தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஓய்வுக்காலத்தை நிம்மதியாகக் கழிக்க திட்டமிடுதல் அவசியம்

3 mins read
ஓய்வுக்காலத்திற்கான நிதியை நிர்வகிப்பது மிக அவசியமான ஒன்று. இருப்பினும், பலரும் அதனைத் தள்ளிப்போடுகின்றனர் 
e173ce98-4f21-463e-a0df-2ff84e26cc67
எண்டோவஸ் நிறுவனத்தின் முதலீட்டு ஆய்வு இயக்குநர் மின் எக்ஸ்தெல்ம்.  - படம்: எண்டோவஸ்

சிங்கப்பூர் நிர்வாகப் பல்கலைக்கழகத்தின் வெற்றிகரமான மூப்படைதலுக்கான ஆய்வு நிலையம், 2023 ஜனவரியில் 53 முதல் 78 வயதிற்குட்பட்ட 6,340 சிங்கப்பூரர்களிடம் கணக்கெடுப்பு ஒன்றை நடத்தியது. அவர்களில் 27 விழுக்காட்டினர் ஓய்வுக்காலத் திட்டங்களைக் கொண்டிருக்கவில்லை என்பது தெரியவந்தது.

ஓய்வுக்காலத்திற்கெனத் திட்டமிட்டுச் சேமிப்பதால் முதுமையில் நிதிப் பற்றாக்குறை போன்ற பிரச்சினைகளைத் தவிர்க்கலாம் என்கிறார் எண்டோவஸ் நிறுவனத்தின் முதலீட்டு ஆய்வு இயக்குநர் மின் எக்ஸ்தெல்ம். அதற்கான வழிமுறைகளையும் தமிழ் முரசுடன் அவர் பகிர்ந்துகொண்டார். 

ஓய்வுக்கால மாதாந்தரச் செலவினங்கள்

முதலில், மாத வருமானத்தை ஒதுக்கீடு செய்வது குறித்து அறிந்துகொள்வது முக்கியம். மாத வருமானத்தைச் செலவிடுவதில் இரண்டு பிரிவுகள் உண்டு. 

அத்தியாவசிய, அன்றாட வாழ்க்கைக்குத் தேவையான நிதியை ஒதுக்குவது முதல் பிரிவு. உணவு, வீடு, போக்குவரத்து, பயன்பாடுகள் மற்றும் மருத்துவச் செலவுகள் இதில் உள்ளடங்கும். 

ஓய்வுக்காலத்தில் மேற்கொள்ள விரும்பும் பயணம், பொழுதுபோக்கு உள்ளிட்ட நடவடிக்கைகளுக்கான பிற செலவுகள் இரண்டாம் பிரிவுக்கானவை. 

இவ்விரு நிதிப் பிரிவுகளை மனத்திற்கொண்டு, மொத்தச் செலவுகளை ஒருவர் மதிப்பிடலாம். எவ்வளவு பணம் சேமிக்க வேண்டும் என்பதும் அப்போதுதான் தெரியவரும். செலவினங்களை மதிப்பிடும்போது பணவீக்கத்தையும் கவனத்தில் கொள்வது முக்கியம்.

ஓய்வுக்கால வருமானத்திற்கான வழிகள்

மத்திய சேமநிதி லைஃப், தனியார் ஆண்டுத்தொகைத் திட்டங்கள், காப்புறுதித் திட்டங்கள் ஆகியவை மூலம் பெறும் வழங்குதொகைக்கு அப்பால், முதலீடுகள் மூலம் மறைமுக வருமானம் ஈட்டுவதைப் பற்றியும் சிந்திக்கலாம்.

பங்குகள், முறிகள், சொத்துச் சந்தை போன்றவற்றை அந்த முதலீட்டுத் தொகுப்பு கொண்டிருப்பது நல்லது.  

அந்த முதலீட்டுத் தொகுப்பு பன்முகம் கொண்டதாக இருக்க வேண்டியது முக்கியம். அப்போதுதான், இடர்ப்பாடுகளையும் ஒருவர் சரியான முறையில் நிர்வகிக்கலாம். மேலும், நிதி ஒதுக்கீட்டையும் செயல்பாட்டையும் தொடர்ந்து மறுஆய்வு செய்வதன் மூலம், சந்தை நிலவரத்தைப் பொறுத்து தேவையான மாற்றங்களைச் செய்துகொள்ளலாம் அல்லது அதற்கேற்ப நிதி நிலையையும் இலக்குகளையும் பொருத்தமாக அமைத்துக்கொள்ளலாம். 

