அமெரிக்காவில் பலரும் விரும்பி உண்ணும் உணவு வகைகளில் ஒன்று ‘பேகல்’.
இது நுரைமம் சேர்க்கப்பட்ட கோதுமை மாவை உருட்டி, அதை நீரில் கொதிக்க விட்டு, அடுப்பில் இட்டுச் சுடப்பட்டு தயாரிக்கப்படுகிறது.
பார்ப்பதற்கு ‘டோனட்’ போல இருக்கும் இந்த ‘பேகல்’, சிங்கப்பூரில் இளையர்கள் மத்தியில் மிகப் பிரபலமாக வலம்வரத் தொடங்கியுள்ளது.
ஆசிய உணவுவகைகளின் சுவை தழுவிய ‘பேகல்’ வகைகளை ஹேமந்த் மதி எம் எஸ், 27, விற்றுவருகிறார்.
‘பேகல் பன்ச்’ எனும் கடையின் நிறுவனர் மற்றும் இணை உரிமையாளரான ஹேமந்த், சிங்கப்பூரர்களுக்குத் தனித்துவமான உணவைக் கொண்டு சேர்க்க வேண்டும் என்று உறுதியாக இருந்தார்.
சமையலில் ஹேமந்துக்கு அதிக ஆர்வம். ஆசிய சுவையுடன் பேகல் தயாரித்து விற்க வேண்டுமென்ற எண்ணம் ஹேமந்துக்கு நீண்டகாலமாக இருந்து வந்தது.
தொடர்புத் துறையில் பட்டம் பெற்றுள்ள ஹேமந்த், ‘பேகல் பன்ச்’ கடையை புவன விஸ்தா வளாகத்தில் அமைந்துள்ள மெட்ரோபோலிஸ் தொழில் நிலையத்தில் திறந்துள்ளார்.
பேகல் தயாரிப்புக்கு 24 மணிநேரம் முதல் 48 மணி நேரம் வரை ஆகும். செய்முறையை வெறும் யூடியூப் காணொளிகள் மூலம் கற்றுக்கொண்ட ஹேமந்த், பல மாதங்கள் அதைச் செய்து பார்த்தார்.
தொடர்புடைய செய்திகள்
“பேகல் ரொட்டியின் உள்ளே மென்மையாக இருக்கும். அதன் வெளிப்புறம் மொறுமொறுவென இருக்கும். அந்தப் பக்குவம் மிக முக்கியம்,” என்று ஹேமந்த் விளக்கினார்.
ஹேமந்த் கடையில், ‘பட்டர் சிக்கன் போனன்சா’, ‘கொரியன் ஃபிரைட் சிக்கன்’, ‘கிளாசிக் பிரேக்ஃபாஸ்ட்’, ‘வெஜி டிலைட்’, ‘தி பேகல் பிரஞ்ச்’ போன்ற சுவைகளை வாடிக்கையாளர்கள் ருசித்துப் பார்க்க இயலும்.

