‘8 பாயிண்ட் என்டர்டெய்ன்மண்ட்’ மற்றும் ‘டி3 வைரங்கள்’ ஏற்பாடு செய்த ‘அன்பின் இமயம் அம்மா’ நிகழ்ச்சி சனிக்கிழமை (மே 11) நடைபெற்றது.
இதில் பல தாய்மார்களும் அவர்களின் பிள்ளைகளும் கலந்துகொண்டனர். முதல்முறையாக நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக நகைச்சுவை நடிகை கோவை சரளா வந்திருந்தார்.
அம்மா என்பவருக்கு ஈடாக யாரும் இல்லை எனக் கூறி, ஒரு தாயின் சிரமங்களையும் துன்பங்களையும் கூறும் வகையில் உரையாற்றினார்.
“ஒரு தாயின் கொஞ்சலும் கெஞ்சலும்: சிறுவயதில் நிலாவைக் காட்டி உணவு ஊட்டுவேன், ஆனால் பெரியவனான பிறகு அதே வாயால் நீ என்னைத் திட்டுகிறாய். ஆனால், அவற்றை மன்னித்துவிட்டு உனக்காக வாழ்கிறேன்,” என்று அன்னையின் தியாகங்களைப் பற்றி அவர் பேசினார்.
இந்நிகழ்ச்சியின் சிறப்பு அம்சமாக, மூன்று தாய்மார்களுக்கு அன்னையர் திலக விருது வழங்கப்பட்டது.
உட்லண்ட்ஸ் கார்டன் பள்ளியில் படிக்கும் திருவாட்டி அமுதா கலியபெருமாளின் பிள்ளைக்கு வளர்ச்சி மற்றும் ஆட்டிசம் குறைபாடு உள்ளது.
“சிறப்புத் தேவையுடைய பிள்ளைக்குப் பெற்றோராக இருப்பது அதன் ஏற்றத்தாழ்வுகளைக் கொண்டுள்ளது. தினமும் ஒரு புதிய சவாலை எதிர்நோக்குகிறேன். என் பிள்ளைக்குச் சுதந்திரமாக இருப்பதைக் கற்றுக்கொடுப்பதே என் வாழ்வின் இலக்கு,” என்றார் திருமதி அமுதா.
திருவாட்டி முத்துவீராயி சிவசுப்பிரமணியம், உட்லண்ட்ஸ் கார்டன் பள்ளியில் மூன்றாம் வகுப்பு பயிலும் தன் மகனுக்கு,”என் மகனிடம் இருந்து எவ்வாறு தைரியமாகவும் நடைமுறை வாழ்க்கைக்கு ஏற்றவாறும் இருக்கவேண்டும் என்பதைக் கற்றுக்கொள்கிறேன்.
தொடர்புடைய செய்திகள்
“குறுகிய வட்டத்திலிருந்து வெளிவந்து தொலைநோக்குப் பார்வையுடைய வாழ்க்கையை வாழ அவன் கற்றுக்கொடுக்கிறான்,” என்றார்.
திருவாட்டி கவிதா குலோத்துங்கனின் மகள் உட்லண்ட்ஸ் கார்டன் பள்ளியில் படிக்கிறார். அவருக்கு ஆட்டிசம் மற்றும் வலிப்பு நோய் உள்ளது.
“எதிர்கொள்ளும் சவால்களைக் கண்டு அஞ்சுவதை விட அதை நேர்மறையாக மாற்றுவதற்கு முயற்சி செய்துள்ளேன். முதல் படியாக அவளுடைய உலகத்தைக் கண்டறிய ஆசைப்பட்டேன். இதன்மூலம் ஒவ்வொரு குறையும் புதிய வழியாக மாறியது,” என்றார் அவர்.
மேற்கண்ட மூவரும் தங்கள் பிள்ளைகள், வேறு பிள்ளைகளிடம் இருந்து வேறுபட்டு இருப்பதால் அவர்களைக் கேலி செய்யவும் மற்ற பிள்ளைகளுடன் ஒப்பிடவும் வேண்டாம் என்று கேட்டுக்கொண்டனர்.
இந்நிகழ்ச்சியின் பிற அம்சங்களான விளையாட்டுகள், நடனங்கள், பாடல்கள் மற்றும் அதிர்ஷ்டக் குலுக்கலும் நடைபெற்றன. பல பிள்ளைகளும் இந்தத் தளத்தைப் பயன்படுத்தி அன்னையர்க்கு நன்றி கூறினர்.
இந்நிகழ்ச்சியின் ஆதரவாளர்கள் லீஷா, நந்தனாஸ் உணவகம், நேச்சுரல்ஸ் சிங்கப்பூர் நிர்வாகம், நெட்கோ மரீன் பிரைவேட் லிமிடெட், நிசி பேஷன், தமிழ் பட்டிமன்ற கலைக்கழகம், ஜோதி நிர்வாகம் மற்றும் சி3 பிரீமியம் ஹம்பெர்ஸ்.
நிகழ்ச்சியில் பங்கேற்ற திருவாட்டி சாந்தி ராஜ்குமார், 51, அது மிகவும் சிறப்பாக நடைபெற்றது என்று கூறினார்.
கட்டடப் பொறியாளரான அவர், “கோவை சரளா ஆற்றிய உரையும் மிகச் சிறப்பாக இருந்தது. அன்னைக்கு அர்ப்பணிக்கும் விதத்தில் பல அம்சங்கள் இந்நிகழ்ச்சியில் இருந்தன. நான் தாயாராக இருந்ததற்கு ஒரு பரிசாக இந்நிகழ்ச்சி இருந்தது,” என்றார் அவர்.
தன் மகளுடன் இந்நிகழ்ச்சிக்கு வந்த திருவாட்டி வெண்ணிலா, 61, “அந்த மூன்று தாய்மார்களுக்கு சிறப்புப் பரிசு அளிக்கப்பட்டது என் மனதுக்கு மிகவும் நெகிழ்ச்சியாக இருந்தது. அவர்களின் மனப்பக்குவம் எல்லோருக்கும் வராது. அவர்களை நான் மிகவும் பாராட்டுகிறேன்.
“ஒரு தாயாக என் மகள் எனக்கு மிகவும் முக்கியம். சவாலான காலங்களில் அவளுக்கு ஆதரவாக நின்று, அவளின் வளர்ச்சியைக் கண்டு பெருமை அடைந்தேன்,” என்றார் அவர்.