தான் விரும்பும் கடலுக்கும், தான் ரசிக்கும் பவளப் பாறைகளுக்கும் தன்னால் இயன்றதைச் திருப்பிச் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தைக் கொண்டுள்ளார் மாணவி தரணி குணாளன்.
விடுமுறைக் காலங்களில் புதுவித அனுபவங்களுக்காக சாகச விளையாட்டுகளில் இறங்கும் பல இளையர்களைப் போலவே, ‘டைவிங்’ எனும் முக்குளிப்புச் சாகச விளையாட்டைக் கற்றுக் கொண்டுள்ளார் தரணி.
சிங்கப்பூர் தொழில்நுட்பக் கழக மாணவியான தரணி, தன்னுடன் முக்குளிப்பில் ஈடுபடும் சக மாணவருடன் இணைந்து ‘அவிஸா கோரலியா’ எனும் பவள விதைப்புத் திட்டத்தைத் தொடங்கி, இதன் மூலம் பவள விதைப்பில் ஈடுபடுகிறார்.
உலகளவில் பவளப்பாறைகளின் எண்ணிக்கை குறைந்து வருவதையடுத்து, அவற்றை மீட்டுருவாக்க இந்தப் பணியைக் கையில் எடுத்துள்ளனர் இம்மாணவர்கள்.
முதற்கட்டமாக, 25 முக்குளிப்பாளர்கள், 8 பயிற்றுனர்கள், 4 மீட்பாளர்கள் கொண்ட குழுவினர், இந்தோனீசியாவின் பாலி நகர் கடற்படுகையில் 15 - 30 மீட்டர் ஆழத்தில், 50 மீட்டர் X 10 மீட்டர் பரப்பளவில் இவ்விதைப்பைச் செய்துள்ளனர்.
மொத்தம் மூன்று முறை முக்குளிப்பில் ஈடுபட்ட இக்குழுவினர் ஏறத்தாழ இரண்டரை மணிநேரம் நீருக்கு அடியில் செலவிட்டு 500 பவளப்பாறைகளை விதைத்துள்ளனர்.
‘டைவ்லா பாலி’ எனும் முக்குளிப்பு நிறுவனத்தின் ஆதரவுடன் நடத்தப்படும் இந்தப் பவள விதைப்புடன், இக்குழுவில் பலரும் பல்வேறு கட்ட முக்குளிப்பு உரிமத்தையும் பெற்றனர்.
இவருடன் இணைந்து பயணித்த சிங்கப்பூர் சமூக அறிவியல் பல்கலைக்கழக மாணவர் ஈஸ்வரும், உயர்நிலை உரிமத்தைப் பெற்று பவள விதைப்பில் பங்கேற்றார். அவர், “தண்ணீரில் இறங்கவே பயந்து கொண்டிருந்த நான், முக்குளிப்பைக் கற்றுக்கொண்டு, தற்போது அடுத்த கட்டத்துக்கு முன்னேறியிருப்பது பெருமையளிக்கிறது,” என்று கூறினார்.
நீருக்கு அடியில் நம்பமுடியாத அழகுடன் ஓர் உலகமே இருக்கிறது. அது சீர்குலைவது வருத்தமளிக்கிறது என்று தெரிவித்ததோடு, அதனை மறுசீரமைக்கும் இத்திட்டத்தில் பங்களிக்க வாய்ப்பு கிடைத்தது உற்சாகமான உணர்வு என்றார் இதில் பங்கேற்ற கணேஷ் பாஸ்கரன்.
“கடலுக்கு அடியில் செல்வது எனக்கு ஓர் அமைதியைத் தருகிறது. என் இதயத் துடிப்பும் கடலுக்கு அடியில் இருக்கும் நீரோட்டத்தின் ஓசையும் ஒத்திருப்பது அலாதியான உணர்வு. அடுத்துவரும் தலைமுறைக்கும் இதே இயற்கை அழகை விட்டு வைக்க வேண்டும். அதற்கு என்னால் இயன்றதைச் செய்வதில் உறுதியாக இருக்கிறேன்,” என்றார் முக்குளிப்பில் அதீத விருப்பமுள்ள மற்றொரு மாணவர் கரன்வீர் சிங் சித்து.
பவளப்பாறைப் பாதுகாப்பின் அவசியம் குறித்த விழிப்புணர்வை அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்டு செயல்படுவதாகவும் அவர் சொன்னார்.
முக்குளிப்புத் துறையில், இந்திய மாணவர்கள், குறிப்பாக இந்தியப் பெண்கள் மிகக் குறைவாகவே உள்ளனர். வியப்பூட்டும் சாகசங்கள் நிறைந்த விளையாட்டு இது. விடுமுறைக் காலங்களில் ஒரு முறையேனும் இவ்விளையாட்டை முயன்று பார்க்க சக மாணவர்களை ஊக்கப்படுத்துவதாகவும் சொன்னார் இத்திட்டத்தை வழிநடத்தும் மாணவி தரணி.