தமிழ்மொழி விழாவை முன்னிட்டு உட்லண்ட்ஸ் இந்திய நற்பணிச் செயற்குழுவும் லிஷா இலக்கிய மன்றமும் இணைந்து ‘தமிழோடு விளையாடு’ என்ற நிகழ்ச்சிக்கு ஏப்ரலில் ஏற்பாடு செய்திருந்தன.
உட்லண்ட்ஸ் வட்டார நூலகத்தில் இடம்பெற்ற நிகழ்ச்சியில் மாணவர்களின் தமிழ்மொழி ஆர்வத்தைத் தூண்டும் விதமாக, பல அங்கங்களில் அவர்களின் பங்கேற்பு அதிகம் இருந்தது.
மாணவர்களின் பேச்சாற்றலை வளர்க்க ஒட்டி, வெட்டி பேசுதல் அங்கம் இடம்பெற்றது. அதில் ஒரு தலைப்பை ஒட்டியும் வெட்டியும் மாணவர்கள் பேச வேண்டும்.
இக்காலத்தில் பள்ளிச் சீருடை அணிய தேவையா இல்லையா, உடற்பயிற்சி செய்வது அவசியமா இல்லையா போன்ற தலைப்புகளில் பங்குகொண்ட மாணவர்கள் அவர்களின் பேச்சுத் திறனை வெளிப்படுத்தினர்.
அதைத் தொடர்ந்து, பார்வையாளர்களின் கவனத்தை ஈர்க்கும் விதமாக பட்டிமன்றம் இடம்பெற்றது. வளர்தமிழ் இயக்கத்தின் துணைத் தலைவர் ஜோதி மாணிக்கவாசகம், ‘வாழ்வில் வெற்றி பெற அதிக ஆற்றல் தரக்கூடியது கற்றறிந்த அறிவே, அனுபவ அறிவே’ என்ற தலைப்பில் இடம்பெற்ற விவாதத்தில் நடுவராக இருந்து வழிநடத்தினார்.
வெவ்வேறு பின்னணியிலிருந்து வந்த ஆறு பேச்சாளர்கள் பட்டிமன்றத்தில் கலந்துகொண்டனர். ‘வாழ்வில் வெற்றி பெற கற்றறிந்த அறிவுதான் அவசியம்’ என்று ஆணித்தரமாகக் கூறி விவாதத்தைத் தொடங்கினார் மாணவி ஸ்ம்ருதா சுரேஷ்.
“அனுபவம் பல வகைகளில் ஒருவரை ஆற்றல்மிக்கவராக ஆக்கினாலும், கல்வியறிவு இல்லாமல் ஒருவர் அனுபவம் பெற முடியாது. ஊசி போட தெரிந்த அனுபவம் இருக்கும் ஒருவரை நம்பலாமா? அல்லது மருத்துவப் படிப்பு மேற்கொண்ட ஒரு மருத்துவரை நம்பி சிகிச்சை பெற்றுக்கொள்வோமா?” என்று வினவினார் ஸ்ம்ருதா.
வாகன உரிமத்தை ஓர் எடுத்துக்காட்டாகச் சுட்டிய அவர், “என்னதான் ஒருவருக்கு வாகனம் ஓட்ட தெரிந்தாலும் அவர் வாகன உரிமம் பெற்று அதில் தேர்ச்சி பெற்ற பிறகே சாலையில் வாகனத்தை ஒட்ட முடியும்,” என்று கூறி நடுவரின் பாராட்டைப் பெற்றார்.
தொடர்புடைய செய்திகள்
எதிரணியைச் சேர்ந்த மாணவி வைஷ்ணவி கண்ணன், ஒருவர் எவ்வளவுதான் கல்வியறிவு பெற்றிருந்தாலும் அதை அனுபவம் மூலம்தான் மெருகூட்ட முடியும் என்று வாதிட்டார்.
“மருத்துவர்களுக்குப் பெருமளவு கல்வியறிவு இருந்தாலும், அவர்கள் வேலைப் பயிற்சி மேற்கொண்ட பிறகே மருத்துவப் பணியைத் தொடங்குகின்றனர்.
“வேலைப் பயிற்சி அவர்களுக்கு அதிக அனுபவம் தருவதால், நோயாளிகளுக்கு அவர்களால் சிகிச்சை அளிக்க முடிகிறது,” என்று தெளிவான சொற்களில் ஆழமான கருத்துகளை வைஷ்ணவி பதித்தார்.
அமரர் லீ குவான் யூவை தனது உரையில் எடுத்துக்காட்டாகக் குறிப்பிட்ட வைஷ்ணவி, “அவர் ஜப்பானிய ஆக்கிரமிப்பின்போது பட்ட அனுபவத்தால், சிங்கப்பூரர்களுக்கு கடினமான நிலை ஏற்பட்டுவிடக் கூடாது என்று எண்ணி நாட்டை மேம்படுத்தினார்,” என்று கூறினார்.
இரு அணிகளைச் சேர்ந்த பேச்சாளர்களைப் பாராட்டிய நடுவர், “ஆதிகாலத்தில் கல்வியறிவு இல்லாத உழவர்கள் அவர்களின் அனுபவத்தைக் கொண்டே விவசாயம் செய்தனர். இன்றைய காலத்தில் விவசாயத்தைப் பற்றி படித்துவிட்டு வரும் நிபுணர்கள் தவறான வழிகளில் ஆலோசனை கூறி விவசாயத்தை அழித்துவிட்டனர்,” என்றார்.
“இருந்தாலும், இக்காலத்தில் அனுபவ அறிவு வெற்றியடைய, கற்றல் அறிவு மிக முக்கியம். அதனால் வாழ்வில் வெற்றி பெற கற்றறிந்த அறிவு தான் அவசியம்,” என்று கூறி நடுவர் விவாதத்தை நிறைவுசெய்தார்.
பட்டிமன்றத்தைத் தொடர்ந்து, ‘லாவணி’ எனப்படும் நாட்டுப்புறத் தெருக்கூத்து கலை நிகழ்ச்சி படைக்கப்பட்டது. தமிழகத்தில் நலிந்துவரும் கலைகளில் ஒன்றாக கருதப்படும் லாவணியில் கலைஞர்கள் பாடல்கள் மூலம் தமிழ்மொழியின் சிறப்பை எடுத்துரைத்தனர்.

