ஆளுமைக்கு உரமூட்டும் இலக்கியம்: உயர்கல்வி மாணவர்களின் மும்முரக் கருத்தாடல்

2 mins read
a7e3997a-051d-488a-9b44-7597f285eb57
கருத்தாடல் அங்கத்தில் மாணவப் படைப்பாளர்கள், ஆசிரியர்கள், திரு சிவானந்தம் நீலகண்டன் ஆகியோர் கேள்விகளுக்குப் பதிலளித்தனர். - படம்: ஈசூன் இனோவா தொடக்­கக் கல்­லூரி­

இலக்கியத்திற்கும் தனிமனித ஆளுமைத்திறனுக்கும் உள்ள தொடர்பை, பள்ளிச் சூழலில் ஆராய்ந்த கருத்தாடலில், வாழ்க்கையைச் செம்மைப்படுத்துவதில் இலக்கியத்திற்குப் பங்குண்டு என்பது அனைவராலும் பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.

பல்கலைக்கழகப் புகுமுக வகுப்புகளுக்கான தமிழ்மொழி, இலக்கிய கருத்தரங்கை 35ஆவது ஆண்டாக ஈசூன் இனோவா தொடக்கக் கல்லூரியின் கலாசார, முருகியல் மன்றம் நடத்தியது.

இலக்கியமும் ஆளுமையும் என்ற தலைப்பில் நடந்த அந்தக் கருத்தரங்கில் ‘எச்2’ நிலையில் தமிழ் இலக்கியம் பயிலும் தொடக்கக்கல்லூரி மாணவர்களுடன் மற்ற மாணவர்கள், ஆசிரியர்கள் என சுமார் 150 பேர் கலந்து கொண்டனர்.

ஈசூன்-இனோவா தொடக்கக் கல்லூரி, ஆண்டர்சன் சிராங்கூன் தொடக்கக்கல்லூரி, யூனோயா தொடக்கக் கல்லூரி ராஃபிள்ஸ் கல்வி நிலையம் ஆகிய பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள், இலக்கியமும் ஆளுமையும் தொடர்பான கருத்துகளைப் பல்வேறு கோணங்களில் வழங்கினர்.

மாணவர்கள் தங்கள் உரைகளுடன் பாடல்கள், காணொளிப் படைப்புகள் போன்றவற்றைப் பயன்படுத்திப் படைப்புகளை மெருகேற்றினர்.

இலக்கியத்தின் முக்கியத்துவத்தை தெளிவுபடுத்தும் விதமாக அந்தக் கருத்தரங்கில் தலைமை முதன்மை ஆசிரியர் சுப்பிரமணியம் நடேசன் தொடக்கவுரையை ஆற்றினார். அதன் பிறகு மாணவர்கள் குழுக்களாக மேடையேறிப் படைத்தனர்.

நிகழ்ச்சியின் இறுதி அங்கமாக கருத்தாடல் அங்கம் இடம்பெற்றது.

படைப்புகளைப் படைத்த மாணவர்களுடன் ஆசிரியர்கள், திரு சிவானந்தம் நீலகண்டன் ஆகியோர் மாணவப் பார்வையாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்தனர்.

சிந்திக்கத் தூண்டிய உரைகள்

1988ல் முன்னாள் மூத்த ஆசிரியர் வி. ஆர். பி மாணிக்கம் தொடங்கி வைத்த இந்த வருடாந்திரக் கருத்தரங்கு பற்றிய ஆவணப்புத்தகம் ஒன்றைத் தயாரிக்கும்படியான வேண்டுகோளுடன் திரு சுப்ரமணியம் உரையாற்றத் தொடங்கினார்.

மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு வித்திடும் பண்பாடு சார்ந்த மனப்பயிற்சியையும் தன்னைப் பற்றிய அறிவையும் இலக்கியம் வளர்ப்பதாக திரு சுப்ரமணியம் கூறினார்.

“மனத்திலுள்ள கோணல்களைச் சரிசெய்து நமக்குள் நிலை மாற்றுகிறது இலக்கியம். தத்துவத்தை இலக்கியத்துடன் சேர்த்துப் படிக்கும்போது உங்கள் ஆளுமை மேம்படும். முன்னாய்வுச் சிந்தனை, புத்தாக்க யோசனைகள் ஆகியவை தனிமனிதருக்குப் பற்பலக் கதவுகளைத் திறக்கும்,” என்று திரு சுப்பிரமணியம் அறிவுறுத்தினார்.

திரு சுப்பிரமணியத்தைப் போல் சிங்கப்பூர்ச் சிறுகதை ஆர்வலரும் ஆய்வாளருமான சிவானந்தம் நீலகண்டன், தனிமனித ஆளுமையை வளர்ப்பதில் இலக்கியம் கொண்டுள்ள ஆற்றலைப் பற்றி மாணவர்கள் முன்னிலையில் விளக்கமளித்தார்.

‘இலக்கியமும் ஆய்வுத்திறனும்’ என்ற தலைப்பை ஒட்டிப் பேசிய திரு நீலகண்டன், மாணவர்களின் கற்றல் முறை, அறிவியல் ரீதியானது எனக் குறிப்பிட்டார்.

“அறிவியலுக்கு எப்படி வரையறைகள் உள்ளதோ இலக்கியத்திற்குமே வரையறைகள் உள்ளன.

“இலக்கியம் என்றால் என்ன என்பதற்கும் ஆளுமையானவர் என்பவர் யார் என்பதற்கும் பற்பல வரையறைகள் உள்ளன,” என்று அவர் கூறினார்.

அறிவித்தல், கற்பித்தல், மகிழ்வித்தல் ஆகிய நோக்கங்களைச் செய்தி ஊடகங்கள் எப்படி கொண்டிருக்கின்றனவோ, அதே போன்ற நோக்கங்களும் இலக்கியப் படைப்புகளுக்கு உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

குறிப்புச் சொற்கள்