புதிய வர்த்தகங்களுக்கு நிழல் தரும் புனிதமரம் ஸ்ரீ பாலசுப்பிரமணியர் ஆலயம்

2 mins read
64cb5249-80a8-45b2-bd6a-c318ff555409
ஆலயத்தின் தரைத்தளத்தில் செயல்பட்ட சந்தைக் கடை. - படம்: கி.ஜனார்த்தனன்

தலைமுடி, முகம், சருமத்தைப் பராமரிக்கும் பாரம்பரிய முறைகளை வர்த்தகமாக்க நினைத்து தம் முழுநேர வேலையைக் கைவிட்டார் எக்னஸ் பிரியா, 22.

கடை இல்லாமல் கடந்த ஓராண்டாக ‘அங்கயல்’ என்ற பெயரில் டிக்டாக்கில் செயல்படும் பிரியா, தற்காலிகக் கடை ஒன்றை அமைத்து வாடிக்கையாளர்களுடன் நேரடியாக உறவாட வகைசெய்தது புனிதமரம் ஸ்ரீ பாலசுப்பிரமணியர் ஆலயத்தின் சமூகத் தொழில்தொடங்கும் முயற்சி.

வீட்டிலிருந்து செயல்படும் சிறிய, இணைய வர்த்தகங்களுக்கு மக்களைச் சென்றடையும் தளத்தை அமைத்து அந்த வர்த்தகங்கள் அளிக்கும் வாடகைப் பணத்தை நன்கொடையாக வழங்கும் முறையை ஆலயம் கையாண்டுள்ளது.

‘அங்கயல்’ இணைய வர்த்தகத்தின் உரிமையாளர் எக்னஸ் பிரியாவுடன் கணவர் ஜினேஷ் குமார் காலிங்கராயர்.
‘அங்கயல்’ இணைய வர்த்தகத்தின் உரிமையாளர் எக்னஸ் பிரியாவுடன் கணவர் ஜினேஷ் குமார் காலிங்கராயர். - படம்: ஜினேஷ் குமார் காலிங்கராயர்

இந்திய சமய, பாரம்பரியப் பொருள்களை விற்பதாலும் இந்த வர்த்தகங்களின் வளர்ச்சி, ஒட்டுமொத்த கலாசார வளர்ச்சிக்குக் கைகொடுப்பதாக ஆலயம் தமிழ் முரசிடம் தெரிவித்தது.

மே மாத முதல் வாரயிறுதியில் ஆலயத்தின் திருமண மண்டபத்தின் கீழ்த்தளத்தில் சந்தை போன்ற சூழலில் அமைக்கப்பட்ட 14 கடைகள் வாடிக்கையாளர்களை வரவேற்றன.

கடைகள் ஈட்டும் வருவாய் கடைகளுக்கே சொந்தம். அவை கொடுக்கும் வாடகைப் பணம் ஆலயத்தின் சமூக உதவித் திட்டத்தில் சேர்கிறது.

முகத்திற்கு மஞ்சள், தலைக்கு சீயக்காய் எனப் பாரம்பரிய மருத்துவப் பொருள்களை பிரியா விற்கிறார்.

உணவு வியாபாரம்.
உணவு வியாபாரம். - படம்: கி.ஜனார்த்தனன்

“என்னைப் போல இணையம்வழி செயல்படும் பிற வர்த்தகர்களின் அறிமுகத்தையும் எப்படி மேன்மேலும் வளர்ப்பது என்பது குறித்த யோசனையையும் பெற்றேன்,” என்று அவர் கூறினார்.

ஆலயத்தின் விளம்பரத்தைக் கண்டு விண்ணப்பித்ததாகக் கூறிய பிரியா, தம் கடைக்கான வாடகை, ஆலயத்தின் நற்செயல்களுக்காகப் பயன்படுத்தப்படுவதை எண்ணி மகிழ்வதாகக் கூறினார்.

சிறிய வர்த்தகங்களுக்கு இடமளித்து சமூகத்தில் தேவைப்படுவோருக்கு ஆதரவளிக்கும் நல்ல நோக்கத்தை ஆலயம் நிறைவேற்றியுள்ளதாக ஆலயத்தின் தலைவர் நாராயணசாமி சொன்னார்.

இந்தச் சந்தையின் தொடக்கத்திற்கு முன்பு, கடைகளின் உண்மைத்தன்மையை உறுதி செய்ததுடன் அவற்றுக்கு இடையே அதிக போட்டித்தன்மை இல்லாமல் இருப்பதையும் ஆலயம் பார்த்துக்கொண்டதாக சந்தையின் இணை ஏற்பாட்டாளரான ‘மந்திரா இவென்ட்ஸ்‘ நிறுவனர் எஸ்.விக்னேஸ்வரி கூறினார்.

“இவைபோன்ற மிகச் சிறிய வர்த்தகர்களுக்கு $500, $600 வரையிலான வாடகைப் பணம் என்பது அதிகம். எனவே, கட்டுப்படியான விலையில் இந்த இடத்தை ஆலயம் சேவை மனப்பான்மையுடன் வழங்குகிறது,” என்று குமாரி விக்னேஸ்வரி கூறினார்.

மாட்டுச்சாணம், மூலிகைகள் உள்ளிட்ட பொருள்களைப் பயன்படுத்திச் செய்யப்பட்ட ஊதுபத்தி, தீபங்கள், வறட்டிகள் போன்ற பொருள்களைச் சந்தையில் விற்றுள்ளார் ‘எல்பி டிவைன் பூஜா’ இணைய வர்த்தக உரிமையாளர் தஷ்மிதா, 36.

“பூசைப் பொருள்களை விற்பதற்கு கோயில் வளாகமே சிறந்த இடம். வாடிக்கையாளர்களின் அறிமுகமும் வரவேற்பும் எங்களுக்குக் கிட்டியுள்ளன. இதனால் எங்களுக்கு மனநிறைவாக உள்ளது,” என்றார் அவர்.

குறிப்புச் சொற்கள்