நினைவலைகளைத் தூண்டும் சுவரோவியம்

2 mins read
4d9a6acb-8fbf-4aec-bc05-ddfa2785b701
கலைஞர் பெலிண்டா லோவின் சுவரோவியம். - படம்: லாவண்யா வீரராகவன்

லிட்டில் இந்தியா, தேக்கா நிலையம் ஆகிய பகுதிகளை அலங்கரிக்கும் பல சுவரோவியங்களின் பட்டியலில் அழகிய நினைவலைகளைத் தூண்டும் மற்றொரு சுவரோவியமும் இணைந்துள்ளது.

இந்தச் சுவரோவியம் கடந்த 2010ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம், தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு திரு லீ குவான் யூ அப்பகுதி மக்களைச் சந்தித்து, கலந்துரையாடியதை நினைவுகூர்கிறது. மேலும், மின்தூக்கி மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ், தேக்கா நிலையத்தில் அமைக்கப்பட்ட மின்தூக்கிகளை திரு லீ குவான் யூ திறந்துவைத்தபோது அமைக்கப்பட்ட பதாகையும் புதுப்பிக்கப்பட்டுள்ளது.

தேக்கா நிலைய வளாகத்தில் நுழையும் அனைவரும் ஒரு நொடி நின்று ரசிக்கும் வண்ணம் இந்தச் சுவரோவியம் அமைந்துள்ளது.

கலாசார, சமூக, இளையர்துறை மற்றும், வர்த்தக, தொழில் துணை அமைச்சர் ஆல்வின் டான், இந்த ஓவியத்தை கடந்த ஏப்ரல் மாதம் 27ஆம் தேதி திறந்துவைத்தார்.

கலைஞர் பெலிண்டா லோ படைத்துள்ள இச்சுவரோவியம் தமிழ்ப் பண்பாட்டின் முக்கிய அங்கமான வண்ணமயமான கோல அமைப்பை உள்ளடக்கி வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த ஓவியம் சிங்கப்பூரர்களிடையே இருக்கும் ஒற்றுமை, ஒன்றிணைந்த முன்னேற்றம், மகிழ்ச்சி உள்ளிட்ட பலவற்றையும் பிரதிபலிக்கிறது.

இது தங்கள் மனத்தில் ஆழப்பதிந்த நிகழ்வைக் கண்முன் நிறுத்தியதாக மகிழ்வுடன் சொல்கின்றனர் அப்பகுதி மக்கள்.

தேக்கா வளாகத்தையும் சுற்றியுள்ள வீவக குடியிருப்புகளையும் கண்முன் நிறுத்தும் ஓவியம்.
தேக்கா வளாகத்தையும் சுற்றியுள்ள வீவக குடியிருப்புகளையும் கண்முன் நிறுத்தும் ஓவியம். - படம்: லாவண்யா வீரராகவன்

அந்நிகழ்வில் திரு லீ குவான் யூவுடன் தான் கைகுலுக்கியதைப் புன்னகையுடன் பகிர்ந்தார் தேக்கா நிலையத்தின் அருகில் கடை நடத்திவரும் திருவாட்டி வசந்தா. கடந்த 21 ஆண்டுகளாக இப்பகுதியில் வசிக்கும் அவர் இந்தச் சுவரோவியத்தை மிகவும் ரசிப்பதாகச் சொன்னார்.

பெருந்திரளாக மக்கள் கலந்துகொண்ட விழாவைச் சித்திரித்த ஓவியம் கண்ணைப் பறிப்பதாகச் சொன்னார் அப்பகுதியில் கடை நடத்திவரும் மகேஷ். திரு லீ குவான் யூ மக்களிடம் கலந்துரையாடியதையும் நினைவுகூர்ந்தார் அவர்.

இவ்வகையான நிகழ்வுகளில் கலந்துகொள்ள வாய்ப்பு கிட்டாவிட்டாலும், இத்தனை ஆண்டுகளுக்குப் பின் அதனை ஓவியமாகப் பார்ப்பது ஒருவித நல்ல உணர்வைத் தருகிறது என்றார் பொங்கோல் பகுதியிலிருந்து வந்திருந்த திருவாட்டி ரேச்சல், 52.

பல ஆண்டுகளுக்குமுன் நிகழ்ந்த ஏறத்தாழ மறந்துபோன தருணங்களை இந்த ஓவியம் மீண்டும் உயிர்பிக்கச் செய்வதாகக் கூறினார் இப்பகுதியில் வசிக்கும் வேலுச்சாமி.

குறிப்புச் சொற்கள்