விளையாட்டோடு பின்னிப் பிணைந்தக் குடும்பம். சிறுவயதிலிருந்தே விளையாட்டுகளில் அதிகம் ஈடுபட்ட அனுபவங்கள். 12 ஆண்டுகளாக சிங்கப்பூரில் இல்லப் பணிப்பெண்ணாக இருந்து வந்தாலும் அவர் உடலில் ஓடுவது ஒரு விளையாட்டு வீராங்கனையின் ரத்தம்.
குடும்பச் சூழல் காரணமாக 2012ல் காளுகே சந்திரா லலனி, 49, சிங்கப்பூருக்கு வந்தார். 25, 17, 13 வயதுகளில் மூன்று பெண் குழந்தைகளுக்குத் தாயான இவருக்கு இல்லற வாழ்க்கை இனிமையாக அமையவில்லை.
லலனி இலங்கை தலைநகர் கொழும்பு அருகில் உள்ள கம்பஹா எனும் ஊரிலிருந்து இங்கு வந்தவர். அவருடைய தந்தை இலங்கையில் மிகப் பிரபலமான கைப்பந்து விளையாட்டு வீரர்.
லலனிக்கு உடன்பிறந்தவர்கள் மொத்தம் நான்கு பேர். அனைவரும் விளையாட்டு மீது மிகுந்த மோகம் கொண்டவர்கள். சிங்கப்பூருக்கு வரும் முன் கைப்பந்து, கூடைப்பந்து போன்றவற்றை நாள்தோறும் விளையாடி வந்த லலனி, சிங்கப்பூர் வந்தும் அதைக் கைவிடவில்லை.
பிலிப்பீன்ஸ், இலங்கை ஆகிய நாடுகளைச் சேர்ந்த இதர இல்லப் பணிப்பெண்களுடன் நட்புறவை வளர்த்துக்கொண்டு அவர் சிங்கப்பூரில் கைப்பந்து விளையாடத் தொடங்கினார்.
வாரத்தில் ஆறு நாள்கள் வேலை செய்தாலும் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளில் அவர் விளையாட்டுகளில் ஈடுபடச் சென்றுவிடுவார். அவரின் முதலாளியும் லலனியின் விளையாட்டு ஆர்வத்தைப் புரிந்துகொண்டார்.
கைப்பந்தில் மட்டும் கவனம் செலுத்தி வந்த லலனிக்கு கிரிக்கெட்டில் ஈடுபட வாய்ப்பு கிட்டியது. சிங்கப்பூர் மகளிர் வெளிப்புற கிரிக்கெட் குழுவின் பயிற்றுவிப்பாளர் ஒருமுறை லலனியை அணுகியுள்ளார். சிங்கப்பூர் தேசிய மகளிர் கிரிக்கெட் அணியில் சேருமாறு அவர் கேட்டுக்கொண்ட போது லலனி அந்த வாய்ப்பை பிடித்துக்கொண்டார்.
“2019ல் என்னிடம் அவர் பேசியபோது நான் அந்த வாய்ப்பை உடனடியாக ஏற்றுக்கொண்டேன். இது எல்லோருக்கும் கிடைக்காத ஒன்று. கிரிக்கெட் எனக்கு மிகவும் பிடிக்கும். ஆனால், சிறுவயதில் அதில் ஈடுபடாமல் இருந்தேன்,” என்று லலனி சொன்னார்.
தொடர்புடைய செய்திகள்
இத்தனை வயதிலும் அவர் விளையாட்டில் அதிகம் ஈடுபடுபவர் என்பதை அவரின் உடல் அமைப்பை வைத்து நாம் அறிந்துகொள்ளலாம். சிலோன் விளையாட்டு மன்றத்தில் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமை காலையும் இரண்டு மணி நேரம் கிரிக்கெட் பயிற்சிக்காக லலனி ஒதுக்கி வருகிறார்.
தற்போது அணித் தலைவராக இருக்கும் லலனி, பந்துவீச்சு, பேட்டிங் ஆகிய இரண்டிலும் உள்ளார். சென்ற மாதம் இலங்கையில் நடைபெற்ற இங்கிலாந்து ஆசியான் கோப்பையில் முதல்முறையாக லலனி தேசிய அளவில் கிரிக்கெட் போட்டியில் கலந்துகொண்டிருந்தார்.
அதில் சிங்கப்பூரைப் பிரதிநிதித்து அவர் இலங்கை அணியுடன் மோதினார். சிங்கப்பூர் அணி வெற்றி பெற்றது.
“என் நாட்டில் போட்டி நடைபெற்றிருந்தாலும் சிங்கப்பூரைப் பிரதிநிதித்து போட்டியில் கலந்துகொண்டது பெருமிதமே. என் நாட்டு மக்கள் முன் நின்று நான் போட்டியிட்டதை பெருமையாகக் கருதுகிறேன்,” என்று லலனி நெகிழ்ந்துபோய் கூறினார்.
தற்போது அக்டோபர் மாதம் நடைபெறவிருக்கும் பெண்கள் டி20 உலக கோப்பைக்காகப் பயிற்சி மேற்கொண்டு வருகிறார் லலனி.