குழந்தைப் பராமரிப்புச் சேவையின் முக்கியத்துவம்

குழந்தைப் பராமரிப்புச் சேவையின் முக்கியத்துவம்

2 mins read
cea034af-ddf7-4299-be6b-f7aeee135800
குழந்தைகளுக்கும் தாய்மார்களுக்கும் சேவை வழங்கும் சுபத்திரா. - படம்: அனுஷா செல்வமணி

பெற்றோர் இருவரும் வேலைக்குச் செல்வதே தற்போதைய வாழ்க்கைச் சூழல்.

அதனால், தங்கள் குழந்தைகளைப் பெற்றோர் ஒரு பராமரிப்பு நிலையத்தில் விடும் வழக்கம் சிங்கப்பூரில் அதிகரித்துவிட்டது.

பிள்ளைக்கான செலவுகள் அதிகம் என்று எண்ணும் ஒருசில தம்பதியர், குழந்தை வேண்டாம் என்றும் முடிவெடுத்துள்ளனர்.

இதனால் சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சு புதிதாக “சைல்ட் மைண்டிங்’ முன்னோடித் திட்டத்தை, இவ்வாண்டு பிற்பாதியில் அறிமுகப்படுத்தவுள்ளது.

இத்திட்டம் மூலம் பாலர் பருவ மேம்பாட்டு அமைப்பால் நியமிக்கப்படுபவர்கள், ஒரே நேரத்தில் மூன்று கைக்குழந்தைகளைக் கவனித்துக்கொள்ள முடியும்.

அதேவேளை பெற்றோர்களுக்குக் கட்டுப்படியாக இருக்கும் வகையில் அமைந்த பராமரிப்புச் சேவைக் கட்டணத்தை அரசாங்கம் வசூலிக்கும் என்றும் அறிவிக்கப்பட்டது.

சுபத்திரா லக்‌ஷ்மணன், 37, கடந்த ஐந்தாண்டுகளாக குழந்தைகளின் தசைகளைப் பிடித்துவிடுதல், தாய்மார்களுக்குப் பிரசவத்திற்குப் பின் உடலை உருவி விடுதல் (மசாஜ்), தேவைப்படும்போது குழந்தையைக் குளிப்பாட்டுதல் போன்ற சேவைகளை வழங்கி வருகிறார்.

பெரும்பாலும் இதுபோன்ற சேவைகளை வழங்குவது வயதில் முதிர்ந்தவர்கள் என்று பலர் எண்ணினாலும் சுபத்திரா இதற்கு ஒரு விதிவிலக்கு.

குழந்தைகளின் உடலை உருவி வந்தால் குழந்தைகளுக்குத் தூக்கம் நன்றாக வரும். உடலின் நெகிழ்வுத்தன்மை, முதுகெலும்பு வலுப்பெறுவது, உடலில் இருக்கும் வாயுவை வெளியேற்றுவது போன்ற இதர நன்மைகளும் இதில் அடங்கியுள்ளன.

பிள்ளைகள் மேல் அளவுகடந்த அன்பை வைத்துள்ள சுபத்திரா, குழந்தைப் பராமரிப்புச் சேவைகளை வழங்கிவரும் ஒருவருடன் கூடவே சென்று வந்தார்.

அத்தொழில் மீது அவருக்கு ஆர்வம் ஏற்பட அவர் பாலித் தீவுக்குச் சென்று மூன்று வாரப் பயிற்சி மேற்கொண்டார்.

தாய்மார்களுக்கும் பிரசவத்திற்குப் பிந்தைய உடல் உருவுதல் சேவையை வழங்கும் சுபத்திரா, அதன் முக்கியத்துவத்தையும் விளக்கியபோது, “குழந்தை பிறந்த பிறகு ஒரு தாயின் கருப்பை சற்று கீழே இறங்கியிருக்கும். உடலை உருவும் போது அடிவயிற்றையும் நன்கு உருவினால்தான் கருப்பை அதன் முந்தைய நிலைக்குத் திரும்பும்,” என்றார்.

தாய்மார்களுக்குத் தாய்ப்பால் நன்றாகச் சுரக்க வேண்டும் என்பதற்காக அவர் தாய்மாரின் உடலை, பூண்டு எண்ணெய் வைத்து உருவி விடுகிறார்.

“பெரும்பாலான தாய்மார்கள் குழந்தையைப் பெற்றெடுத்தவுடன் தங்களின் உடல் எடையைப் பற்றி அதிகம் கவலைப்படுவார்கள். அதனால் அவர்கள் உடல் உருவுதல் சேவையை நாடும் போது வாயு வெளியேற்றப்பட்டு உடல் எடையும் குறையும்,” என்று சுபத்திரா தெரிவித்தார்.

குழந்தைகளை மெதுவாக நீராட்டும்போது மூலிகைகள் கலந்த குளியல் தூளை சுபத்திரா பயன்படுத்துவது வழக்கம். தாய்மார்கள் பலரும் இதுபோன்ற சேவைகளைப்பற்றி அறிந்திருந்தாலும் அதன் நன்மைகளை அதிகம் உணர்ந்திடாமல் இருக்கிறார்கள் என்று சுபத்திரா குறிப்பிட்டார்.

“இதன் முக்கியத்துவத்தை அறிந்து குழந்தையின் உடலைப் பாதுகாக்க வேண்டும். இளையர்கள் இத்துறையில் சேர்வதைக் கருத வேண்டும். நிச்சயமாக நாளடைவில் இத்துறைக்கான தேவை அதிகமாகும்,” என்று சுபத்திரா பகிர்ந்துகொண்டார்.

குறிப்புச் சொற்கள்