மத்திய சேமநிதி லைஃப் என்பது சிங்கப்பூரர்களுக்கு ஒரு நீண்டகால நிதி காப்புறுதித் திட்டமாகும். 65 வயது முதலான சிங்கப்பூரர்களுக்கும் நிரந்தரவாசிகளுக்குமான இத்திட்டம், ஓய்வுக்கால நிதிக் கணக்கு மற்றும் மத்திய சேமநிதி லைஃப் கணக்கில் உள்ள நிதியைப் பொறுத்து மாதாந்திரத் தொகையை வழங்கும். 

கூடுதல் வருமானத்திற்காகச் சிலர் ஓய்வுக்காலத்தில் தங்களுடைய வீட்டை வாடகைக்கு விடுவார்கள். ஆனால், அந்த வாடகை மூலம் ஈட்டும் வருமானத்திற்கு வருமான வரி செலுத்த வேண்டும் என்பதைக் கவனத்தில் கொள்வது அவசியம். 

எதிர்பாராச் செலவுகள் 

மரணம், தீவிர நோய் போன்ற எதிர்பாராச் சூழ்நிலைகளை எதிர்கொள்ள எப்போதும் தயாராக இருக்க வேண்டும். வாழ்நாள் காப்புறுதித் திட்டம், உடற்குறை வருமானக் காப்புறுதி அல்லது தீவிர நோய்க் காப்புறுதித் திட்டம் போன்றவற்றை வைத்திருப்பது, எதிர்பாராச் சூழ்நிலையில் உங்களுக்கும் உங்கள் குடும்பத்துக்கும் நிதிப் பாதுகாப்பு வழங்கும். 

சிங்கப்பூரில் மருத்துவச் செலவுகள் அதிகரித்து வருவதால், கூடுதலாக ஒரு தனியார் காப்புறுதித் திட்டத்தையும் கொண்டிருக்கலாம். மத்திய சேமநிதிக் கழகத்தின் அடிப்படைச் சுகாதாரக் காப்புறுதி திட்டமான மெடிஷீல்டு லைஃப்புடன் இது மேம்பட்ட பாதுகாப்பை வழங்கும். 

உயில் எழுதுதல்

இயற்கை எய்திய பிறகு, நம்முடைய சொத்துகளை நம் அன்புக்குரியவர்களுக்கு உயில் எழுதிவைக்க விரும்பினால் மரபுவழி திட்டமிடுதல் அவசியம். 

ஒருவரது செல்வத்தை எவ்வாறு காத்து, அடுத்த தலைமுறையினருக்கு வழங்கலாம் என்பது குறித்துச் சிந்திப்பது இந்தத் திட்டமிடுதலில் அடங்கும். 

ஒருவரது மத்திய சேமநிதிக் கணக்கில் எஞ்சியுள்ள தொகையை யாருக்கு அளிப்பது, மருத்துவப் பராமரிப்புச் சேவைகள், ஒருவர் விரும்புவோருக்கு அவரது சொத்துகளை எவ்விகிதத்தில் பகிர்ந்தளிப்பது, பகராள் செயலுரிமை அதிகாரத்தை (பவர் ஆஃப் அட்டர்னி) யாருக்கு அளிப்பது போன்ற முக்கியமான முடிவுகளை இப்போதே சிந்திக்கத் தொடங்கலாம். 

தெளிவான விதிமுறைகளுடன் உயில் எழுதி வைப்பதும் அவசியம். அவசரகாலத்தில் அதை எளிதாக அணுகும் முறையை உறுதிசெய்வதும் சிறந்தது. 

ஓய்வுக்காலத்தை திட்டமிடும்போது, பல அம்சங்களையும் கவனத்தில்கொண்டு திட்டமிடுவது அவசியம். அதற்கு, இதுபோன்ற ஒரு சரிபார்ப்புப் பட்டியலை பயன்படுத்தலாம் என்கிறார் திருவாட்டி மின். 

ஓய்வுக்கால திட்டங்களையும் இலக்குகளையும் முன்கூட்டியே தீர்மானிப்பதன்மூலம் முதுமைக் காலத்தில் மன அமைதியுடன் கழிக்கலாம்.

குறிப்புச் சொற்கள்
ஓய்வுக்கால கணக்குமத்திய சேம நிதிநிதி