சுயமாக முடிவெடுக்கும் ஆற்றலை ஒருவர் இழக்க நேரிட்டால், அவர் சார்பாக மற்றொருவர் முடிவெடுக்க உரிய அதிகாரத்தை வழங்கும் ஆவணம் ‘நிரந்தர உரிமைப் பத்திரம்’. அந்த ஆவணத்திற்கு இந்தியச் சமூகம் இலவசமாக பதிந்துகொள்ளும் நிகழ்வு மே 12ஆம் தேதி சிராங்கூன் சாலையில் உள்ள பிஜிபி மண்டபத்தில் நடைபெற்றது.
பொதுக் காப்பாளர் அலுவலகம் விடுத்த கோரிக்கையின் பேரில் இந்து அறக்கட்டளை வாரியம் ஏற்பாடு செய்திருந்த இந்நிகழ்வில் பத்து வழக்கறிஞர்கள் கலந்துகொண்டு பங்கேற்றோருக்கு நிரந்தர உரிமைப் பத்திரத்திற்குப் பதிவுசெய்ய உதவினர்.
இந்த நிகழ்வில் இப்பத்திரத்திற்கு மொத்தம் 97 பேர் பதிந்துகொண்டதே இதுவரையிலான ஆக அதிக எண்ணிக்கை.
வயது வேறுபாடின்றி, 21 வயதுக்கு மேற்பட்ட யாவரும் சீரான உடல் நலத்தில் இருக்கும்போதே உரிமைப் பத்திரத்திற்கு பதிந்துகொள்வது சிறந்தது என்று சேவா செயற்குழுத் தலைவரும் வழக்கறிஞருமான திருவாட்டி சுசீலா கணேசன் கூறினார்.
பதிவு செய்யத் தவறினால், பிற்காலத்தில் எதிர்பாராது முடிவெடுக்கும் ஆற்றலை இழக்கும் நிலை ஏற்பட்டால் நீதிமன்றம் சென்று மனநல ஆற்றல் சட்டத்தின்கீழ் முடிவெடுக்கும் உரிமையைப் பெற வேண்டும்.
இதற்கு ஆயிரக்கணக்கில் செலவு செய்வதோடு, பல்வேறு சிரமங்களுக்கும் ஆளாகலாம். இதனைச் செய்யாமல் காலம் தாழ்த்துவது மனவுளைச்சலுக்கும் வழிவகுக்கும் என்றும் கூறி இந்த பதிவின் அவசியத்தை உணர்த்தினார் திருவாட்டி சுசீலா.
பிள்ளைகள், இணையர் உள்ளிட்ட ரத்த பந்தங்களுக்கோ, நண்பர்களுக்கோ இந்த உரிமையை தரலாம். நம்பிக்கைக்குரிய, 21 வயதைக் கடந்த, திவால் ஆகாத யாருக்கு வேண்டுமானாலும் இந்த உரிமையைத் தரலாம் என அவர் சொன்னார்.
கடந்த மூன்று ஆண்டுகளில் நான்காம் முறையாக நடைபெறும் இந்நிகழ்ச்சி மூலம் இதுவரை 300க்கும் மேற்பட்டோர் இந்த உரிமைப் பத்திரத்திற்குப் பதிந்துகொண்டுள்ளனர் என்றார் திருவாட்டி சுசீலா.
தொடர்புடைய செய்திகள்
ஒருவரது காலத்துக்குப் பின்னர் சொத்துரிமையை பிறருக்கு அளிப்பதே உயில் எனும் ஆவணம். ஆனால், ஒருவர் உயிருடன் இருக்கும்போதே முடிவெடுக்க இயலாமல் போனால் அவரது உடல்நிலை குறித்தும், சொத்து உள்ளிட்ட பிற அலுவல் முடிவுகளையும் எடுக்கும் அதிகாரத்தை வழங்குவது நிரந்தர உரிமைப் பத்திரம். இது இறந்த பின்னர் செல்லாது. இந்த வேறுபாட்டை அறிந்து உரிய பதிவை செய்ய வேண்டும் என்றார் சட்ட ஆலோசகர், வழக்கறிஞர் ரா. கிருஷ்ண திவ்யா, 28.
தொண்டூழியராக இந்நிகழ்ச்சியில் பங்கேற்று பலருக்கும் பதிவு செய்ய உதவியது மனநிறைவாக இருந்தது என்றார் வழக்கறிஞர் கந்தன் ராகவேந்திரா, 38.
மக்கள் கழக நற்பணிப் பேரவைத் தலைவர் ராமமூர்த்தி இந்நிகழ்ச்சியில் பங்கேற்று நிரந்தர உரிமைப் பத்திரத்திற்குப் பதிந்துகொண்டார்.
“வழக்கறிஞரிடம் சென்று இதனைப் பதிவு செய்தால் கட்டணம் செலுத்த வேண்டிவரும். இங்கு இலவசமாக செய்து தருகின்றனர். அதனை பயன்படுத்தி பதிவு செய்தது மகிழ்ச்சி,” என்றார் அவர்.
தம் மகள் கலைச்செல்விக்கு உரிமையைப் பதிவு செய்தார் திருவாட்டி லட்சுமி, 77. தமக்கு வயதாகுவதால் தமக்கான முக்கிய முடிவுகளை தம் பிள்ளைகள் எடுத்தால் சிறப்பாக இருக்கும் எனக் கருதியதால் இதற்குப் பதிவு செய்துள்ளதாக அவர் கூறினார்.
எதிர்காலத்தில் ஞாபக மறதி நோய் காரணமாக நினைவாற்றலை இழக்கும் நிலை ஏற்படலாம் என்பதால் தம் மகனின் அறிவுரையின் பேரில், உரிமைப் பாத்திரத்திற்குப் பதிவு செய்ததாகச் சொன்னார் திருவாட்டி மாரி, 56.
தொழில்நுட்பத் துறையில் பணியாற்றும் அவருடைய மகன் விஸ்வன், 28, தமக்குத் தெரிந்த வழக்கறிஞர்கள் மூலமாக இதன் முக்கியத்துவத்தை அறிந்து இந்நிகழ்வில் இலவசமாக பதிவுசெய்யும் வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டதாகச் சொன்னார்.

