரீதியான கட்டுப்பாடுகள் இருந்தபோதிலும் நான் இல்லவாசிகளுடன் அவர்களின் படுக்கையில் இருப்பவர்களுடன் கூட பாடல் மற்றும் நட்பு மூலம் அவர்களின் நாளையும் என்னுடைய நாளையும் பிரகாசமாக்க முயற்சித்தேன்,” என்றார். 

ஊனமுற்ற முதியவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் பற்றிய விழிப்புணர்வை அதிகரிப்பதன் மூலம் இளையர்கள் மற்றும் முதியோர்களுக்கு இடையே நேர்மறையான உறவுகளை வளர்க்க முடிந்தது. 

மேலும், மருத்துவத் துறையில் பராமரிப்பாளர்களின் பங்கைப் பங்கேற்பாளர்கள் புரிந்துகொள்ள இந்நிகழ்ச்சி உதவியது. முதியவர்களுக்கு ஆதரவளிப்பது குறித்த முக்கியத்துவத்தையும் அவர்கள் புரிந்துகொண்டார்கள். 

பங்கேற்பாளர்களில் ஒருவரான திவேஷ் தமிழ்செல்வம், 18, திட்டச் செயல்பாட்டின்போது நீக்குப்போக்குத்தன்மையும் குடியிருப்பாளர்களின் நலன்களைப் புரிந்துகொள்வதன் முக்கியத்துவத்தை கற்றுக்கொண்டதாகவும் கூறினார். 

ஐடிஇ காலேஜ் வெஸ்ட்டில் செயலி உருவாக்கப் பாடம் பயிலும் இவர், “மல்யுத்தத்தில் ஓர் இல்லவாசியின் ஆர்வத்தை நான் கவனித்தேன், இதைப் பற்றி அவருடன் மேலும் பேசினேன். இது உண்மையான உற்சாகத்தையும் இணைப்பையும் தூண்டியது,” என்றார். 

ஐடிஇ காலேஜ் ஈஸ்ட்டில் வேதியியல் செயல்முறை தொழில்நுட்பம் படிக்கும் ரேஷ்ணி வேலுசாமி, 17, “இதுபோன்ற திட்டங்களில் ஒரு பகுதியாக இருப்பதற்கான வாய்ப்பு மிகவும் பலனளிக்கிறது. மக்களின் முகத்தில் புன்னகையைக் கண்டு, அவர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்துவதில் நான் பங்கு வகித்தேன் என்பது எனக்கு நம்பமுடியாத மனநிறைவை அளிக்கிறது. 

“நீங்கள் செய்வது உங்களுக்குத் திரும்பக் கிடைக்கும்,” என்று சொல்வதுபோல், சாத்தியமான இடங்களில் நேர்மறை மற்றும் கருணையைப் பரப்பும் சக்தியை நான் நம்புகிறேன்,” என்றார் அவர். 

குறிப்புச் சொற்கள்