மனங்குளிர வைக்கும் மேடை நாடகம்

மனங்குளிர வைக்கும் மேடை நாடகம்

2 mins read
b397eae1-0617-4e6d-9d9b-7f2a024f6ddc
‘பேரடைஸ் ஆர் தி இம்பர்மனென்ஸ் ஆஃப் ஐஸ்கிரீம்’ (Paradise or the Impermanence of Ice Cream) எனும் நாடகம், மே 26ஆம் தேதி வரை கே.சி. கலை மையத்தில் அரங்கேறவிருக்கிறது.  - படம்: கே.சி. கலை மையம், ‘இந்தியன் இங்க்’ மேடை நாடகக் குழு

மும்பையின் ‘குல்ஃபி’ கடைகளை மையமாகக் கொண்டு ‘பேரடைஸ் ஆர் தி இம்பர்மனென்ஸ் ஆஃப் ஐஸ்கிரீம்’ (Paradise or the Impermanence of Ice Cream) எனும் நாடகம், மே 26ஆம் தேதி வரை கே.சி. கலை மையத்தில் அரங்கேறவிருக்கிறது. 

பெரும்பாலும் பாரம்பரிய இந்திய ஐஸ்கிரீம் என்று குறிப்பிடப்படுகிறது ‘குல்ஃபி’ எனும் உறைந்த பால் வகை இனிப்பு. 

நியூசிலாந்து நாடகப் பள்ளி டோய் வக்காரியில் பட்டம் பெற்ற முதல் இந்தியரான ஜேக்கப் ராஜன், 58, இந்த நாடகத்தில் ஏழு கதாபாத்திரங்களில் நடிக்கிறார். அந்த அனுபவத்தைப் பற்றி தமிழ் முரசுடன் பகிர்ந்துகொண்டார் அவர். 

“நாடகத்தின் கதை, அதில் இடம்பெறும் பாத்திரங்கள் மூலம் பார்வையாளர்களை ஈர்க்க வைப்பது ஒரு சவால். அதனை வெளிக்காட்டும் நடிகர் யார் என்பதை மறந்து, மேடையில் அவர் தோன்றும் கதாபாத்திரத்துடன் பார்வையாளர்கள் ஒன்றிவிடும் வகையில், கதாபாத்திரங்களை உருவாக்க நான் உழைத்திருக்கிறேன்,” என்றார் ஜேக்கப்.

பட்டப்படிப்பு முடிந்தவுடன், ‘இந்தியன் இங்க்’ எனும் மேடை நாடகக் குழுவை உருவாக்க இயக்குநர் ஜஸ்டின் லூயிஸுடன் சேர்ந்தார் ஜேக்கப். இருவரும் கடந்த 28 ஆண்டுகளில் 11 மேடை நாடக நிகழ்ச்சிகளை எழுதி, தயாரித்து நடத்தி வருகின்றனர். மேலும், அவர்கள் தங்களது 100ஆவது மேடை நாடகத்தை சிங்கப்பூரில் அரங்கேற்ற உள்ளனர். 

இந்த நாடகத்தில் விருது பெற்ற பொம்மலாட்டக்காரரான ஜான் கோடிங்டனால் உருவாக்கப்பட்டு இயக்கப்படும் ஒரு ராஜாளி பொம்மை, நாடகத்தின் ஒரு பொம்மலாட்ட அங்கமாக பார்வையாளர்களுக்குக் கண்கவர் விருந்து அளிக்கவுள்ளது. 

“இந்த நிகழ்ச்சி உட்பட, நமது கலை வடிவத்தில் தொழில்நுட்பம் அதிகமாகப் பயன்படுத்தப்பட்டாலும், ஒரு மேடை நாடகத்தின் முதன்மை பலம் பார்வையாளர்களின் கற்பனையில் உள்ளது என்றும், மேடை நாடக தயாரிப்பாளர்களாகிய நமது பணி அதன் தனித்துவத்தை எடுத்துரைப்பது என்றும் நான் உறுதியாக நம்புகிறேன்.

“நாடக நிகழ்ச்சிகளைப் படைப்பது, ஒரு வகையில் முழுமையாகக் கதைகளின்வழி வாழும் ஒரு வித்தியாசமான முயற்சி,” என்கிறார் ஜேக்கப். 

மேலும், “இது மிகவும் வேடிக்கையான ஒரு மேடை நாடகம். இருப்பினும், அதில் பலரும் அறிந்திடாத, வாழ்க்கைப் பாடங்கள் சார்ந்த ஒரு மர்மமும் அடங்கியுள்ளது.”

“‘பேரடைஸ் ஆர் தி இம்பர்மனென்ஸ் ஆஃப் ஐஸ்கிரீம்’ ஒரு மேடை நாடகம் மட்டுமன்றி, ஒழிந்த நேரத்தில் நாம் என்ன செய்கிறோம் என்பதை உணர்த்தும் ஓர் அனுபவம். ஒரு காதல் கடிதம் என்று சொன்னாலும் அது மிகையாகாது,” என்றும் அவர் கூறினார்

இந்த மேடை நாடகத்தைப் பற்றிய மேல்விவரங்களுக்கு, https://www.singaporetheatrecompany.sg/show/paradise-or-the-impermanence-of-icecream எனும் இணையப்பக்கத்தை நாடலாம்.

குறிப்புச் சொற்கள்